ருசிக்க ருசிக்க ஓவியங்களை பகிரும் அடாஷி!



அடாஷி சைனி தனக்கு மிகவும் பிடித்த உணவையும் கலையையும் ஒன்றாக கலந்து தனித்துவமான ஃபுட் இலுஸ்ட்ரேட்டராக (Food Illustrator) இருக்கிறார். தில்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் நுண்கலை படித்து, அனிமேஷனும் பயின்றுள்ள இவர், கிராஃபிக் டிசைனராக முழு நேரம் பணியாற்றிக் கொண்டே பகுதி நேரத்தில் ஃப்ரீலான்ஸ் ஃபுட் இலுஸ்ட்ரேட்டராக (Freelance Food Illustrator) இருக்கிறார்.

‘‘என்னுடைய இளங்கலை படிப்பின் இறுதி ப்ராஜெட்டாக மாணவர்கள் அனைவரும் கமர்ஷியல் ஆர்ட் செய்ய வேண்டும் என்றார்கள். அப்போது நான் தேர்ந்தெடுத்தது உணவு சம்பந்தமான வணிகங்களை தான். அப்போதுதான் முதல் முறையாக உணவு சார்ந்த ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்.
நான் ஒரு பெரிய ஃபூடி. எனக்கு விதவிதமான உணவு வகைகளை ருசிப்பது பிடிக்கும். யாருக்கும் தெரியாத, குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பிரபலமான உணவுகளை தேடிச் சென்று சாப்பிடுவேன். ரோட்டு கடையில் தொடங்கி, பெரிய நட்சத்திர உணவகங்கள் வரை நல்ல உணவு எங்கு கிடைத்தாலும் அதன் தினசரி வாடிக்கையாளராக நான் இருப்பேன். இந்த உணவின் மீதான பிரியத்துடன் கலை மீதான எனது ஆர்வத்தையும் இணைத்து ஃபுட் கார்ட்டூனிஸ்டாக/ இலுஸ்ட்ரேட்டராக ஒரு வித்தியாசமான பாதையைத் தேர்வு செய்தேன்.

பொதுவாகவே, ஓவியர்கள் தங்களுக்குப் பிடித்த இயற்கை காட்சிகளை, கட்டிடங்களை வரைவார்கள். நான் எங்கு சென்றாலும், என்னை ஈர்ப்பது உணவாகத்தான் இருந்தது. அதனால் நான் உணவுகளை வரைய ஆரம்பித்தேன். ஆனால் நட்சத்திர ஹோட்டல் உணவுகளுடன் என் ஓவியங்கள் நின்று விடாது. தினமும் என் வீட்டில் என் அம்மா எனக்காக அன்புடன் பரிமாறும் உணவுகளில் தொடங்கி, கல்லூரியின் கேண்டீன் உணவுகள் என அனைத்து விதமான உணவு வகைகளையும் வரைவேன். ஒரு வருடம் பெங்களூரில் தங்கி வேலை பார்த்தேன். அப்போது தென் இந்திய உணவு வகைகளின் அறிமுகமும் கிடைத்தது.

லாக்டவுனில் தான் முதல் முறையாக அடாஷி டிராஸ் (atashidraws) என்ற ஓவியங்களுக்கான சிறப்பு பக்கத்தை சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்தேன். அப்போது, தில்லியைச் சேர்ந்த ஒரு குடும்பம், தங்கள் பாட்டியின் 70வது பிறந்தநாள் மற்றும் 35வது திருமண விழாவை விமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர். அதற்கு தங்கள் பாட்டியின் சமையல் ரெசிபியும் தாத்தாவின் விருப்பமான பஞ்ச் டயலாக்குகளும் அடங்கிய புத்தகத்தை பிரத்யேகமாக உருவாக்க கேட்டிருந்தார்கள்.

அதற்கான வடிவமைப்பு புதிய அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. ரெசிபி புத்தகங்கள், உணவு விளம்பரங்கள், உணவுப் பொருட்களின் லேபிள்கள், பேக்கேஜிங், புத்தக அட்டைகள், உணவக சுவரொட்டிகள், சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் விளம்பரங்கள்/பதிவுகள் எனப் பல வகையில் என் உணவு வரைபடங்களைப் பல தளங்களில் புகுத்தி வருகிறேன். இந்த வாய்ப்புகள் எல்லாம் என் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாகவே எனக்குக் கிடைத்தது. எனக்கு உணவு சார்ந்த ஓவியங்களை வரைவதில் தான் ஆர்வம். சிலர் தங்கள் படங்களை வரைந்து கொடுக்கும்படி கேட்பார்கள். ஆனால் அதை நான் மறுத்துவிடுவேன்.

வெளிநாடுகளில் இருப்பது போல, பிரத்யேகமாக உணவு ஓவியர்களுக்கு இங்கே பெரிய வரவேற்பும் வாய்ப்புகளும் இல்லை என்றாலும், கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்த துறை நிச்சயம் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது டி-ஷர்ட் டிசைன், புத்தகங்களில், உணவகங்களின் உட்புற சுவர்களில், சமையலறை அலங்காரங்களில் என எங்கும் கலை நிறைந்திருக்கும்” என்கிறார்.அடாஷிக்கு சாப்பிட எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவு சமைக்கவும் பிடிக்குமாம். “ஒரு உணவை அப்படியே வரைவது சுலபமில்லை.

அதற்கு அந்த உணவின் சுவை, மணம், சமையல் பொருட்கள், செய்முறை என அனைத்துமே தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் தத்ரூபமான அதே சமயம் ருசிக்கும்படியான ஓவியங்களை உருவாக்க முடியும். அதனால் நான் வரையும் உணவுகளை நிச்சயம் சுவைத்து அதிலிருக்கும் சமையல் பொருட்களை அறிந்துகொண்டுதான் வரைவேன். ருசியாக சாப்பிட வேண்டும் என்று விரும்புபவர்கள், நிச்சயமாக சுவையாக சமைக்கவும் செய்வார்கள். நானும் அப்படித்தான்.

எனக்கு மிகை-யதார்த்தமான ஓவியங்களை வரைவதில் விருப்பமில்லை. அப்படி தத்ரூபமாக வரைவதற்குப் பதில் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமே எனத் தோன்றும். என் ஓவியங்களில் கலையும் உணர்ச்சியும் இருக்கும். என்னுடைய தனி ஸ்டைலில் நான் மிளிர விரும்புகிறேன். அடுத்ததாக நான் ஒரு குக்-புக் உருவாக்கி வருகிறேன்.

ஒரு சர்வதேச வாடிக்கையாளருக்காகப் புத்தகத்தின் அட்டை படங்களையும், இலுஸ்ட்ரேஷனும் செய்து வருகிறேன். எனக்கு பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. தினமும் வரைய வேண்டும், தொடர்ந்து வரைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறேன்” என முடிக்கிறார் அடாஷி சைனி.

ஸ்வேதா கண்ணன்