நிஜமான பரியனும் ஜோவும்



- இயக்குநர் மாரி செல்வராஜ், திவ்யா

சமூகத்தில் புரையோடி கிடக்கும் சாதியும் அதனால் கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறையும்தான் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின்  அடிப்படைக் கரு. ஆழமான உரையாடலை நேர்மையான திரை மொழியில் பேசியிருக்கிறார் எழுத்தாளரும், அறிமுக இயக்குநருமான மாரி செல்வராஜ்.  ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வலிமையான உரையாடலை தோற்றுவித்திருக்கிறது. தன்னுடைய சிறுகதைகள் மூலம் நம்முடன் உரையாடி  வந்தவர் திரைமொழியில் பேச முடிவெடுத்தது ஏன் என்பது குறித்து மாரி செல்வராஜிடம் பேசினேன்.

“எழுத படிக்கத் தெரியாத அம்மா, அப்பாவிற்கு கடைக்குட்டிப்பையன் நான். கல்வியை நம்பக்கூடிய ஒரு குடும்பம். சனி, ஞாயிறு வேலைக்கு  சென்றால்தான் மற்றவர்களை படிக்க வைக்க முடியும். அண்ணனும், அக்காவும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் நாங்கள் தீவிரமாக உழைக்க  வேண்டி இருக்கும். அவர்கள் படித்து எங்களைப் படிக்க வைத்தனர். நிலமற்ற ஒருவராக, உழைப்பை மட்டுமே முதலீடாக செலவு செய்து அப்பா  எங்களைப்படிக்க வைத்தார். அப்பாவின் வறுமையை புரிந்து கொண்டு அனைவரும் படித்து முடித்தனர்.

இப்போது ஓர் அண்ணன் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார், இன்னொரு அண்ணன் தாசில்தாராக இருக்கிறார். அக்கா வங்கியில் பணிபுரிகிறார்.  எனக்கு கல்லூரி நாட்களில் ஏற்பட்ட பிரச்னைகளால், அங்கு வாழ முடியாத சூழலில் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன். சென்னையில் தனியார் துணிக்  கடையில் வேலை பார்த்தேன், கடற்கரையில் படுத்துக் கிடந்தேன், என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் சுற்றித் திரிந்தேன். அப்போது  ‘கற்றது தமிழ்’ படத்தின் அலுவலகத்திற்கு உதவியாளர் தேவை எனக் கேள்விப்பட்டு அங்கு சென்று வேலைக்கு சேர்ந்தேன்.

அலுவலக உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் ராம் சார் ஒரு முழு இரவு என்னோடு பேசினார். என்னை பற்றி  முழுவதும் தெரிந்து கொண்டார். மறுநாள் காலையில் என்னை ‘கற்றது தமிழ்’ படத்தோட உதவி இயக்குநராக மாற்றிவிட்டார். ‘கற்றது தமிழ்’  படத்தில் வேலை பார்க்கும்போதே என்னுடைய வாழ்க்கை மாறத் துவங்கிவிட்டது. ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை ஒரு படைப்பாளியாக  உருவாக்கினார். வாசிப்பு அதிகமாயிற்று. எழுதுவதும் அதிகமானது. கவிதைகள் எழுதுவது, சிறுகதைகள் என வாழ்க்கை வேறு வடிவம் பெற்றது.

அதன் அடிப்படையில் என் வாழ்க்கையின் ஊடாக பயணிக்கக்கூடிய ஒரு கேரக்டர்தான் ‘பரியேறும் பெருமாள்’. நான் சொல்ல நினைத்த என்னுடைய  வலிகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து ஒரு தொடர் எழுதினேன். அந்த எழுத்தின் வீரியம் மக்களிடம் போய் சேர்ந்தது. எழுதும்போதே இந்தத் தொடரை  உதவி இயக்குநர்தான் எழுதுகிறார் என்று வாசகர்கள் அறிந்து கொண்டனர். சினிமாவாக எடுக்க முடியாது என்று நான் நினைத்து எழுதியதை வாசகர்கள்  சினிமாவாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்றனர். சினிமாவாக கொண்டு சென்றால் இன்னும் பல பேருக்கு என்னுடைய கேள்விகள் போய் சேரும்  என்று தோன்றியது.

