தோழியருக்கான நட்சத்திர பலன்கள்-(நவம்பர் 1 முதல் 15 வரை)
 1. அசுவினி: எந்த நிலையிலும் மனம் தளராமல் உறுதியுடன் நின்று செயலாற்றி வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் வெற்றி ராணிகளான தங்கள் கனவுகள் யாவும் நனவாகும் பொன்னான மாதமிது. 9-ல் குரு, சனி, 7-ல் சூரியன், புதன், 6-ல் சுக்கிரன் என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் தேகம் பளிச்சிடும். பணவரவிற்கு புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடன் சுமைகளை குறைப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். சிலருக்கு உத்தியோக முயற்சி வெற்றியாகும். அரசாங்க வேலை கிட்டும் யோகமும் உண்டு. தடைபட்டு வந்த திருமணம் கூடும். புதிய சொத்துக்கள் சேரும். சிலருக்கு மகப்பேறு அமையும் யோகமுண்டு. இல்லறத்தில் இன்பம் கூடுதலாகி மகிழ்விக்கும் இனிய நேரம். ஞாயிறு அன்று கருமாரியம்மன் தரிசனம் கவலைகளைப் போக்கும். 2. பரணி: அதிகாரத்தை என்றும் வெறுக்கும் குணம் கொண்ட அன்பால் எவரையும் வசப்படுத்தும் அழகின் சொந்தக்காரிகளான வீரப்பெண்மணிகளின் திறமைகள் வெளிப்படும் மாதமிது. 2-ல் ராகு, 6-ல் சுக்கிரன், 7-ல் சூரியன், புதன், 9-ல் குரு, சனி என கிரகங்களின் சஞ்சார நிலை காணப்படுவதால் உடலில் தெம்பும், தைரியமும் கூடுதலாகும். தனவரவிற்கு பஞ்சமிராது. தாய் வீட்டின் மூலம் பண வரவிற்கு வழிகள் தோன்றும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். தம்பதிகளின் மனம் ஒன்றுபட்டு இனிமை காணும் மாதம். சனிக்கிழமை மகாவிஷ்ணுவை தரிசிக்க மங்களம் வந்து சேரும்.
3. கிருத்திகை: முன்யோசனைகளுடன், எதையும் யோசித்து செயலாற்றி வெற்றிக்கொடி நாட்டும் திறமைசாலிப் பெண்மணிகளான உங்களின் செயல் திறமைகள் வெளிப்படும் அற்புத நேரமிது. ராசியில் ராகு, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், புதன், தனஸ்தானத்தை குரு நேர்பார்வை செய்வதால் முகத்தில் பொலிவும், தெளிவும் என வளைய வருவீர்கள். பண வரவு கூடுதலாகும். சகோதரிகள் ஆதரவுக்கரம் நீட்டுவர். சிலர் புதிய வீட்டிற்கு குடிபோவீர்கள். குலதெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். ஆடை ஆபரணங்கள், புதிய சொத்துக்கள் சேரும். இல்வாழ்க்கையில் இருந்து வந்த மனவேற்றுமைகள் நீங்கும் மாதம். வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் நீங்கும்.
4. ரோகிணி: அனைவரின் உள்ளத்தையும் மகிழ்விக்கும் தன்மை கொண்ட குணசாலிப் பெண்மணிகளான தங்களின் விவேகம் பாராட்டுப்பெறும் ஓர் இனிய மாதமாய் பெருமையுடன் மலர இருக்கின்றது. தனஸ்தானத்தை குரு பார்ப்பதும், ராசியில் ராகு, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், புதன், 8-ல் குரு, சனி என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் உடல்நலம் தெளிவாகும். பணமுடை தீரும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். பிதுர் சொத்துக்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இடமாற்றம் வரலாம். புதிய பொறுப்புக்களால் பணிச்சுமைகள் அதிகரிக்கும். தடைபட்டு வந்த திருமணம் கூடிவரும். சிலருக்கு புத்திரப்பேறு பாக்கியம் வாய்க்கும். கணவன், மனைவி உறவில் புரிதல் கண்டு மகிழும் மாதமிது. சனிக்கிழமையன்று காஞ்சிபுரம் காமாட்சியைத் தரிசிக்க தடைகள் விலகும்.
