ட்வின்ஸ்



‘ட்வின்ஸா... அப்போ ரெண்டு பேர்ல யாரு பெரியவங்க, யாரு சின்னவங்க?’ என்கிற கேள்வி, இரட்டையரைப் பெற்ற எல்லாரும் எதிர்கொள்வதே...‘ட்வின்ஸ்ல என்ன பெரிசு, சிறுசு...’ என்கிற பதில் முந்திக் கொண்டாலும், ‘ஃபர்ஸ்ட் பேபி’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கைகளில் ஒப்படைக்கப்பட்ட குழந்தையையே மூத்தவராக அறிமுகம் செய்வோம் எப்போதும்.

‘யார் அண்ணன்... யார் தம்பி...’ என்கிற கேள்வி என் மகன்களிடம் கேட்கப்படுகிற போது, ஒவ்வொரு தருணங்களில் ஒவ்வொரு விதமான பதில் வரும்.
‘அவன்தான்’ என்கிற பதிலில் அந்த அவன் அண்ணனா, தம்பியா என்று குழம்பிப் போவார்கள் கேட்டவர்கள்.‘நான்தான் அண்ணன்... பிறந்த எனக்குத் தெரியாதா?’ என்பான் தம்பியாக அறியப்படுகிறவன்.

‘அவன் அண்ணனா இருக்கிறப்ப நான் தம்பி...’ என பார்த்திபன் பட டயலாக் சொல்லி சிரிக்க வைப்பார்கள் பல நேரங்களில். முதிர்ச்சியான பேச்சினால் அசத்தி, ‘ஒருவேளை இவன்தான் பெரியவனா இருப்பானோ... இவ்வளவு விவரமா இருக்கானே’ என சின்னவனும், ‘பெரிசுனு பேர்தான்... குழந்தைத்தனம் மாறவே இல்லை... ஒருவேளை இவன்தான் சின்னவனா இருப்பானோ’ என பெரியவனும் பல தருணங்களில் என்னை யோசிக்க வைத்திருக்கிறார்கள். அந்தக் குழப்பம் இன்று வரை தொடரவே செய்கிறது!

‘‘ரெண்டு பேர்ல யார் எல்டர்னு மிஸ் கேட்டாங்க. அவன்தான்னு சொன்னேன். அப்ப நீதான் எல்டர். நீதான் உங்கம்மா வயித்துல முதல்ல ஃபார்ம் ஆயிருப்பே... ஆனா, பிறந்தப்ப அவன் முதல்ல வந்திருப்பான்... அதனால அவனை அண்ணன்னு சொல்லியிருப்பாங்க...’னு மிஸ் சொன்னாங்க.. ஸோ... இன்னிலேருந்து நான்தான் அண்ணன்...” என  பீதியைக் கிளப்பினான் இளையவனாக அறியப்படுகிற என் மகன். ‘அதெல்லாம் முடியாது... டாக்டர் எனக்குத்தான் ஃபர்ஸ்ட் பேபினு ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுத்தாங்களாம்.... நான்தான் அண்ணன்...” என மல்லுக்கு நிற்பான் அண்ணனாக அடையாளப்படுத்தப்பட்ட இன்னொரு மகன். அவர்களின் நீயா, நானா போட்டி இன்றும் தொடர்கிறது.

‘‘இரட்டையர் கருவாக உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிற விஷயமல்ல இது’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். ‘‘எந்தக் குழந்தை முதலில் உருவானது, எது அடுத்து உருவானது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. முதலில் வெளியே வருகிற அல்லது எடுக்கப்படுகிற குழந்தையே முதல் குழந்தையாகக் கருதப்படும். அது கருவில் உள்ள குழந்தைகளின் பொசிஷனை பொறுத்தது. இந்த பொசிஷனானது கர்ப்ப காலம் முழுவதும் மாறிக் கொண்டே இருக்கலாம். இந்த நம்பர் ஒன், நம்பர் டூ ஆர்டரானது அந்தத் தாய்க்கு நிகழும் சுகப்பிரசவம் அல்லது சிசேரியனை பொறுத்தும் மாறலாம். இரண்டு குழந்தைகளின் எடையும் வேறு வேறாக இருக்கும். அதனால் எடை அதிகமாக இருக்கும் குழந்தை மூத்தது என்றோ, எடை குறைவான குழந்தை இளையது என்றோ எடுத்துக் கொள்ள முடியாது.