என்னுடைய வலிகளை, கேள்விகளை கடத்தியே ஆக வேண்டும் என்கிற தேவை எனக்கு எழுந்தது. ராம் சாரும் அதைத்தான் விரும்பினார். என்னுடைய  எழுத்து சினிமாவாக வடிவம் பெரும்போது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வி எனக்கு எழுந்தது. அப்படி உருவானதுதான்  ‘பரியேறும் பெருமாள்’.‘தரமணி’, ‘பேரன்பு’ படங்களில் வேலை பார்த்துக்கொண்டே கதை எழுதி முடித்தேன். ராம் சாரை சந்திக்க  வருகிறவர்களிடம் கதை சொல்லுவேன். ராம் சாரும் என்னுடைய கதையை தன்னை சந்திக்க வருகிறவர்களிடம் சொல்லுவார்.

கதை கேட்கிறவர்கள் எல்லோருக்கும் கதை பிடித்திருந்தது. இதற்கிடையில் பா.இரஞ்சித் அண்ணன் அடிக்கடி என்னுடைய எழுத்துகளை படித்துவிட்டு  பாராட்டுவார். நீலம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நேரம் அது. என்னுடைய கதை பா.இரஞ்சித் அண்ணனுக்கு பிடித்துவிட்டது. உடனே படம்  எடுப்பதற்கான வேலை நடைபெற்றது. ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும் இருந்ததால் கதை எழுதுவதற்கு சிரமப்படவில்லை, படம் எடுப்பதற்கும்  சிரமப்படவில்லை. எழுத்தாளராக இருந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியதால் இந்தப் படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களின்  தரப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தப் படத்தில் பரியன் மட்டும் கதாநாயகன் கிடையாது. எல்லா கதாபாத்திரங்களின் தரப்பையும் நான் உணர்ந்திருந்தேன். படத்தில் வரும் எல்லா  கதாபாத்திரங்களும் சரியான புரிதல் இல்லாமல், கொடுக்கப்பட்ட வாழ்க்கையை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அந்த வாழ்க்கை முறையை மக்கள்  பார்க்க வேண்டும். அது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இந்தப் படத்தினுடைய அரசியல். திருமணத்திற்கு முன்பு எனக்கு இரவு  இல்லை, பகல் இல்லை, சாலைகள் முடிவற்றதாக இருந்தன. கண்மூடித்தனமான வாழ்க்கையாக இருந்தது.

நிறைய கதை சொல்லக்கூடிய,  நிறைய பேசக்கூடிய ஆளாக நான் இருந்தேன். திருமணத்திற்கு முன்பு நான் பேசுவதை கேட்கக்கூடிய நபர்களை நான்  தேடித் தேடி அலைந்தேன். அப்படி எனக்கு கிடைத்தவர்தான் திவ்யா. திவ்யா கதை கேட்கக்கூடியவராக இருந்தார். என்னுடைய எழுத்துகளின் தீவிர  வாசகியாக எனக்கு அறிமுகமானவர். கடிதங்கள் மூலம், மின் அஞ்சல் மூலம், தொலைபேசி மூலம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நாள்  கோயம்புத்தூர் சென்றுகொண்டிருந்தேன். சேலத்தை கடக்கும்போது நான் அமர்ந்திருந்த ரயில் பெட்டியின் கம்பார்ட்மென்ட் எது எனச் சொன்னேன்.

என்னை சந்திக்க வந்தார். 3 நிமிடங்களே பேசக் கிடைத்தன.  தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொடுத்தார். இப்படிதான் எங்களுடைய முதல் சந்திப்பு  நடந்தது. திவ்யா, திவ்யாவின் அம்மா, தங்கை இவர்கள் மூன்று பேரும் அன்பால் கட்டமைக்கப்பட்ட வாசிப்பு நிறைந்த உலகத்தில் வாழ்ந்து  கொண்டிருப்பவர்கள். பயணம், கலைகள் மீது ஆர்வம் என  இப்படி தங்களுக்கென தனி உலகத்தை உருவாக்கிக்கொண்டவர்கள். திவ்யா பேச்சாளராக  இருந்தார். திராவிட இயக்க மேடைகளில் பேசி கலைஞரிடம் விருது வாங்கி இருக்கிறார்.

திவ்யாவிற்கு அவருடைய அம்மா முழு சுதந்திரத்தை கொடுத்திருந்தார். எங்ளுடைய காதலைத் தெரிவித்தோம். இருவரும் ஒரு நிலைக்கு வரவேண்டும்  என்றார். அதற்காக திவ்யாவை தயார்படுத்தினார். எங்களுடைய காதலைத் தெரிவித்து 7 ஆண்டுகள் காத்திருந்தோம். இந்த 7 ஆண்டு மிகவும்  பக்கபலமாக திவ்யாவின் குடும்பம் எனக்கு இருந்தது. திவ்யா கடுமையாக படித்து முதல் டெட் தேர்விலே தேர்வாகி 23 வயதில் அரசுப் பள்ளியில்  பணிக்குச் சேர்ந்துவிட்டார். திவ்யா தன்னுடைய காதலுக்காக தன் கடமையை செய்துவிட்டார்.

