தொழில்முனைவோருக்கு...



இயற்கை சீற்றத்திலும் இழப்பைக் குறைக்கலாம்!

உலக வரைபடத்தில் மிகவும் மெனக்கெட்டுத் தேட வேண்டிய ஊர்களில் கூட ‘பேனசானிக்’ நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பார்க்க முடியும். டி.வி.யோ, டி.வி.டி. ப்ளேயரோ... குறைந்தபட்சம் பேனசானிக் ரேடியோவையாவது பார்த்துவிடலாம். பேனசானிக் நிறுவனத்தை நிறுவியவர் கொனோசுகே மாட்சூசித்தா. ஜப்பானில் சாதாரண குடும்பத்தில் 8வது குழந்தையாகப் பிறந்தவர். எத்தனையோ இன்னல்களை வாழ்வில் எதிர்கொண்டவர். கடும் நோய் பாதிப்பு, பயங்கர பணமுடைக்கு மத்தியில் ஒரு வாடகை அறையில் தன் வியாபாரத்தைத் தொடங்கியவர். இன்று எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் உலகின் பிரமாண்ட நிறுவனங்களில் ஒன்றாக அவருடைய ‘பேனசானிக்’ நிறுவனம் வளர்ந்திருக்கிறது. இங்கே தன் அனுபவத்தில், பட்டறிவில் கொனோசுகே மாட்சூசித்தா தொழில்முனைவோருக்குக் கொடுக்கும் ஆலோசனைகள் சில...

இடையூறு என்பது ஒரு நல்லாசிரியர்!


தோல்வி மூலமாகவும் நாம் ஞானம் பெறுகிறோம். தோல்வியே அடையாத, எப்பொழுதும் வெற்றியே அடைந்து கொண்டிருக்கும் வியாபாரிகளை நாம் பார்க்க முடியாது. அந்த ஒவ்வொரு அனுபவத்திலும் ஒரு வியாபாரி சில அறிவு ஞானங்களைப் பெற்று, நல்ல முதிர்ச்சியும் அடைகிறார். நம்பிக்கையும் வெற்றியும் அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. நாம் எதையாவது செய்யும்போது, கடினமான சூழ்நிலையைச் சந்திக்க நேர்ந்தால், அதைச் சரியாகக் கையாண்டு, நமது தவறு எது என்பதையும் ஒப்புக்கொண் டால், அதுவே திருப்திகரத் தீர்வாக இருக்கும். இப்படிச் செய்யாவிட்டால் நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ள மாட்டோம்.  அதே இடைஞ்சல் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும். நமது தவறை பிறர் மீது திணித்தால் நமது இடைஞ்சல் கூடிக்கொண்டுதான் இருக்கும். தோல்விக்கான காரணத்தை அறிந்து, அது நமக்கு நல்ல பாடம் என்பதை உணர்ந்து செயல்பட்டால், அது நமக்கு வலிமையைத் தரும்.

கயிற்றின் மேல் வாழ்க்கை!


ஒரு நல்ல வீரன், களத்தில் இருக்கும் ஏழு எதிரிகளையும் எதிர்கொள்ளக் கூடியவனாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முனையிலும் காத்திருக்கும் மரணத்தைச் சந்திக்கும் வகையில் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். இந்த தயார் நிலையே அவனுக்குப் புகழையும் மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒரு நிறுவனத்தின் தலைவர், பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டக்கூடிய பொறுப்பில் இருக்கிறார். அவரிடம் பத்தாயிரம் பணியாளர்கள் இருந்தால், பத்தாயிரம் முகங்களுக்கும் அவர்தான் பொறுப்பு ஆவார். அவருக்கு தூக்கம் என்பதே வராது. அவ்வளவு இடைஞ்சல்கள் இருக்கும். இருந்த போதிலும் இந்தத் தூக்கமில்லாத இரவுகளும் பணியாளர் மீதான அவரது அக்கறையும்தான் அவருடைய வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குகிறது.

இடைவேளைக் கலாசாலை!