5. மிருகசீரிடம்: என்றும், எப்போதும் முதல் நிலையில் நின்று செயல்புரியும் அறிவு ஜீவிப் பெண்மணிகளான உங்களின் அறிவாற்றல், பரிசுகள், விருதுகள் என வந்து சேரும் நல்ல மாதமாய் மலர உள்ளது. இம்மாத கிரக நிலைகள் சாதகமாய் சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்கும் யோசனைகள் உருவாகும். முகத்தில் தேஜஸும், பொலிவும் என தெளிவாய் தென்படுவீர்கள். மனதில் புதுவித தெம்புடன், தைரியமும் வந்து சேரும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் கூடிவருவதும் அதன்பொருட்டு உறவினர்கள் வருகையும், வீடே கலகலப்பாகும். சித்தர்கள் ஆசி கிட்டும். தம்பதிகளிடையே இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கி மகிழ்வீர்கள். செவ்வாய்க்கிழமையன்று பாலமுருகனை தரிசிக்க பாவங்கள் விலகும்.
6. திருவாதிரை: அன்பால் எவரையும் வெல்லும் மதிநுட்பமும், தன்சுயமுயற்சியினால் வாழ்வில் வெற்றிப்படியை எட்டிப்பிடிக்கும் வீரப்பெண்மணிகளான உங்களை பெருமைப்படுத்தும் ஓர் நல்ல மாதமாய் இம்மாதம் மலர உள்ளது. 4-ல் சுக்கிரன், 5-ல் சூரியன், புதன், ராசியை குரு பார்ப்பதால் குருச்சந்திர யோகமாய் சஞ்சரிப்பதால் தேக பலம் கூடுதலாகும். தனவரவில் இருந்து வந்த தடைகள் விலகி சரளமான பணவரவு தொடங்கும். உடல்பலம், மனநலம் தெம்பாகும். சிலருக்கு கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, கூடுதல் பொறுப்புக்கள் வந்து சேரும். இல்வாழ்க்கையில் மனபேதங்கள் நீங்கி ஒற்றுமையாவீர்கள். ஞாயிறு அன்று கருட பகவானைத் தரிசிக்க கவலைகள் தீரும்.
7. புனர்பூசம்: நேர்மையின் மறு உருவமும், காரியம் முடிப்பதில் நல்ல சாமர்த்தியமும் ஒருங்கே அமையப்பெற்ற அதிர்ஷ்டசாலிப்பெண்மணிகளான உங்களின் எண்ணங்கள் ஈடேறும் நல்ல மாதமிது. 4-ல் சுக்கிரன், 5-ல் சூரியன், புதன், 7-ல் குரு, சனி, ராசியை குரு பார்ப்பதால் தனலாபம் உண்டாகும். தேகநலனில் நல்ல அபிவிருத்தி கிட்டும். தாய் வீட்டின் மூலம் அனுகூலம் பெறுவீர்கள். மனதில் புதுவித தெம்பும், தைரியமும் உண்டாகும். சுபநிகழ்வுகளில் பங்கு பெறுவீர்கள். புதிய வங்கிக்கணக்கை ஆரம்பிக்கும் எணணம் தோன்றும். மகான்கள் தரிசனம் கிட்டும். ஒரு சிலருக்கு அரசாங்க வேலை வாய்ப்பு கிட்டும். கணவரின் அன்பைக்கண்டு மனம் நெகிழ்ந்து போவீர்கள். திங்கள் அன்று வரதராஜப்பெருமாளை தரிசிக்க வாழ்வு வளமாகும்.
8. பூசம்: பரந்த மனப்பான்மையும், விசாலமான நல்ல குணமும் எவரிடமும் தன்மையுடன் பழகும் குணமும் கொண்ட பண்பான பெண்மணிகளான தங்களின் கனவுகள் நனவாகும் நேரமிது. 3-ல் சுக்கிரன், 4-ல் சூரியன், புதன், 5-ல் கேது, 6-ல் குரு, சனி, தனஸ்தானத்தை குரு பார்ப்பதால் சரளமான பணவரவிற்கு வழிகள் தென்படும். உடல் ஆரோக்கியம், தேக சௌக்கியம் தெளிவாகும். சகோதரர்களால் அனுகூலம் பெறுவீர்கள். தாயாரின் அன்பால் மகிழ்ந்து போவீர்கள். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் கூடிவருவதும், அதன்பொருட்டு விருந்தினர் வருகையும் அதிகரிக்கும். வீடே கலகலப்பாய் மகிழ்வாகும். இல்வாழ்க்கையில் இருவரிடையே இருந்த வேறுபாடுகள் மறையும். சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை தரிசிக்க ஆறுதல் கிட்டும்.