என்னுடைய காதலுக்கான கடமையை நான் செய்வது என்பது படம் எடுப்பதுதான். திருமணம் முடிந்த சில நாட்களிலே எனக்கும் படம் எடுப்பதற்கான  வாய்ப்பு கிடைத்துவிட்டது. என்னுடைய வறுமை, என்னுடைய கதைமாந்தர்கள், என் 13 காதலிகள்,  என்னுடைய உண்மைகள் எல்லாம் அறிந்தவர்  திவ்யா மட்டுமே. திருமணத்திற்குப் பிறகு திவ்யாவிற்கும் எனக்கும் ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. திருமணத்திற்கு  முன்பு ராம் சாரிடம் பொய் சொல்லிவிட்டாவது போய் சந்தித்துவிட்டு வருவேன்.

இயக்குநராக எல்லா வேலையும் நான் எடுத்து செய்யும்போது திவ்யாவிடம் நேரம் செலவழிக்க முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது.  குழந்தை பிறந்து 10 நாட்கள் மட்டுமே இருந்தேன். அதில் ஒரு வருத்தம் இருக்கிறது. ஆனால் திவ்யா மிகவும் புத்திசாலி, புரிந்துகொள்ளக்கூடியவர், ஒரு  படைப்பாளியாக மாரி வெற்றி பெற்றிருக்கிறான். அவனை படைப்பாளனாகவும் பாதுகாக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

சினிமாவில் இப்போது தொடங்கி இருக்கிற என்னுடைய பயணம், முன்நோக்கி நகர்ந்து செல்ல வேண்டுமே தவிர பின்நோக்கி செல்லக்கூடிய எந்த  கதைக்களத்தையும் சினிமாவாக தயாரிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். கிராமத்தில் இருக்கும்போது அடங்கா தமிழன் விஜய் ரசிகர் மன்றத்  தலைவராக இருந்தேன். விஜய் சாருக்கு என்னுடைய படம் பார்த்து பிடித்திருந்தால் மகிழ்ச்சி. விஜய் சாரோடு பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தால்  என்னுடைய கதையைச் சொல்லி, அவருக்குப் பிடித்திருந்தால் நிச்சயமாக படம் எடுப்பேன்.’’

திவ்யா:

“எழுத்தாளராக மாரியை எனக்கு தெரியும். இந்த நொடிப்பொழுதுவரை நான் மாரியுடைய வாசகிதான். அதற்குப் பிறகுதான் காதலி, மனைவி எல்லாம். “தாமிரபரணியில் கொல்லப்படாத நான்” என்கிற அவருடைய கட்டுரையைப் படித்தேன். மாரியை சந்திப்பதற்கு முன்னால் எங்களுடைய வீட்டில் நான்  ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் வளரும் ஜோ மாதிரிதான் சாதியால் எவ்வளவு பிரச்சனை வரும் என்று தெரியாத ஒரு பெண்ணாகத்தான்  வளர்ந்தேன். வாசிப்பு மூலம்தான் சாதியம் குறித்த புரிதல் ஏற்பட்டது. ஆனால் அதன் வலியை நான் உணர்ந்தது இல்லை.

மாரியுடைய எழுத்துக்களை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். அப்படி ஒரு நாள் ‘ என் தாத்தாவை நான்தான் கொன்றேன்’ வாசிக்கும்போது ஒரு  இன்னொசன்ட்டான பையனுடைய வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்கள் நடந்திருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வாசகியாக அவருடைய  கட்டுரைக்கு வாழ்த்து சொல்ல, முகநூல் பக்கத்தில் அவருடன் நண்பராக இணைந்தேன். அவருடன் நிறைய சண்டை போட்டேன். ‘எங்களுடைய  உணர்வுகளோடு விளையாடாதீர்கள், உங்களுடைய எழுத்து எங்களுடைய தூக்கத்தை கெடுக்கிறது’ என அவ்வப்போது  பேசியதுண்டு.  

