காட்டு காதல்



ஆரண்யம் விமர்சனம்

சிறியளவில் திருட்டுத் தொழிலைச் செய்பவர் ராம். அவர் செய்யும் ஒரு திருட்டை செல்போனில் படம்பிடித்து போலீஸில் சிக்க வைக்கிறார் நீரஜா. ஒரு கட்டத்தில் ராம் நல்லவர் என்பது தெரிந்ததும் அவர் மீது காதல் வெடிக்கிறது. ஆனால் போலீஸ் அதிகாரியான நீரஜாவின் அப்பா, யார் காதலித்தாலும் அவர்களைப் பிரித்துவிடும் வில்லன். மகளின் காதல் விவகாரத்தை அறியும் அப்பா, காதலன் ராமைக் கொல்ல அடியாளை அனுப்புகிறார். விஷயமறிந்த நீரஜா, ராமுடன் ஓட்டம் எடுக்கிறார். கொலைகார கும்பலிடம் சிக்கிய காதலர்களின் நிலை சுபமா, சோகமா என்பது பரபர க்ளைமாக்ஸ்.



நாயகனாக நடித்திருக்கும் ராம் இயல்பாக நடிக்கிறார். அழகு  இருக்குமளவுக்கு நீரஜாவிடம் நடிப்பு இல்லை. இளவரசு, சிங்கமுத்து, ஷாஜி என சொற்ப கேரக்டர்களே இருந்தாலும் முடிந்தளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். மொத்தப் படத்தையும் தன் கேமரா வித்தையால் கட்டிப் போட்டு சொக்க வைக்கிறார் சாலை சகாதேவன். காடுதான் களம் என்பதால் கேமிராமேனையே இயக்குனர் பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. எஸ்.ராமின் இசை பரவாயில்லை ரகம். யூகிக்க முடியுமளவுக்கு காட்சிகள் இருந்தாலும், இயக்குனர் குபேர்.ஜி காதலை ரசிக்கும்படியாகச் சொல்லி இருப்பதால் ஆரண்யத்தை ஆராதிக்கலாம்.