9. ஆயில்யம்: முன்யோசனைகள் அதிகம் கொண்ட மதிநுட்பம் பொருந்திய திறமைசாலிப் பெண்மணிகளான உங்களின் செயல்திறன் பாராட்டு பெற்று உயர்ந்து நிற்கும் அற்புதமான மாதமிது. குடும்பஸ்தானத்தை குரு பார்வை செய்வதும், 3-ல் சுக்கிரன், 4-ல் சூரியன், புதன், 5-ல் கேது, 6-ல் குரு, சனி என கிரக சஞ்சார நிலை தென்படுவதால் எடுத்த செயல்கள் யாவும் வேகமாய் முடியும். தேகநலம் தெம்பாகும். பண வரவு அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் ஆதரவு பெறுவீர்கள். தெய்வ தரிசனங்கள் கிட்டும். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்கள் சேரும். சிலருக்குத் திருமணம் கூடும் நேரமுண்டு. இல்லத்தில் ஏற்படும் இனிய நிகழ்வினால் மனம் ஒன்றுகூடுவீர்கள். வெள்ளிக்கிழமையன்று மீனாட்சியை தரிசிக்க வெற்றிகள் கிட்டும்.
10. மகம்: பொதுநலத்தொண்டு செய்வதில் மிகுந்த ஆர்வமும், சுயகாரியத்தில் கண்ணாய் செயல்பட்டு வெற்றி வாகை சூடும் வீரமங்கைகளான தங்களின் திறமைகட்கு பரிசுகள், விருதுகள் வந்து மகிழ்விக்கும் நேரமிது. ராசியை குரு பார்ப்பதும், 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், புதன், 5-ல் குரு, சனி என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் இதுநாள் வரையில் இழுபறியாய் இருந்து வந்த செயல்கள் யாவும் வேகமாய் முடியும். முகம் வசீகரமாகும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பணமுடை தீரும். புதிய சொத்துக்கள் வந்து சேரும். மகான்களின் ஆசி கிட்டும். தடைபட்ட திருமணம் கூடும். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப்பேசி மகிழும் மாதமிது. சனிக்கிழமை லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்வதால் சலனங்கள் தீரும்.
11. பூரம்: கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதை தாரக மந்திரமாய்க் கொண்டு எடுத்த செயலை இனிதே முடிக்கும் செயல்ராணிகளான உங்களின் கனவுகள் பலிதமாகும் நேரமிது. ராசியை குரு தன் சிறப்புப் பார்வையான 9-ம் பார்வையினால் பார்வை 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், புதன், அத்துடன் புதன், சுக்கிரன் பரிவர்த்தனை யோகம், 5-ல் குரு, சனி என கிரக நிலை சாதகமாய் சஞ்சரிப்பதால் உடல்நலம் பொலிவாகும். தனவரவில் முன்னேற்றமான நிலை காட்டும் நட்பு வட்டம் கை கொடுக்கும். தாயாரின் மூலம் சிலருக்கு பண வரவு கிட்டும். வீடு, வாகனம் என புதிய சொத்துக்கள் வந்து சேரும் நேரம். கணவரின் மனதைப்புரிந்து செயல்படும் பொன்னான நேரம். வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமி தரிசனம் மங்களம் பெருகும்.
12. உத்திரம்: நட்பிற்கு இலக்கணமாய்த்திகழும் பரந்த மனப்பான்மையும், தன் காரியத்தில் எப்போதும் கண்ணும், கருத்துமாய் செயல்பட்டு வெற்றி நடைபோடும் திறமைசாலிப் பெண்மணிகளான உங்களின் உள்ளம் குளிரும் மாதமிது. ராசியில் சுக்கிரன், 2-ல் சூரியன், புதன், 4-ல் குரு, சனி, சுக்கிரன், புதன் பரிவர்த்தனையால் சஞ்சாரம். எனவே எடுத்த செயல்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். தேகம் பொலிவடையும். தனவரவு அதிகரிப்பதால் மனம் மகிழ்வீர்கள். நட்பு வட்டம் ஆதரவு தரும். புதிய தொழில் தொடங்க யோசனைகள் உருவாகும். தந்தையின் ஆதரவினால் புதிய சொத்துக்கள் சேரும். இல்வாழ்க்கையில் இருந்து வந்த மனவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கிட்டும். செவ்வாய் அன்று ஷண்முகரை தரிசிக்க எதிரிகள் தலை குனிவர்.