இரட்டையரைப் பொறுத்த வரை இருவரின் வளர்ச்சி மற்றும் தோற்றத்தை வைத்தும் யார் மூத்தவர், யார் இளையவர் என்பதைக் கணிக்க முடியாது. மருத்துவர்களாகிய நாங்கள் எந்தக் குழந்தையை முதலில் வெளியே எடுக்கிறோமோ அதை முதல் குழந்தை எனச் சொல்வோம். அந்தக் குழந்தையின் கையில் ‘1’ என்கிற அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். இதனால் இயல்பாகவே இரண்டாவது எடுக்கும் குழந்தைதான் இளையது என்கிற தீர்மானம் பெற்றோருக்கு வந்து விடுகிறது...” என்கிற மாலா ராஜ், இரட்டையரில் ஒருவர் ஆதிக்க மனப்பான் மையுடனும், இன்னொரு வர் அடங்கிப் போகிறவராகவும் இருப்பதன் பின்னணியில் உள்ள சில உளவியல் காரணங்களை யும் சொல்கிறார்.

‘‘பெற்றோரில் ஆரம்பித்து, உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் இரட்டையரை இரட்டையராகப் பார்க்காமல் மூத்தவராகவும், இளையவராகவுமே பார்க்கிறார்கள். குழந்தைகளிடம் பேசும்போதும் அந்தச் சிந்தனை வலியுறுத்தப்படுகிறது. இருவரும் சமம் என்று சொல்லி வளர்க்கப்படுவதற்கு பதில், நீதான் பெரியவன்(ள்), உனக்குதான் பொறுப்புகள் அதிகம் என்றோ, நீ சின்னவன்(ள்)... உனக்கொன்றும் தெரியாது என்றும் சொல்லியே வளர்ப்பதால், குழந்தைகளின் மனதிலும் அவர்களை அறியாமல் அப்படியொரு எண்ணம் உருவாகி விடுகிறது. இரட்டையரில் யாரும் மூத்தவரும் இல்லை, இளையவருமில்லை என்பதை பெற்றோர் முதலில் உணர்ந்து, அதை அவர்களது குடும்பத்தார், நண்பர்களுக்கும் சொல்ல வேண்டும்’’ என அவசிய அட்வைஸ் கொடுக்கிறார் மாலா ராஜ்.

முத்துகள் மூன்று!

‘‘3இஸ் எ கிரவுட்’ எனக் கேள்விப்பட்டிருப்போம். கரூர் மாவட்டம், கடவூரைச் சேர்ந்த தனலட்சுமிக்கோ ‘3 இஸ் எ பிரைடு (pride)! ஒரே பிரசவத்தில் தர்ஷினி, தர்னேஷ்வரன், தனுஸ்ரீ என மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த மகராசி இவர்.‘‘கல்யாணமாகி 5 வருஷமா குழந்தை இல்லை. செக்கப்புக்கு போன டாக்டர், ‘ட்ரீட்மென்ட் எல்லாம் வேண்டாம். ஒண்ணும் குறை யில்லை. வெயிட் பண்ணுங்க’னு சொன்னாங்க. 5 வருஷத்துக்குப் பிறகு கர்ப்பமானேன். முதல் ஸ்கேன்லயே ‘உங்களுக்கு ட்ரிப்லெட்ஸ், அதாவது, மூணு குழந்தைங்கனு சொன்னாங்க டாக்டர். தாங்க முடியாத சந்தோஷம்... ஆனா, அடுத்த நிமிஷமே அதைவிட அதிகமான பயமும் சேர்ந்துடுச்சு. ‘ட்வின்ஸ் கேள்விப்பட்டிருக்கேன்.... ட்ரிப்லெட்ஸ்னு சொல்றீங்களே டாக்டர்’னு எனக்கு பயங்கர ஷாக்.

மூணு குழந்தைங்கனு சொன்னதோட இல்லாம, என்னை உட்கார வச்சு, மூணையும் சுமந்து, பெத்தெடுக்கிறதுல என்ன மாதிரியான கஷ்டங்கள் இருக்கும்னும் டாக்டர் எனக்கு விளக்கமா சொன்னாங்க. ஒரு குழந்தையைப் போல பத்து மாசம் வச்சிருக்க முடியாது. எப்ப வேணா டெலிவரி ஆகலாம்னும், ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னும் சொன்னாங்க. ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்திட்டிருந்த நான், டிராவல் பண்ண பயந்துக்கிட்டு வேலையை விட்டேன். முதல் 5 மாசம் வாந்தி, மயக்கம்னு கஷ்டப்பட்டேன். அது நின்னதும், வயிறு பெரிசாகி, உட்கார முடியாம, படுக்க முடியாம பயங்கரமான அவஸ்தை. கரூர்ல ஒரு ஆஸ்பத்திரியிலதான் பார்த்துக்கிட்டிருந்தோம். 5வது மாசமே அட்மிட் ஆகணும்னு சொன்னாங்க. பார்த்துக்க ஆளில்லை... செலவும் கட்டுப்படியாகாதுனு வேற ஆஸ்பத்திரிக்கு மாறினோம். சுகப்பிரசவத்துக்கும் வாய்ப்புகள் இருக்குனு சொன்னாங்க.

