இதுவரை கமல் இப்படியொரு அசுர வேகத்தில் செயல்பட்டது இல்லை. ‘விஸ்வரூபம் 2’ படத்தை முடித்துள்ள அவர், அடுத்து ‘உத்தம வில்லன்’ படத்தையும் முடித்துவிட்டார். இதையடுத்து ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கான ‘பாபநாசம்’ ஷூட்டிங்கில் இருக்கிறார். இதில் அவரது துணைவி கவுதமி, மனைவி வேடத்தில் நடிக்கிறார்.

இதையறிந்த மீனா, ‘கமல் கூட மறுபடியும் நடிப்பேன்னு நினைச்சிருந்தேன்’ என்று இழுத்தார். காரணம், மலையாள ‘த்ரிஷ்யம்’, தெலுங்கு ‘த்ரிஷ்யம்’ ரீமேக் படங்களில், முறையே மோகன்லால், வெங்கடேஷ் ஆகியோரின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார் மீனா. கன்னட ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கான ‘த்ரிஷ்யா’ படத்தில் நவ்யா நாயர் நடித்திருந்தார்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘முத்து’, ‘படையப்பா’ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 3வது படம் ‘லிங்கா’. ஏற்கெனவே ‘ஜக்குபாய்’ படத்துக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டது. பிறகு ‘ராணா’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த முதல் நாளில், ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டைரக்ஷன் மேற்பார்வையை ரவிகுமார் கவனித்தார். இப்படி ரஜினிக்கும், ரவிகுமாருக்கும் நட்புப் பாலம் பலமாக இருப்பதால், அவரை வைத்து ரஜினியையும், கமல்ஹாசனையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க, பிரபல மூத்த இயக்குனர் ஒருவர் முயற்சித்து வருகிறாராம்.
எந்த விஷயத்தில் விஜய் ரஜினியைக் கடைப்பிடிக்கிறாரோ இல்லையோ, புதுப்படம் ரிலீசானால், அதை உடனே பிரத்தியேகக் காட்சியில் பார்த்துவிடும் வழக்கத்தைக் கற்றுள்ளார். தனக்கு அறிமுகமான எந்த ஹீரோவின் படமாக இருந்தாலும், அதைப் பார்த்து கருத்து சொல்கிறார். யு டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனக்குப் பழக்கமான ஹீரோ நடித்த படத்தின் டீஸர் அல்லது டிரைலரைப் பார்த்தாலும், உடனே சம்பந்தப்பட்டவருக்கு போன் செய்து பாராட்டுகிறார்.
-தேவராஜ்