13. அஸ்தம்: உழைப்பே உயர்வு தரும் என்னும் வாசகத்தின்படியாய் கண்ணும், கருத்துமாய்ப் போராடி வாழ்வில் உன்னதமான நிலையை எட்டிப்பிடிக்கும் போராளிப்பெண்மணிகளான உங்களின் மனம் மகிழும் நற்செய்திகள் வந்து சேரும் அற்புதமான மாதமிது. ராசியில் சுக்கிரன், 2-ல் சூரியன், புதன், 4-ல் குரு, சனி என கிரகங்களின் சஞ்சாரம் காணப்படுவதால் எச்செயலிலும் வேகம் காட்டுவீர்கள். புதிய ெதாழில் தொடங்கும் எண்ணம் தோன்றும். தேகம் பளிச்சிடும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என மகிழும் தருணம். சிலரின் தடைபட்டு வந்த திருமணம் முடிவாகும். கணவன், மனைவி உறவில் அன்பும், பாசமும் மேலோங்கும் நேரம். செவ்வாய் அன்று வைத்தீஸ்வரரை தரிசனம் செய்து வந்தால் பிணிகள் விலகி ஓடும்.
14. சித்திரை: சரளமான பேச்சுத்திறமையும், மதிநுட்பத்துடன் அறிவாற்றலும் அதிகம் கொண்ட உங்களின் பொறுமையான செயல் திறன் பாராட்டு பெறும் ஒரு நல்ல மாதமாய் மலரும் நேரம். ராசியில் சூரியன், புதன், 2-ல் கேது, 3-ல் குரு, சனி, 6-ல் செவ்வாய் என கிரக சஞ்சார நிலை தென்படுவதால் தேக நிலை தெளிவாகும். பணவரவு சரளமாகும். சகோதரர்களின் மூலம் நன்மைகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். திருமண நிகழ்வுகள் இல்லத்தில் கூடிவரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் அதிகரிக்கும் நேரம். தம்பதிகளிடையே மனஒற்றுமை அதிகரிக்கும் நல்ல மாதம். செவ்வாய் அன்று சுப்பிரமணியரை தரிசனம் செய்தால் சுபிட்சம் வந்து சேரும்.
15. சுவாதி: சிரித்துப்பேசியே காரியம் சாதிக்கும் சமர்த்தும், கலைகளில் நல்ல ஆர்வமும் எதையும் உடனே செய்து முடிக்கும் அபாரமான திறமைசாலிகளான உங்களின் மனம் மகிழும் மாதமிது. ராசியில் சூரியன், புதன், 12-ல் சுக்கிரன், 2-ல் கேது, 3-ல் குருவும், சனியும், 8-ல் ராகு என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் நீண்ட நாட்களாய் தடைபட்டு வந்த செயல்கள் முடிவுக்கு வரும். கலைத்துறையினர் மனம் மகிழும் நற்செய்திகள் வரும். பணமுடை தீரும். நட்பால் அனுகூலம் வந்து சேரும். சிலர் வீடு மாற்றம் செய்வர். பழைய வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். கடன் சுமைகள் தீரும். சிலருக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவர். புதிய பொறுப்புக்கள் அதிகரிக்கும். இல்வாழ்க்கை இருவரின் மனதிலும் நல்வாழ்க்கையாய் அமையும் நேரம் இது. சனிக்கிழமை கருட தரிசனம் செய்தால் காரியங்கள் எதுவாயினும் வெற்றியாகும்.