ஆனா, 7வது மாசக் கடைசியிலயே எனக்குப் பனிக்குடம் உடைஞ்சிருக்கு. ஒருநாள் வெயிட் பண்ணிப் பார்த்துட்டு, அடுத்த நாள் சிசேரியன் பண்ணி, குழந்தைங்களை எடுத்துட்டாங்க. மூணு குழந்தைங்களும் வெயிட் கம்மியா இருந்ததால, 22 நாள் இன்குபேட்டர்ல வச்சிருந்து கொடுத்தாங்க. வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததும் பார்த்துப் பார்த்து வளர்த்தேன். வீட்டை விட்டு வெளியே போனதில்லை. குழந்தைங்களைப் பார்க்க யாராவது வந்தாகூட ஜன்னல் வழியா பார்த்துட்டுப் போயிடுவாங்க. இன்ஃபெக்ஷன் ஆயிடக் கூடாதேங்கிற பயம்... கொஞ்சம் கொஞ்சமா வெயிட் கூடினது. முதல் சில மாசங்கள் கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், யாருக்குமே கிடைக்காத அதிர்ஷ்டம் எனக்கு கிடைச்சிருக்கிறதை நினைச்சு அதைப் பொறுத்துக்கிட்டேன். குழந்தைங்க வளர, வளர என்னோட எல்லாக் கஷ்டங்களும் மாயமாகிடுச்சு. இப்ப 4வது படிக்கிறாங்க.

பொண்ணுங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பாங்க. என்னைத் தவிர வேற யாருக்கும் அவங்களை சரியா அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அவங்கப்பாவேகூட சில நேரம் மாத்திக் கூப்பிடுவார். ஸ்கூல்ல, வெளியில எல்லாம் இதே குழப்பம்தான்.‘எல்லாருக்கும் குழப்பம் இருக்கு... அம்மா கண்டுபிடிக்கிறாங்களா பார்ப்போம்’னு ரெண்டு பேரும் அடிக்கடி என்னை நான்தான் அவள்னு ஏமாத்துவாளுங்க. பெத்தவளுக்கு கண்டுபிடிக்கத் தெரியாதா என்ன? சரியா கண்டுபிடிச்சிடுவேங்கிறது அவங்களுக்கும் தெரியும். பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் பையன் மேல பயங்கர பாசம். அவனை பத்திரமா பார்த்துக்கணும்னு நினைப்பாங்க. அந்தப் பாசம் என்னை திக்குமுக்காட வச்சிடும்...’’ என்கிறவரின் கண்களில் சந்தோஷ ஈரம்.


‘‘எந்தக் குழந்தை முதலில் உருவானது, எது அடுத்து உருவானது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. முதலில் வெளியே வருகிற அல்லது எடுக்கப்படுகிற
குழந்தையே முதல் குழந்தையாகக் கருதப்படும்...’’

தனலட்சுமியின் டிப்ஸ்

‘‘ட்வின்ஸ், ட்ரிப்லெட்ஸா பிறக்கிற குழந்தைங்க பெரும்பாலும் எடை குறைவா இருப்பாங்க. அவங்களுக்கு சட், சட்டுனு இன்ஃபெக்ஷன் வந்து, உடம்புக்கு முடியாமப் போயிடும். நோஞ்சானாவே இருப்பாங்க. அப்படி எதுவும் நடக்காமப் பார்த்துக்கிறது அம்மாவோட கையிலதான் இருக்கு. அதிகபட்ச அக்கறையோட கவனிச்சுக்கிட்டா, எந்த இன்ஃபெக்ஷனும் வராது. கொடுக்கிற தண்ணியிலேருந்து, சாப்பாடு வரைக்கும் எல்லாத்துலயும் கவனம் இருந்தா, ஆஸ்பத்திரி செலவைத் தவிர்க்கலாம்.”

(காத்திருங்கள்!)
படங்கள்: அஜித்குமார்