பிரியங்களுடன்



உன்னதமான ‘100 கேள்விகள்’ உணர வைத்த ‘100 விளக்கங்கள்’... படித்ததும் கொடுத்தோம் 100க்கு 100 மதிப்பெண்கள். பாதுகாக்கப்பட வேண்டிய கருவூலம். இதழியல் துறையில் முன்மாதிரிப் பாடம். தோழின்னா தோழிதான்!

- தி.பார்வதி, திருச்சி-7., மயிலை கோபி, சென்னை-83., இ.டி.ஹேமமாலினி, சென்னை-23., ப.மூர்த்தி, பெங்களூரு-97., எம்.செல்லையா, சாத்தூர்., அ.பிரேமா, சென்னை-68., கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு-43., ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16., வத்சலா சதாசிவன், சென்னை-64., உஷா முத்துராமன், மதுரை-6., வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்)... மற்றும் ரஜினி பாலா, சென்னை-91
 (மின்னஞ்சலில்)...

சென்ற இதழில் ‘கேரளா ஸ்பெஷல் 30’, இந்த இதழில் ‘கர்நாடகா ஸ்பெஷல் 30’... பலே... பிரமாதம்!
- வி.மோனிஷா ப்ரியங்கா, திருச்சி-18.

கழிவறை என்பது பெண்களுக்கு அடிப்படைத் தேவை, உரிமை. அது சமுதாயப் பிரச்னையும் கூட என்பதை மிகவும் தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்துச் சொல்லி, பெண்களுக்கு உரிய கௌரவத்தை வழங்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது ‘செய்திக்குப் பின்னே...’
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை மற்றும் கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பல பெண்கள் அடிப்படை உரிமையான கழிவறை வசதி கூட இல்லாமல் வாழ்வது அவலம்.
- ஆர்.ஸ்ரீகாந்தன், சென்னை-80 (மின்னஞ்சலில்)...

நடிகையாக மட்டுமல்லாமல் கொடை வள்ளலாகவும் சமூக சேவகியாகவும் வாழ்ந்த ஆட்ரி ஹெப்பர்ன் என்றும் எல்லோர் மனதிலும் ஒளிவீசிக் கொண்டே இருப்பார்.  
- பிரதிபா வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.

தன்னம்பிக்கை நடிகர் விமல், கலாய்ப்பதில் ‘களவாணி’, நடிப்பில் ‘தேசிங்கு ராஜா’, இயல்பில் ‘கலகலப்பு’. தாய்ப்பாசத்தை பத்திரமாக பாதுகாத்து வருகிறார் மஞ்சப்பையில்!
- பி.வைஷ்ணவி, சென்னை-68 மற்றும் சு.நவீனாதாமு, பொன்னேரி.

‘வார்த்தைகளுக்கு எஜமானராக இருப்பதைவிட வாழ்க்கைக்கு எஜமானராக இருப்பதே
தாம்பத்யத்தின் வெற்றி‘ என்று மிக அழகாக விளக்கினார் மருத்துவர் காமராஜ்.
- ஜே.தனலட்சுமி, சென்னை-12.

‘சீக்ரெட் கிச்சன்’ ரகசியங்களைத் தேடித் தேடி வெகு திறமையாக அவற்றை உடைத்து
வருகிறது. ‘கல்லிடைக்குறிச்சி அப்பளம்’ கலக்கல்!

- உமா சாய்நாதன், தஞ்சாவூர்-1., லட்சுமி ஸ்ரீனிவாசன், சென்னை-24 மற்றும்
ராஜேஸ்வரி ஹரிஹரன், திருவனந்தபுரம்-1.

நடிகை, இயக்குநர், கவிஞர் என பன்முக ஆற்றலை வளர்த்துக் கொண்டிருக்கும் ரோகிணி உண்மையிலேயே அரிய நட்சத்திரமே!
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர் மற்றும் கீதா பிரேமானந்த், சென்னை-68.

தாய்மை என்பதே தவம். அந்தத் தவம் தரும் வரம் குழந்தைச் செல்வம். அதுவும் இரட்டையர் என்று வரும்போது அவர்களை வளர்க்கும் வரையிலான காலகட்டம் சவாலானது. ஓர்
அற்புதமான அனுபவம் பகிர்ந்து கொள்ளப்படுவது சந்தோஷம் தருகிறது.
- எஸ்.ஜானகி, உடுமலைப்பேட்டை.

‘செல்லமே’ பகுதியில் இடம் பெற்றிருந்த குழந்தையின் முகம் கண்களை விட்டு அகலவே இல்லை. ‘டெரேரியம்’ பற்றிய தகவல்கள் அருமை. ‘உலகின் 10 அழகிய வனங்கள்’ பிரமிப்பு! ‘மகிழ்ச்சி என்பது யாதெனில்...’ ஸ்ரீதேவி செல்வராஜனின் உள்ளம்!
- எஸ்.வளர்மதி கொட்டாரம் மற்றும் வேணி கங்காதரன், சேலம்-3.

‘துணிச்சல்காரி லீலா ராய்’ கட்டுரையில் முழுக்க முழுக்க பெண்களே நிர்வாகம் செய்து வெளிவந்த ‘ஜெயஸ்ரீ’ பத்திரிகை குறித்த தகவல் வியக்க வைத்தது.
- வி.வெற்றிசெல்வி, பயத்தவரன்காடு (மின்னஞ்சலில்)...

அ.வெண்ணிலாவின் ‘ததும்பி வழியும் மௌனம்’ உணவு குறித்த பல முக்கிய விஷயங்களை இந்த இதழில் அலசியிருக்கிறது. இளம் பருவத்தில் உண்டு களித்த பல உணவுகளை
நினைவுக்குக் கொண்டு வந்தது.
- தீபா வெங்கடகிருஷ்ணன், சோழவந்தான்.