16. விசாகம்: தனித்திறன் கொண்ட அறிவுப் பெண்மணிகளான தங்களின் தெளிவான மதிநலத்தால் வெற்றிவாய்ப்புகளை தேடி வந்து அசத்தும் ஓரு நல்ல மாதமிது. ராசியில் சூரியன், புதன், 2-ல் கேது, 3-ல் குரு, சனி, பாக்கியஸ்தானத்தை குரு நேர்பார்வை செய்வதால் எதிலும் வேகம் காட்டுவீர்கள். தடைபட்டு வந்த செயல்கள் வேகமாய் முடியும். பிதுர் சொத்துக்களில் இருந்துவந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். அதன்மூலம் ஓரு தொகை கைக்கு வந்து சேரும். உத்தியோக முயற்சிகளில் வெற்றி ஏற்படும். சிலருக்கு மகப்பேறு வாய்க்கும். சித்தர்கள் தரிசனம் கிட்டும். தாம்பத்திய வாழ்வில் தனி இன்பம் காணும் இனிய மாதமிது. வியாழன் அன்று குருபகவானை தரிசிக்க மனக்குறைகள் தீரும்.
17. அனுஷம்: தெளிவான தொலைநோக்குப் பார்வையும், எவருக்கும் உதவி புரியும் உத்தம குணமும், பிறரின் மனதைப்புரிந்து அதற்கேற்ப நடக்கும் விவேகப்பெண்மணிகளான தங்களின் அறிவுத்திறன் பாராட்டையும், பரிசையும் வெல்லும் மாதமாய் மலரக் காத்திருக்கின்றது. 2-ல் குரு, சனி, ராசியாதிபதி செவ்வாய் 5-ல், 7-ல் ராகு, ஜீவனஸ்தானத்தை குரு பார்ப்பதால் கேட்டது கிடைக்கும். தொட்டது துலங்கும் நேரம். எங்கும் வெற்றி எனப்பாடத்தோன்றும். முகம் பளிச்சிடும். மனம் தெளிவடையும். தனவரவு இரட்டிப்பாகும். புதிய வீடு, வாகனம் என பல சொத்துக்கள் சேரும் நேரம். சிலருக்கு தடைபட்டு வந்த திருமணம் கூடும். இல்வாழ்க்கையில் இன்பம் வந்து சேரும் இனிமையான நேரம். சனிக்கிழமையன்று விஷ்ணு தரிசனம் விருப்பங்கள் நிறைவேறும்.
18. கேட்டை: இயற்கையை ரசிக்கும் கலையம்சம் பொருந்தியவர்களும், கற்பனை வளம் கைவரப்பெற்ற கலை ராணிகளான தங்களின் கை வண்ணம் பெருமை பெறும் மாதமாய் இம்மாதம் மிக்க மகிழ்வுடன் அமைய உள்ளது. ராசியில் கேது உச்சம், 2-ல் குரு, சனி, 5-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் என கிரக சஞ்சார நிலை தென்படுவதால் எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். பண வரவில் முன்னேற்றம் வரும். சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல பெயர் வந்து சேரும். புதிய பொறுப்புக்கள் கூடுதலாகி மகிழ்வீர்கள். தாம்பத்திய வாழ்வில் இருந்துவந்த மன மாறுபாடுகள் நீங்கி மகிழ்வு வந்து சேரும். செவ்வாய்க் கிழமையன்று ராகு கால நேரம் 3.00 to 4.30 மணிக்குள்ளாக திருத்தணி அடுத்த மத்தூர் மகிஷாசூரமர்த்தினியை தரிசிக்க திருமண வரம் கை கூடும்.
19.மூலம்: சுயமுயற்சியினால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எட்டிப்பிடிக்கும் அறிவு ஜீவிப்பெண்மணிகளான தங்களின் மதிநுட்பம் பாராட்டு பெறும் ஓர் நல்ல மாதமாய் இம்மாதம் மலர இருக்கின்றது. ராசியில் குரு, சனி, 4-ல் செவ்வாய், 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் வெற்றி மேல் வெற்றி உங்களைத் தேடி வரும். எதிரிகள் தலை குனிவர். தெய்வத்தின் அனுக்கிரகம் கிட்டும். புதிய வீடு, வாகனம் என சொத்துக்கள் சேரும். ஆன்மிகப் பயணங்கள் செல்வீர்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் கூடிவரும். உறவினர்கள் வரவால் வீடே கலகலப்பாகும். இல்வாழ்வில் இன்பங்கள் கூடுதலாகி நெஞ்சை நிறைவடையச் செய்யும் மாதமிது. திங்கட்கிழமையன்று அண்ணாமலையார் தரிசனம் அனைத்து செயலும் நலமாகும்.
