சினிமா கிளைமேக்ஸ் போன்ற வாழ்க்கை!



ஹீரோயினிஸம்

உங்களுக்கு இரண்டு கதைகள் சொல்லுகிறோம். என்ன படம் என்று கரெக்டாக சொல்லுங்கள் பார்ப்போம்.முதல் கதை: ஒரு பணக்கார வீட்டுப்பெண், ஏழைப்பையனை காதலிக்கிறாள். அந்த காதலுக்கு பெற்றோர் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு. குடும்பத்தை விட காதலே பெரிது என்று அப்பெண் குடும்பத்தை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறி காதலனை கைபிடிக்கிறாள். பெற்றோர் கண் முன்னாலேயே சிறப்பாக வாழ்ந்து காட்டுகிறாள்.

இரண்டாவது கதை: வாழ்க்கையில் சிரமப்பட்டு முன்னுக்கு வருகிறாள் ஒரு பெண். அவள் தேர்ந்தெடுத்த துறையில் உயரத்துக்கு செல்கிறாள். ஆனாலும், அவள் மனசுக்குள் ஓர் ஏக்கம். சிறுவயதிலிருந்தே அவளுக்கு ஒரு கனவு. தான் வளர்ந்ததும் ஆசிரியையாகி பிஞ்சுக் குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டும் என்பதே அந்த ஆசை. ஒரு நாள் தான் உயர்ந்த இடத்தை தூக்கி எறிகிறாள். ஹேண்ட்பேகை மாட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு பாடம் நடத்தப் போகிறாள்.

இரண்டு கதையுமே குடும்பப்பாங்காக ஃபீல்குட்டாக இருக்கிறது இல்லையா? இது சினிமா கதை கிடையாது. இரண்டுமே தேவயானியின் சொந்தக் கதை.தேவயானி, கொங்கணி சமுதாயத்தில் வடநாட்டில் பிறந்தவர். இந்தி, பெங்காலி, மலையாளமெல்லாம் நடித்துவிட்டு கடைசியாகத்தான் தமிழுக்கு வந்தார். ‘தொட்டால் சிணுங்கி’தான் அவர் நடித்த முதல் படம்.

 ‘சிவசக்தி’ மாதிரி படங்களில் காமாசோமாவென்று நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென ‘காதல் கோட்டை’யில் நடிப்புக் கோட்டை கட்டினார். விக்ரமனின் உதவியாளரான ராஜகுமாரன் ‘நீ வருவாய் என’ படம் இயக்கும்போது நிஜத்திலேயே காதல் கோட்டையைக் கட்டினார். ராஜகுமாரன், தங்கள் காதலை கவுரவப்படுத்துவதற்காக தேவயானிக்காகவே இரண்டாவதாக இயக்கிய படம் ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’.

இருவருக்கும் காதல் உச்சத்தில் இருந்தபோது தேவயானியும் திரையுலகில் உச்சநட்சத்திரமாய் மின்னிக் கொண்டிருந்தார். லட்சங்களை சம்பாதித்துக் கொண்டிருந்தார். பணம் காய்க்கும் மரமாக இருந்த அவர் திடீரென கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று சொன்னதை குடும்பம் ஒத்துக்கொள்ளவில்லை. காதலுக்கு கடும் எதிர்ப்பு.

ராஜகுமாரன் அப்போதுதான் படங்கள் இயக்க தொடங்கியிருந்தார். ரிஸ்க் எடுத்து வீட்டை விட்டு வெளியேறி அவரை மணந்துகொண்டார் தேவயானி. பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு குழந்தைகள் பெற்று இனிமையான இல்லறத்தை நடத்தி, தன் காதலை எதிர்த்தவர்கள் முன்பாக வாழ்ந்து காட்டி விட்டார்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துவிட்டார். அவர் செய்யாத கேரக்டரே இல்லை. சொந்தமாக படங்களும் தயாரித்தார். சின்னத்திரையிலும் முத்திரை பதித்தார். சினிமாவில் இனி செய்ய என்ன இருக்கிறது என்று யோசிக்கும்போது, அவருடைய சிறுவயது ஆசையான ஆசிரியை கனவு விழித்துக் கொண்டது. புகழடைந்த ஒரு நடிகை; காருக்குள் அவர் முகம் தென்பட்டாலே சாலையில் பரபரப்பு ஏற்படும்.

இருந்தும் ஒருநாளில் தோளில் பையை மாட்டிக்கொண்டு சர்ச்பார்க் கான்வென்ட் குழந்தைகளுக்கு பாடம் நடத்த கிளம்பிவிட்டார்.தேவயானியின் இந்த துணிச்சல் வேறு எவருக்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை. சினிமாவில்தான் ஹீரோயின்கள் இப்படியெல்லாம் முடிவெடுப்பார்கள். சொந்த வாழ்விலேயே அவற்றை நடத்திக்காட்டிய நிஜ ஹீரோயின் தேவயானி.

- மீரான்