வாசகர் பகுதி
Fruit Pack
பழங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அழகுக்கும்தான். பலவகை பழ ‘பேக்’களை பயன்படுத்தி சருமத்தை, உடலை, கூந்தலை அழகாக்கும் ரகசியம் இதோ...
 * நன்றாக தெளிந்த தர்பூசணி ஜூஸ் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். அதை ஐஸ்க்யூப் டிரேயில் ஊற்றி வைக்கவும். ஐஸ் கட்டியானதும் அதை எடுத்து முகம், கை, கால் கண்களில் ஒற்றி எடுக்க, சொரசொரப்பு நீங்கி சருமம் மிருதுவாவதுடன் நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
* வாழைப்பழம், தர்பூசணி, பப்பாளி, உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் இவற்றை சிறு துண்டுகளாக வெட்டி அதை சிறு மஸ்லின் துணியில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின் அதை எடுத்து கண்களுக்கு மேல் சிறிது நேரம் வைத்தால் புத்துணர்ச்சி ஏற்படும். உருளைக்கிழங்கு, வெள்ளரி நன்றாக ப்ளீச் செய்து குளிர்ச்சியைக் கொடுக்கும். இமைகளில் முடி உதிர்வதும் நிற்கும்.
* கமலா ஆரஞ்சு பழம் ஒன்றை தண்ணீர் விடாமல் அரைத்து ஜூஸாக்கவும், மெல்லிய காட்டன் துணியால் ஜூஸைத் தொட்டுத் தொட்டு முகத்தில் ஒற்றி எடுக்கவும். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தழும்புகள் மறைவதுடன் நல்ல கலரையும், பளபளப்பையும் தரும்.
* ஆரஞ்சு பழத்தின் தோலை வீணாக்காமல், வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரில் வெந்தயத்தூளை சேர்த்து தலையை அலச பேன், பொடுகு, அரிப்பு நீங்கி கூந்தல் பளபளப்பாகும்.
* கொட்டை எடுத்த 2 பேரீச்சம்பழத்தை அரைத்து தர்பூசணி ஜூஸ் கலந்து முகத்தில் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவினால் ‘டல்’லான முகம் பொலிவாகும்.
* நெல்லிக்காய் ஜூஸ், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் தலா 1 கப் எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சி, ஓசை அடங்கியதும் இறக்கவும். இந்தத் தைலத்தை தலைக்கு தேய்த்து சீயக்காய் போட்டு அலசினால், வறட்சியைப் போக்கி, கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு நரை முடியையும் தடுக்கும்.
* 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பவுடர், மாசிக்காய் பவுடர் மற்றும் அன்னாசிப்பழ சாற்றை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்து கழுவி வர சருமம் பளிச்சென்றாகும்.
- மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் டிராகன் பழம்!
*டிராகன் பழம் பலவித நன்மைகளைக் கொண்ட பழம். உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும்.
*விட்டமின் ‘சி’யின் அளவு அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
*விட்டமின் ‘சி’. செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ-ராடிக்கல் எனும் அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது. இதனால் இதயநோய், புற்றுநோய் போன்றவை தடுக்கப்படுகின்றன.
*விட்டமின் பி1, பி2, பி3 ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.
*4நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், குடல் இயக்கங்கள் சீராக்கப்படுவதால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பது மட்டுமில்லாமல் குடல் எரிச்சல், குடல் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
*கரோட்டின், புற்றுநோய்க்கு எதிரான குணங்களை வெளிப்படுத்துகிறது. கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது.
*சோர்வாக இருக்கும்போதும், அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும்போதும், பருவநிலை மாற்றத்தால் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போதும், புற்றுநோய்க்கான அறிகுறிகள் தோன்றும்போதும் இந்தப் பழத்தை உட்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
- வத்சலா சதாசிவன், சென்னை.
|