20. பூராடம்: சிரித்து செயலாற்றும் திறமைகள் கைவரப்பெற்ற அதிர்ஷ்டசாலிப்பெண்மணிகளான தங்களின் நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும் ஓர் இனிய மாதமிது. ராசியில் குரு ஆட்சி, சனி நட்பு, 4-ல் செவ்வாய், 6-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் முகம் வசீகரமாகும். பண வரவு கூடுதலாகும். உத்தியோகத்தில் புதிய பதவி உயர்வு, சம்பள உயர்வு என வந்து மனதை மகிழ்விக்கும். சிலருக்கு புதிய வீட்டிற்கு குடிபோகும் யோகமும் உண்டு. தடைபட்டு வந்த திருமணம் கூடிவரும். தாம்பத்திய வாழ்வில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழும் நேரம். வியாழக்கிழமையன்று சீரடி பாபாவை தரிசிக்க சிறப்புக்கள் வரும்.
21. உத்திராடம்: உயர்வான எண்ணங்களுடன், அனைவருக்கும் உதவி செய்யும் பரந்த மனப்பான்மையும் கொண்ட உத்தமப் பெண்மணிகளான தங்கள் உள்ளம் மகிழும் நற்செய்திகள் வந்து மனதை நிறைவடையச்செய்யும் நல்ல மாதமிது. 3-ல் செவ்வாய், 5-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன் என கிரகங்களின் சஞ்சார நிலை காணப்படுவதால் மனதில் தெளிவு, நிம்மதி பிறக்கும். பண வரவில் முன்னேற்றம் தென்படும். சகோதரர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். நீண்ட நாட்களாய் தடைபட்டு வந்த செயல்கள் முடிவுறும். சிலருக்கு அரசாங்க வேலை கிட்டும். மகப்பேறு கிட்டும் யோகமும் உண்டு. இல்லறத்தில் இருந்துவந்த சிக்கல்கள் விலகி நல்லறமாய் அமையும் மாதம். ஞாயிறு அன்று கபாலீஸ்வரர் (மயிலை) தரிசிக்க கவலைகள் தீரும்.
22. திருவோணம்: பரந்த மனப்பான்மையுடன் தொண்டு உள்ளமும் சேர்ந்த எவருக்கும் ஓடிப்போய் உதவி புரிவதில் உங்களுக்கு நிகர் நீங்களே எனும்படி வாழும் தியாகப் பெண்மணிகளான உங்கள் கனவுகள் செயல் வடிவம் பெறும் ஓர் இனிய மாதமிது. 3-ல் செவ்வாய், 5-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன் என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் உங்களின் காட்டில் பண மழைதான் போங்கள். உடல்நலம் தெளிவாகும். பண வரவு இரட்டிப்பாகும். சகோதரிகளால் நன்மை கிட்டும். ஆன்மிகப் பயணங்கள் செல்வீர்கள். பிதுர் சொத்துக்களால் நன்மைகள் கிட்டும். கலைத்துறையினரின் கனவுகள் நனவாகும். திருமண வாழ்க்கையில் ஓர் தனி இன்பம் கிட்டும் இனிய மாதமிது. வெள்ளிக்கிழமையன்று கருமாரியை வழிபட கவலைகள் தீரும்.
23. அவிட்டம்: அனைவரின் உள்ளத்தையும் புரிந்துகொண்டு செயல்படும் பொறுமைசாலிப் பெண்மணிகளான உங்களின் கலைத்திறமைகள் அனைவராலும் பாராட்டுப் பெறும், பரிசுகள் வந்து சேரும் ஓர் நல்ல மாதமாய் அமைய இருக்கின்றது. தனஸ்தானத்தில் செவ்வாய், 4-ல் ராகு, 8-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், புதன் என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் எடுத்த செயல்கள் யாவும் வெற்றியாகும் பொன்னான நேரம். தனவரவில் முன்னேற்றம் காண்பீர்கள். மனதில் தெம்பும், உற்சாகமும் பிறக்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். சுபமங்கள நிகழ்வுகள் கூடிவரும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். இல்லற வாழ்க்கையில் மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை வந்து சேரும். செவ்வாய்க்கிழமையன்று காளிகாம்பாள் தரிசனம் கவலைகள் தீரும் நேரம்.
