*கொளுத்தும் வெயில், முடிவில்லாத மணல்வெளி, உயர்ந்து நிற்கும் மணற்குன்றுகள், ஆங்காங்கே சொற்ப தாவரங்கள்... இப்படியான இலக்கணங்களுடன் விளங்கும் பாலைவனமும் ஒரு இயற்கை அதிசயம்தான். உலகின் மிகப் பெரிய வெப்ப பாலை வனமான சஹாராவைப் பற்றிய ஹாட்டான தகவல்கள் இதோ:
*வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனம், 94 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் அமைந் துள்ளது. ‘சஹாரா’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘மிகப் பெரிய பாலைவனம்’ என்பது பொருளாகும்.
*சஹாரா பாலைவனத்துக்கு மேற்கில் அட்லாண்டிக் கடலும் வடக்கு திசையில் அட்லஸ் மலை மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளும் கிழக்கில் செங்கடலும் தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக உள்ளன.
*இப்பாலைவனம் அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மௌரிடேனியா, மொராக்கோ, நைஜர், சூடான், துனிஷியா, மேற்கு சஹாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது.
*உலகின் மூன்றாவது பெரிய பாலைவனம் என்று சஹாராவைச் சொல்கிறார்கள். அன்டார்க்டி காவும் ஆர்க்டிக்கும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கின்றன. அவை குளிர் பாலைவனங்கள்.
*சஹாரா, 25 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டதாகும். கடைசி பனி ஆண்டிற்குப் பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது, பின் சிறிது சிறிதாக மீண்டும் பாலையாக மாறிவிட்டது என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
*சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சஹாரா பகுதி, யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் மேய்ந்த ஒரு வளமான பகுதியாக இருந்ததாகும். ஆறாயிரம் வருடங்களுக்கு முன், பருவநிலை வறண்டு போய், நாம் இன்று பார்க்கும் பாலைநிலமாக மாறி விட்டது.
*கடந்த சில நூறு ஆண்டுகளில் சஹாரா கடுமையான பருவநிலை மாற்றங்களைச் சந்தித்து வருகிறதாம். இப்போது, வறண்ட பகுதியாக இருக்கும் சஹாரா, இன்னும் 15,000 ஆண்டுகள் கழித்து மீண்டும் பசுமையாக மாறும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
*இதுபோன்ற பருவநிலை மாற்றம் 41 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழுமாம். பூமி தன் நிலையை 22 டிகிரியிலிருந்து 24.5 டிகிரிக்கு சாய்ப்பதால், இந்த மாற்றம் ஏற்படுகிறதாம்.
*இந்தப் பாலையின் வெப்ப நிலை 57 டிகிரி செல்சியஸையும் தாண்டுமாம். வருடத்திற்கு மூன்று அங்குலத்திற்கும் (7.62 செ.மீ) குறைவாகவே மழை பெய்யுமாம்.
*சஹாராவை மேற்கு சஹாரா, மத்திய அஹக்கார் மலை, டிபெஸ்டி மலை, ஐர் மலை, டெனிரி பாலைவனம், லிபியன் பாலைவனம் என்று ஆறு பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
*டிபெஸ்டி மலையில் அமைந்துள்ள ஏமி கூஸி (Emi koussi) தான் சஹாராவின் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 3415 மீட்டர் ஆகும். வடக்கு சாட் பகுதியில் அமைந் துள்ள இம்மலை ஒரு கவச எரிமலை (Shield Volcano) ஆகும்.
*சஹாரா பாலைவனம் என்பது மணற்குன்று, மணல் கடல், கல் பீடபூமி, காய்ந்த பள்ளத்தாக்கு, உப்பு ப்ளாட், மலை, ஓடை, பாலைவனச் சோலை ஆகிய வற்றால் உருவானதாகும்.
*பூமியின் மிக வறண்ட, வெப்ப பிரதேசமாக இருந்தபோதிலும், 1200 வகை தாவரங்களும், 70 இன மிருகங்களும் சஹாராவை தாய்வீடாகக் கொண்டுள்ளன. பெரும்பாலான தாவரங்கள் சொற்ப ஆயுள் உள்ளவை.
*சில இடங்களில் நிலத்தடி ஆறுகள் ஓடுகின்றன. அவை மேற்புறம் பொத்துக் கொண்டு வரும் இடங்களில் பாலைவனச் சோலைகள் தோன்றுகின்றன. நைல் நதி பள்ளத்தாக்கில் உள்ள பாலைவனச் சோலைகளில் ஆலிவ் மரங்கள் காணப் படுகின்றன.
*ஒட்டகமும் ஆடும் பொது வான வீட்டு விலங்குகள் ஆகும். நரி, சிறுத்தைப் புலி, மணல் விரியன், தேள், மானிட்டர் பல்லி, காட்டு நாய், தீக்கோழி, மறிமான் (Antelope) ஆகிய விலங்குகளும் காணப்படுகின்றன.
*சஹாராவில் பெரிய பெரிய மணற்குன்றுகள் உள்ளன. சில மணற்குன்றுகள் 180 மீட்டர் உயரம் உடையவை.
*இங்கு பெரும் அளவில் இரும்பு தாதுக்கள் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும் அல்ஜீரியாவில் எண்ணெயும், மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடக்கின்றன.
*‘தத்ரார்த் அகாகூஸ்’ (Tadrart Acacus) என்ற மலையில் கி.மு. 12000 ஆண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த பாறை கலைச் சின்னங்களின் சிற்ப வேலையும், ஓவியங்களும் யுனெஸ்கோவால் பாதுகாக்கப் பட்டு வருகிறது. 1985ல் இவ்விடம் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
*சஹாரா பாலைவனத்தின் தென் மொராக்கோ பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ என்ற மாரத்தான் பந்தயம் நடைபெறுகிறது. ஆறு சுற்றுகளுடன் ஏழு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 150 மைல் தூர பாலைவனத்தைக் கடக்க வேண்டும்.
*இப்பாலைவனத்தின் மௌரிட் டேனியா பகுதியில் ‘ரிச்சாட்’ (Richad) என்ற விசித்திர நில அமைப்பு காணப்படுகிறது. எருதின் கண் போல் காணப்படும் இதை ‘சஹாராவின் கண்’ என்றும் அழைப்பர். 50 கி.மீ. விட்டத்தில் அமைந்துள்ள வட்ட வடிவ, வரி வரியாக அரித்தெடுக்கப்பட்ட இயற்கையான பாறை அமைப்பு இது.
*சஹாராவில் 20 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். இதில் பெரும்பாலோர் நாடோடிகள். இங்குள்ள முக்கிய பழங்குடி இனத்தின் பெயர் பெர்பெர் (Berber) ஆகும். முக்கிய மொழி அரபி.
- ஹெச்.தஸ்மிலா, கீழக்கரை.