முகப்பரு தழும்புகள் மறைய எளிய வழிகள்!
முகப்பரு ஆண், பெண் இருபாலரிடமும், வளரிளம் பருவத்தினரிடமும் பெரும் பிரச்னையாக உள்ளது. ஆயில் ஸ்கின் கொண்டவர்கள், தலையில் பூஞ்சை மற்றும் தொற்று உள்ளவர்களுக்கு, பாக்டீரியா தொற்று உள்ளவர்களுக்கு பரு அதிகம் வரும்.  டிஸ்க்ரன்ட்டேஷன் தெரபி என்கிற சிகிச்சையின் மூலம் சருமத்தில் சுரக்கிற அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தலாம். அதன்மூலம் பருக்கள் வருவது குறையும். தழும்புகள் வருவதையும் தவிர்க்கலாம். மைக்ரோ டெர்மஸ்டிரேடின் மற்றும் மீசோ தெரபி என்கிற இரண்டு சிகிச்சைகளும் தழும்பு களை போக்குவதில் நல்ல பலனைத் தரும்.தழும்புகளை போக்குவதில் உணவுக்கும் பெரும் பங்கு உண்டு. அதிக எண்ணெய் மற்றும் கார உணவுகளை தவிர்க்க வேண்டும். நெல்லிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பேரிக்காயை சேர்க்கலாம்.
எளிய சிகிச்சைகள்
பருக்கள் ஏற்பட்ட தழும்புகள் உள்ள பகுதிகளில் மீது ஆலிவ் எண்ணெயைத் தடவி பின் கழுவி வர நல்ல பலன் தரும். பப்பாளி விழுது- 1 தேக்கரண்டி, லேவண்டர் ஆயில் - 2 சொட்டு, பாதாம் எண்ணெய் - 10 சொட்டுகள், சிறிதளவு- பன்னீர் ஆகியவற்றை கலந்து கொண்டு தழும்புகள் மீது தடவி பின் கழுவி வர, படிப்படியாக பரு தழும்புகள் மறையும்.
மூன்று பாதாம் பருப்பு ஊறியதுடன் சந்தனம், தயிர், எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி கலந்து விழுதாக்கி முகப்பரு தழும்பு மீது தடவி ஊறவிட்டு, காய்ந்ததும் கழுவ, முகப்பரு கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து முகம் பளிச்சென்றாகும்.பருக்களுக்கும், தழும்புகளுக்கும் வெட்டிவேர் சிறந்த மருந்து, வெட்டிவேர், கொட்டை நீக்கிய கடுக்காய் எடுத்துக் கொண்டு முதல்நாள் இரவு ஊறவிட்டு மறுநாள் அரைத்து, பருக்கள் தழும்புகள் மீது தடவி, பின் கழுவ தழும்புகள் மறையத் தொடங்கும். வெட்டிவேர் ஊறிய தண்ணீரை கொண்டு முகம் கழுவிவர பருக்கள் வராது. தழும்புகள் ஏற்படாது.
ஒரு ஜாதிக்காய் எடுத்து சிறிது தேங்காய்ப்பால் விட்டு விழுதாக அரைக்கவும். இதை மாலையில் முகப்பரு தழும்புகள் மீது பூசிக் கொள்ளவும். இரவு தூங்கப் போகும்முன் குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். அடிக்கடி இவ்வாறு செய்ய தழும்புகள் மறைந்துவிடும்.
கற்றாழை ஒரு மடல் எடுத்து சிறிது தேங்காய்ப்பால் விட்டு விழுதாக அரைக்கவும். இதை மாலையில் முகப்பரு தழும்புகள் மீது பூசிக் கொள்ளவும். இரவு தூங்கப் போகும் முன் குளிர்ந்தநீரில் முகம் கழுவவும். அடிக்கடி இவ்வாறு செய்ய தழும்புகள் மறைந்துவிடும். கற்றாழை ஜெல்லை உபயோகிக்க கரும்புள்ளிகள் வராததோடு, தழும்புகள் மறைந்து முகம் பளபளப்பாக இருக்கும்.
இரண்டு தேக்கரண்டி கசகசாவை ஊற வைத்து பின் மஞ்சள்தூள், கறிவேப்பிலையுடன் அரைத்து தழும்புகள் மீது தடவி, பின் கழுவ முகம் பளிச்சென இருக்கும்.சந்தனத்துடன் சமஅளவு தோல் நீக்காத உளுந்து பவுடரை கலந்து பன்னீர் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, பின் கழுவி வர தழும்புகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
- மகாலட்சுமி சுப்பிரமணியன்
|