24. சதயம்: எந்தச் சூழ்நிலையிலும் மனம் தடுமாறாமல் மனஉறுதியுடன் நிமிர்ந்து நின்று எடுத்த செயலை வெற்றியுடன் செய்து முடிக்கும் வெற்றியின் நாயகிகளான உங்கள் மனம் மகிழும் நல்ல மாதமிது. 2-ல் செவ்வாய், 4-ல் ராகு, 8-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், புதன் 11-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் மனம், முகம் தெளிவடையும். பொலிவும், வசீகரமும் உண்டாகும். உத்தியோக முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தாயாரின் பூரண அன்பைப் பெறுவீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். சித்தர்களின் தரிசனம் கிட்டும். புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்கள் என சொத்துக்கள் சேரும். கணவன், மனைவி இருவரும் மனம் ஒன்றாகி இன்புறும் நேரம். திங்கட்கிழமையன்று சிவபெருமான் தரிசனம் சிறப்பைத்தரும்.
25. பூரட்டாதி: அறிவின் சிகரங்களும் என்றுமே கல்வியில் உயர்நிலையை அடைய ஓயாமல் பாடுபட்டு வெற்றிக்கொடி நாட்டும் விவேகப்பெண்மணிகளான உங்களின் எண்ணங்கள் செயல் வடிவம் பெறும் ஓர் பொன்னான மாதமிது. 2-ல் செவ்வாய், 4-ல் ராகு, 8-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், புதன், 11-ல் குரு, சனி என கிரக சஞ்சார நிலை தென்படுவதால் தேக நலனில் முன்னேற்றமும், மலர்ச்சியும், முகப்பொலிவும் தென்படும். ஞானிகள் தரிசனம் கிட்டும். பழைய வீட்டை புதிதாய் அலங்கரிப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். தாய் வீட்டின் மூலம் அன்பும், ஆதரவும் கிட்டும். சிலருக்கு திருமணம் முடியும் நேரம். கணவரின் அன்பைக்கண்டு மகிழ்ந்துபோகும் இனிய நேரம். திங்கட்கிழமையன்று காமாட்சியை சேவிக்க காரியம் கைகூடும்.
26. உத்திரட்டாதி: பிறர் மனதைக் கவரும் தனித்திறமையும், என்றும் எச்செயலையும் யோசித்து மதிநுட்பத்துடன் செயல் புரியும் இனிய வார்த்தைகளின் சொந்தக்காரிகளான தங்கள் உள்ளம் மகிழும் மாதமிது. ராசியில் செவ்வாய், 2-ல் குரு பார்வை, 7-ல் சுக்கிரன், 8-ல் சூரியன், புதன், 10-ல் குரு, சனி என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் தேகம் பளிச்சிடும். தனவரவு அதிகரிக்க புதிய தொழில் தொடங்க யோசிப்பீர்கள். மனதில் தைரியமும், தெம்பும் கூடி வளைய வருவீர்கள். குலதெய்வ வழிபாடுகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சிலருக்கு மகப்பேறு கிட்டும். கணவன், மனைவியிடையே மனம் விட்டுப் பேசி மகிழும் தருணமிது.
27. ரேவதி: அனைவராலும் பாராட்டுப்பெறும் அறிவுத்திறமையும், அபாரமான செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற தங்களின் சாதனைகள் வெளி உலகினரால் பாராட்டு பெறும் இனிய மாதமிது. 7-ல் சுக்கிரன், 8-ல் சூரியன், புதன் என கிரக சஞ்சாரம் தென்படுவதால் உடல்நலம் மேன்மையாகும். பண வரவை அதிகரிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். மனதில் சந்தோஷம் வந்து சேரும். மகான்களை தரிசிப்பீர்கள். மக்களின் கல்வி முன்னேற்றம் மனதை மகிழ்விக்கும். தடைபட்ட திருமணம் கைகூடும். இல்லற வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வந்து சேரும் நேரம். புதன்கிழமை லட்சுமி நரசிம்மரைத் தரிசிக்க லட்சியங்கள் நிறைவேறும்.
ஜோதிடமணி வசந்தா சுேரஷ்குமார்
|