அதற்கு முன்பு நான் இப்படியான கதைகளைப்  படித்தது இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டு பேரும் காதலிக்கிறோமே என்பதை உணர்ந்தாலும்  சொல்லிக்கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்,  வீட்டில் ஏதாவது சொல்லுவார்களா என்று எங்களுடைய  உரையாடல் தொடங்கியது. நேரடியாக என்னுடைய அம்மாவிடம் பேசினார். ‘என் பொண்ணுக்கு இஷ்டம்னா எனக்கு ஒன்றும் ஆட்சேபணை  இல்லை’ன்னு அம்மா சொல்லிட்டாங்க. நான் அப்போது இளநிலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் இரண்டு பேரில் யாராவது ஒருவர் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று தோன்றியது. நான் பிஎட் முடித்தேன். மாரி கதை எழுதி முடித்து  வைத்திருந்தார். உனக்கு வேலை கிடைத்தால்தான் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியும், எனக்கு எப்போது படம் எடுப்பதற்கு வாய்ப்பு  கிடைக்கும் என்று தெரியவில்லை என்று சொன்னார். அவசர அவசரமாக டெட் தேர்வுக்குப் படித்தேன். தேர்வுக்கு என்னை அழைத்துக்கொண்டு போனார்.  நான் தேர்வு எழுதி முடிக்கும்வரை ஒரு டீக்கடை வாசலிலே வெயிலில் அமர்ந்திருந்தார்.

முதல் ஆளாக தேர்வு எழுதிவிட்டு வேளியே வந்தேன். விட்டால் போதுமென்பது போல நான் வந்துவிட்டேன். “என்ன திவ்யா இவ்வளவு சீக்கிரமா  வந்துட்டே, மறுபடியும் டெட் எழுத முடியாது திவ்யா”ன்னு புலம்பினார். டெட் ரிசல்ட் வந்ததும், வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் எனக்கு  வேலை கிடைத்தது . வேலைக்கு போன இரண்டு ஆண்டுகளில்  மூன்று திரைக்கதைகளை எழுதி முடித்து வைத்திருந்தார். சரி திருமணம் செய்து  கொண்டு படத்திற்கான வேலையை பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

அப்போதுதான் ஒரு பிரச்சனை தொடங்கியது, அம்மாவைத் தவிர பிற உறவினர்கள் திருமணம் செய்து கொண்டால் கோயிலில்தான் முறைப்படி  திருமணம் நடக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு வேறு வழி இல்லை, திருமணம் நடந்தால் போதுமென்று இருந்தேன். ஆனால் மாரி  சம்மதிக்கவே இல்லை. மாரிக்கு சடங்கு, சம்பிரதாயங்கள் மீது சுத்தமாக நம்பிக்கை கிடையாது. வேறு வழியே இல்லாமல் விருப்பம் இல்லாமல்  திருமணத்திற்கு சம்மதித்தார். திருமணத்திற்குப் பிறகு 15 நாட்கள் கழித்து நடிகர் கதிரிடம் இருந்து போன் வந்தது, அப்போது போனவர்தான்.

படம் எடுப்பதற்கான வேலையை தொடங்கிவிட்டார். நான் அவ்வப்போது சென்னை வந்து பார்த்துவிட்டு வருவேன். படப்பிடிப்பிற்கு போகும்போது  என்னிடம் நிறைய புத்தகங்களை கொடுத்துவிட்டு இதை எல்லாம் படி என்று சொல்லி விட்டுச் சென்று விடுவார். ‘பரியேறும் பெருமாள்’ என்கிற  படைப்பு நாங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்து பெற்ற குழந்தை. அப்படத்தின் கதையை எழுதும்போது திடீரென்று அழுதுவிடுவார், சாப்பிடமாட்டார்,  சரியாகத் தூங்கமாட்டார். அப்படித்தான் இந்தப் படம் உருவானது.

முதல் நாள் படம் பார்க்கும்போது, புதிதாக பார்க்கும் படமாகவே எனக்கு தெரியவில்லை. படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் எனக்கு  மாரியாகவே தெரிந்தார்கள். மாரி தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கின்ற எந்த நபரையும் மறக்கவே மாட்டார். மாரி நன்றாக சாப்பிட்டு, நன்றாகத்  தூங்கி நான் பார்த்ததே இல்லை. மற்றவர்களைப் பற்றியே யோசிக்கும் அதே வேளையில் தன்னுடைய உடல் நலத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.  மாரிக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்று மட்டும்தான்... ‘உனக்காக இன்னும் பத்தாயிரம் தேவதைகள் வருவார்கள். உன்னுடைய உடல்நலத்தை  நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் திவ்யா நெகிழ்ச்சியாக.
                                                        

ஜெ.சதீஷ்