சோப் & பாடிவாஷ் எது பெஸ்ட்?
நாம் தினமும் உபயோகிக்கும் இன்றியமையாத பொருட்களில் ஒன்றாகிவிட்டது குளியலுக்கு பயன்படுத்தும் சோப் அல்லது பாடிவாஷ். இவை இரண்டுமே நமது உடலை சுத்தப்படுத்தும் பணியைதான் செய்கிறது. இருந்தாலும், பார் சோப்புக்கும் - பாடி வாஷ்க்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்வோம்.
 பார் சோப்
சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு பார் சோப் நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டது. அதேசமயம், எல்லோருக்கும் சோப் ஒத்துக்கொள்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், பெரும்பாலானவர்களுக்கு பார்சோப் சரும பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது. காரணம் உப்பு, கொழுப்பு (Fat), காரம் (Alkaline) சேர்ந்த கலவைதான் குளியல் சோப். இதைத் தயாரிப்பதற்குத் தாவர மற்றும் விலங்கின் கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சோப்களில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது.

இதுதவிர, நாம் கவனிக்க வேண்டியது டிஎஃப்எம் சதவிகிதம் (Total Fatty Matter). இது எல்லா வகையான சோப்களிலும் இருக்கும். இதை வைத்து சோப் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. டிஎஃப்எம் சதவிகிதம் 75 முதல் 80 வரை இருந்தால், அது முதல் கிரேடு சோப் என்று சோப்பின் மேலுறையில் குறிக்கப்படுகிறது.
இந்த வகையான சோப் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. டிஎஃப்எம் சதவிகிதம் 70 முதல் 75 வரை இருந்தால் கிரேடு 2 எனவும், 65 முதல் 70 வரை இருந்தால் கிரேடு 3 எனவும் குறிக்கப்படுகிறது. இந்த வகையான சோப்கள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை அல்ல. அதனால், சோப் வாங்கும்போது இந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.
மேலும், சருமத்தின் தன்மைக்கேற்ப சோப்பைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, மாய்ச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்களின் சருமம் முதிர்ச்சி பெற்றிருக்கும். இவர்களும் மாய்ச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம்.
இவற்றை மென்மையான சரீரம் கொண்ட குழந்தைகளுக்கு உபயோகிக்கக் கூடாது. அதுபோல, வாசனை அதிகமுள்ள சோப்களை தேர்ந்தெடுக்கக் கூடாது. அவற்றில் வாசனை எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு ரசாயனமும் கலக்கப்பட்டிருக்கும். பிறந்த குழந்தைகளுக்கு சோப் வாங்கும் போது கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை தேவை. அவர்களுக்கு பேபி சோப்தான் சிறந்தது. பாடிவாஷ்
மென்மையான சருமம் கொண்ட பலருக்கு பார்சோப் ஒத்துக் கொள்வதில்லை. அதனால்தான் இப்போதெல்லாம் பாடிவாஷ் பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். காரணம், சோப்பில் உள்ள பி.ஹெச் அளவைக் காட்டிலும், பாடிவாஷில் உள்ள பி.ஹெச் அளவு குறைவாக உள்ளதால். இது சருமத்தைப் பெரிதாக பாதிப்பதி்ல்லை.
அதுபோன்று, வறண்ட சருமம் உள்ளவர்கள் பார்சோப்பை தினமும் பயன்படுத்தும்போது, உடலில் உள்ள எண்ணெய்ப்பசை குறைந்து மேலும், சருமம் வறண்டு போகிறது. ஆனால், பாடிவாஷில் உள்ள மாய்ஸ்சரைசர், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைத்து, சருமம், மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது. அதுபோன்று, பாடி வாஷ் பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மையாக காட்சியளிக்கிறது.
மேலும், பாடிவாஷ் மிகவும் சுகாதாரமானதாவும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பெரும்பாலான குடும்பங்களில் வீட்டில் உள்ள அனைவருமே ஒரே சோப்பைதான் பயன்படுத்துகிறார்கள்.
இதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இது சருமத்தில் பாக்டீரியாக்களையும் சேர்த்துவிடுகிறது. ஆனால், பாடிவாஷ் அப்படியில்லை. நீர்பதத்தில் பாட்டிலில் இருப்பதால் தேவையான அளவை மட்டுமே எடுத்து பயன்படுத்தினால் போதுமானது. எனவேதான், சோப்பைக் காட்டிலும் பாடிவாஷ் சுகாதாரமானதாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம், பாடிவாஷ் பயன்படுத்துவதிலும் ஒரு சில சிக்கல் இருக்கிறது. அதாவது, நிறைய பிராண்ட்களில் பாடிவாஷ் கிடைக்கின்றன. அவற்றில் எது சரியானது என்பதை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். மேலும், பாடிஷுடன் லூஃபா என்கிற ஸ்க்ரப்பரைத் தருகின்றனர்.
இந்த ஸ்க்ரப்பரைத் தேய்க்கத் தேய்க்க, சருமத்தின் மேற்பரப்பில் உள்ள படிமங்களை உரித்துவிடும். எனவே, ஸ்க்ரப்பரை தவிர்த்துவிட்டு, கைகளால் தேய்த்துக் குளிப்பதே நல்லது. இதனால்தான், எக்ஸிமா, சொரியாசிஸ், வறட்சியான சருமம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் சோப் பயன்படுத்தாமல், பாடிவாஷ் பயன்படுத்துவதே நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே, பார் சோப் சிறந்ததா இல்லை பாடிவாஷ் சிறந்ததா என்றால், நிச்சயமாக, இரண்டிலுமே நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளது. அதனால், அவரவர் சருமத்துக்கு ஏற்றது எது என்பதை மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது.
- ஸ்ரீதேவி குமரேசன்
|