ஆடுகளம்



சாய்னாவின் நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது. உலகின் நம்பர் 1 வீராங்கனையாக சாதித்துக் காட்டியிருக்கிறார். இந்த சிகரத்தை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கே!

ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டவர்... அதைத் தொடர்ந்து இந்திய ஓபன் சூப்பர் சீரீஸ் தொடரில் களமிறங்கியபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சொந்த மண்ணில் நடக்கும் இந்த மிகப்பெரிய போட்டியில் இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பதை விட, கடந்த 4 ஆண்டுகளாக கால் இறுதி அல்லது அதற்கு முன்பாகவே வெளியேறி இருந்ததால் சற்று பதற்றமாகவே இருந்தார் சாய்னா.தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து முதல் முறையாக இந்திய ஓபன் அரை இறுதியில் அடி வைத்தது, இம்முறை நிச்சயம் பட்டம் வெல்வார் என்ற நம்பிக்கையை கொடுத்தது. உலக சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் அரை இறுதியில் தோற்றதுமே, சாய்னா தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது.

முன்னாள் உலக சாம்பியன் ரட்சனோக் இன்டனானுடன் மோதிய ஃபைனலில் சாய்னாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ‘இந்தியா இந்தியா லெட்ஸ் கோ சாய்னா’ என்று ஆர்ப்பரித்ததில் டெல்லி ஸ்ரீஃபோர்ட் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸே கலகலக்க, அந்த உற்சாகம் சாய்னாவின் ஆட்டத்திலும் பிரதிபலித்தது. மின்னல் வேக ஸ்மேஷ், லாவகமான டிராப் ஷாட் என்று இன்டனானுக்கு தண்ணி காட்டியவர் 21-16, 21-14 என்ற நேர் செட்களில் வென்று இந்திய ஓபனில் தங்கப் பதக்கத்தை முதல் முறையாக முத்தமிட்டார். எத்தனையோ பட்டங்கள் வென்றிருந்தாலும் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் இந்திய ஓபனில் சாதித்த மகிழ்ச்சியும் பெருமையும் சாய்னாவின் கண்களில் பளிச்சிட்டன.

‘‘அப்பாடா... மனதில் இருந்த பெரிய பாரம் இப்போதுதான் அகன்றுள்ளது. இந்த தொடரில் இத்தனை சர்ப்ரைஸ் கிடைக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. முதல் முறையாக அரை இறுதி, ஃபைனல் என்று முன்னேறியதோடு சாம்பியன் பட்டத்தையும் வென்றதை என்னாலேயே நம்ப முடியவில்லை. உலக தரவரிசையில் முதல் ரேங்க் கிடைத்திருப்பது கூடுதல் போனஸ். இந்த வருஷம் நிச்சயமாக நம்பர் 1 ஆக முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அது இத்தனை சீக்கிரம் கை கூடியது ஆனந்த அதிர்ச்சி யாகவே உள்ளது. மிகவும் பெருமையாக உணர்கிறேன். எத்தனையோ தடைகள், சவால்களை சமாளித்தே இதை சாதிக்க முடிந்திருக்கிறது. என் வாழ்க்கையின் அற்புதமான தருணம் இது.

தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதற்கு கிடைத்த பரிசு இது என கருதுகிறேன். கடந்த இரண்டு மாதத்தில் மூன்று தொடர்களின்
ஃபைனலுக்கு முன்னேறி யது சாதாரணமான விஷயம் இல்லை. தோள்பட்டை காயத்துக்கு ஸ்ட்ரேப் அணிந்து விளையாடினேன். டாப் வீராங்கனைகளுக்கு எதிராக மிகவும் சிரமமாக இருந்தது. பட்டங்கள் எனது பசியை அதிகரிக்கவே செய்கின்றன. இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டிருக்கிறது. பெரிய காயம் ஏதும் ஏற்படாமல், நல்ல உடல் தகுதியோடு இருப்பது முக்கியம்.  
 
ஃபைனலில் இன்டனான் கடும் நெருக்கடி கொடுத்தார். அருமையான ஆட்டமாக அமைந்தது. ரசிகர்களின் ஆதரவு எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. நம்பர் 1 ரேங்க் பற்றிய நினைப்பே இல்லை. இந்திய ஓபனில் எப்படியாவது பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. இந்த வெற்றியை ஐஸ்க்ரீம், மில்க் ஷேக், சாக்லெட்டுடன் கொண்டாடப் போகிறேன்’’ என்கிறார் உற்சாகம் கொப்பளிக்க!

1980ல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் பிரகாஷ் படுகோன் நம்பர் 1 ஆக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு சாய்னா அந்த உயரத்தை எட்டியிருப்பது பேட்மின்டன் அரங்கில் இந்தியாவின் பெருமையை பல மடங்காக்கி உள்ளது. ‘‘மகளிர் பிரிவில் சாய்னா, பி.வி.சிந்து, ஆண்கள் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பாருபள்ளி காஷ்யப் என்று அசத்தி வருவதால், இது இந்திய பேட்மின்ட னின் பொற்காலம்!’’ என்கிறார் முன்னாள் சாம்பியன் படுகோன். இந்தியாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற தனது கனவு நனவாகி உள்ளதாக பூரிக்கிறார் கோபிசந்த். முயற்சிகள் தொடரட்டும்... வெற்றிகள் குவியட்டும்!

3 வயசு வில்லாளி!

விஜயவாடாவை சேர்ந்த செருகுரி டாலி ஷிவானி என்ற 3 வயது சிறுமியின் சாதனை வில்வித்தை சாம்பியன்களையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
36 அம்புகளை பயன்படுத்தி அதிக புள்ளிகளைக் குவித்த மிக இளம் வயது வீராங்கனையாக! இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது இந்த பொடிசு. வில் உயரம் கூட இல்லாத ஷிவானி யின் திறமையை பார்த்து நடுவர்களே பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

பயிற்சியாளரும் முன்னாள் சர்வதேச வீரருமான மறைந்த செருகேரி லெனினின் தங்கைதான் ஷிவானி. கடந்த 2010ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் லெனின் துரதிர்ஷ்டவசமாக இறந்த நிலையில், அவரது பெற்றோர் சத்யநாராயணாவும், கிருஷ்ண குமாரியும் மிகுந்த மன உறுதியோடு பெற்றெடுத்த சோதனைக் குழாய் குழந்தைதான் இந்த ஷிவானி!

நானும்  தயார்!

சானியா உற்சாகம்

சாய்னா நெஹ்வாலை தொடர்ந்து இந்தியாவுக்கு இன்னும் ஒரு நம்பர் 1 வீராங்கனையாக பெருமை சேர்க்க காத்திருக்கிறார் அதே ஹைதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா!

மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில்தான் இந்த சாதனை காத்திருக்கிறது. சுவிட்சர்லாந்து நட்சத்திரம் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து விளையாடி வரும் சானியா (6,885 புள்ளி), இப்போது 3வது இடத்தில் உள்ளார். இத்தாலி வீராங்கனைகள் சாரா எர்ரானி, ராபர் டாவின்சி இருவரும் தலா 7,640 புள்ளிகளுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஃபைனலுக்கு முன்னேறியிருப்பது சாய்னா முதலிடத்தை பிடிக்கும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. மகளிர் டென்னிசில் இந்திய வீராங்கனை நம்பர் 1 ஆவது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்!