வியாபாரத்தில் மந்தமோ, இடைவேளையோ வரக்கூடாது என்று எல்லோரும் விரும்புகிறோம். அப்படி வந்துவிட்டால் அதைக் கட்டுப்படுத்தவும் அப்புறப்படுத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும். நடைமுறையில், வியாபாரத்தில் மந்தமான நிலைக்குப் பிறகு எப்படியாவது செழிப்பான பொருளாதார நிலை வரும் என்பதே இயற்கையின் நியதி. வியாபாரம் மோசமாக இருக்கும்போது, விற்பனை குறையும்... நமக்கு வரவேண்டிய பில் பணம் வராது... இதனால் எல்லோருமே பணப் பிரச்னையால் பாதிக்கப்படுவோம். இந்த நேரத்தில் அதற்காக வருத்தப்பட்டு நாம் முணுமுணுக்கக் கூடாது. பணியாளர்களுக்கு உண்மையான வாழ்க்கைக் கல்வி வழங்குவதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கொஞ்சம் பாதை மாறுங்கள்!


நீங்கள் 50 கிலோ எடையையே தூக்க முடியும் என்ற நிலையில் இருக்கும்போது, அதற்கு மேல் தூக்கிவிடக் கூடாது. அளவுக்கு அதிக எடையைத் தூக்கும்போது, நீங்கள் விழுந்துவிட நேரிடலாம். ஓரளவு நடுநிலையில் செயல்படுங்கள் என்பதே இதன் அர்த்தம். 100 பொருட்களுக்குத் தேவை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 80 பொருட்களைத்தான் தயாரிக்கப் போகிறீர்கள் என்றால், அது கூடுதலான, மிகையான எச்சரிக்கை உணர்வே. தேவைக்கு அதிகமாக 150 பொருட்களை தயாரிக்க முடிவெடுத்தால் அது தவறாகும். ஏனென்றால், உற்பத்திக்கேற்ற தேவை வராமல் போய்விட்டால், விற்கப்படாத பொருட்களால் நீங்கள்தானே நஷ்டப்பட்டுப் போவீர்கள்.

பூமி அதிர்ச்சியின் குலுங்கல்!

பூமி அதிர்ச்சி என்பது இயற்கையின் சீற்றம் என்றும், அதை யாராலும் தடுக்க இயலாது என்றும் எல்லோரும் ஒப்புக் கொள்வர். ஆனால், அதனால் ஏற்படும் இழப்பின் அளவை நீங்கள் குறைத்துக் கொள்ள முடியும். இதற்கு உங்களது நிர்வாகத் திறமை மிகவும் அவசியம் (எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். தொழில்முனைவோருக்கும் அவசியமானது இந்த உஷார் நிலை!).

நிகழ்ச்சியில்லாத நாளின் நிகழ்ச்சிகள்!

முழுமையான தோல்வி அல்லது முழுமையான வெற்றி என்று எதுவும் கிடையாது. மாறாக, ஒவ்வொரு தோல்வியிலும் சிறிதளவு வெற்றியும் ஒவ்வொரு வெற்றியிலும் சிறிதளவு தோல்வியும் இருக்கத்தான் செய்கின்றன. நிகழ்ச்சிகளில்லாத நாளின் முடிவில், ஒரு பொறுப்பான நிர்வாகி, தான் தோல்வியடைந்திருக்கிறோமா, வெற்றியடைந்திருக்கிறோமா என்று கண்டறிய, அன்றைய நடவடிக்கைகள், முடிவுகள் ஆகியவற்றை அலசிப் பார்க்கிறார். தனது நடவடிக்கைகள் மேலும் சிறப்பாக நடந்திருக்கலாமா, இதைவிடச் சிறந்த முடிவு எடுத்திருக்கலாமா என்றெல்லாம் தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறார். இது நல்ல பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி, பயனுள்ள அனுபவங்களையும் சாதாரண நாட்களில் கூடப் பெற்றுத்தரும்.

(‘சோற்றுக்கு மட்டுமல்ல - வியாபாரச் சிறப்பியல்புகளும் நிர்வாக நீதி நெறிகளும்’ நூலிலிருந்து... வெளியீடு: Yayasan Pendidikan Islam, Malaysia).

முழுமையான தோல்வி அல்லது முழுமையான வெற்றி என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு தோல்வியிலும் சிறிதளவு வெற்றியும் ஒவ்வொரு வெற்றியிலும் சிறிதளவு தோல்வியும் இருக்கத்தான் செய்கின்றன.

தொகுப்பு: பாலு சத்யா