பலகாரம் செய்து பாருங்கள்



கோதுமை ரசகுல்லா

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 500 கிராம்,
நெய் - தேவைக்கு,
பால்கோவா - 1½ கிலோ,
கற்கண்டு - 50 கிராம்,
சாரைப்பருப்பு - 10,
சர்க்கரை - 2 கிலோ,
குங்குமப்பூ, ஏலக்காய் பொடி - சிறிது.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவை பால்கோவாவுடன் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொண்டு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்து அதன் நடுவில் மிளகு  போன்று உடைத்த கற்கண்டு துண்டுகள், சாரைப் பருப்பு வைத்து மறுபடியும் உருட்டி நெய்யில் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.  சர்க்கரையை பாகு காய்ச்சி பாகு கம்பிபோல வந்ததும் குங்குமப்பூ, ஏலக்காய்ப் பொடியையும் போட்டு சூடு கொஞ்சம் ஆறியதும் தயாரித்து வைத்துள்ள  உருண்டைகளை அதில் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து உபயோகப்படுத்த வேண்டும்.

கோயா லட்டு

என்னென்ன தேவை?

பொட்டுக்கடலை - 300 கிராம்,
வேர்க்கடலை - 300 கிராம்,
எள் - 300 கிராம்,
கோதுமை மாவு - 300 கிராம்,
ராகி மாவு - 300 கிராம்,
அரிசிப்பொரி - 100 கிராம்,
முந்திரிப்பருப்பு - 20 கிராம்,
ஏலக்காய் - 5,
பொடி செய்த வெல்லம் - 600 கிராம்,
நெய் - 250 கிராம்.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் இவைகளை தனித்தனியே வறுத்து அரிசிப்பொரி சேர்த்து பொடி செய்துகொள்ள வேண்டும். ஏலக்காைய பொடி  செய்ய வேண்டும். முந்திரிப்பருப்புகளை மெல்லிய வில்லைகளாக்கி பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் நெய் முழுவதையும்  விட்டு கோதுமை மாவு, ராகி மாவு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு பொடித்து வைத்திருக்கும் பொடி சேர்த்துக்கிளறி விட்டு  வெல்லப்பொடி போட்டு கிளற வேண்டும். ஏலப்பொடி, முந்திரிப்பருப்பு துண்டுகள் போட்டுக் கலந்து இறக்கி லட்டுகளாக பிடிக்க வேண்டும்.

வேர்க்கடலை கார போண்டா

என்னென்ன தேவை?

வறுத்த வேர்க்கடலைப்பருப்பு - 500 கிராம்,
பொட்டுக்கடலை - 100 கிராம்,
கடலை மாவு - 50 கிராம்,
அரிசி மாவு - 4 ஸ்பூன்,
கரம் மசாலாப்பொடி - 2 ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
உருளைக்கிழங்கு - 8,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 8,
இஞ்சி - 1 துண்டு,
கடுகு, உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசிக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்க வேண்டும். நூறு கிராம்  வேர்க்கடலையை ரவைபோல பொடித்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை போட்டுக் கொஞ்சம் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு,  வெங்காயம், மிளகாய், இஞ்சியைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதில் மசித்த கிழங்கையும், மல்லி, உப்பு, கறிவேப்பிலை, பொடித்த  வேர்க்கடலையையும் போட்டு கிளறி கீழே இறக்கி சிறிய உருண்டைகள் பிடிக்க வேண்டும்.

மீதி உள்ள வேர்க்கடலை, பொட்டுக்கடலை இரண்டையும் தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும். கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் இதனுடன்  சேர்க்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் போட்டு கரம் மசாலாப் பொடி,  உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவுப்பதத்தில்  கரைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் முக்கிப்  போட வேண்டும். நன்றாக வெந்ததும் எடுக்க வேண்டும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.