இயற்கையின் அழகும் கெடாமல் இருக்கட்டும்!



சுற்றுச்சூழல்

நாகரிக மோகத்தாலும் மேலை நாட்டுத் தாக்கத்தாலும் பியூட்டி பார்லர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. மருதாணி, ஃபேஸ் க்ரீம்கள், செயற்கை நறுமணமூட்டி என பலவிதமான அழகு சாதனங்கள் அணிவகுத்து வர ஆரம்பித்து விட்டன. இந்த அழகு சாதனப் பொருட்களாலும் கணிசமான அளவில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே காற்று, தண்ணீர், ஒளி மாசு கட்டுக்கு அடங்காமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, சுற்றுப்புறச் சூழலுக்குப் பொருத்தமான அழகுக் குறிப்புகளை நாடுவது அவசியமாகி வருகிறது. சுற்றுச்சூழல் கெட்டுவிட்டால் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி, அழகும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, அதற்கேற்றவாறு, சுற்றுச்சூழலுக்கு இயைந்த சில அழகு குறிப்புகள் உங்களுக்காக கீழே தொகுத்து தரப்பட்டு உள்ளன.

டிஸ்போசபல் ஸ்பாஞ்சா... தவிர்த்து விடுங்கள்!

இமையின் மேற்புறத்தை அழகுப்படுத்திக்கொள்ள தரமான ப்ரெஷ்ஷை உபயோகிப்பது நல்லது. ஏனென்றால், இவை பல நாட்கள் நீடித்து இருக்கக் கூடியவை. ஸ்பான்ச் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, பயனற்ற குப்பையாக மாறிவிடும். அது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் மாசுபாட்டையும் உண்டாக்கும்.

உலர் ஷாம்பூ உபயோகியுங்கள்

உலகின் முன்னணி சிகை அலங்கார நிபுணர்கள் விநோதமான ஒரு உண்மையைக் கூறுகிறார்கள். ‘சற்று முன்பாக சுத்தம் செய்யப்பட்ட கூந்தலைவிட, கழுவப்படாத தலைமுடியை அலங்காரம் செய்வது எங்களுக்கு மிகவும் எளிதான செயல்’ என்று உறுதி அளிக்கின்றனர். உலர் ஷாம்பூவைப் பயன்படுத்துவதால் தலைமுடியைச் சுத்தம் செய்யும் எண்ணிக்கை விகிதம் குறைவதோடு, ஆரோக்கியமான உச்சந்தலையையும் பெற முடியும். மேலும், நீங்கள் விரும்பும் எந்தவிதமான சிகை அலங்காரத்தையும் பெறுவதற்கு ட்ரை ஷாம்பூ பயன்படுகிறது என்பது போனஸ் தகவல்.

தேர்ந்தெடுத்து வாங்குதல்உங்களுடைய வீட்டில் அழகை மேம்படுத்துவதற்கான ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் உடலை வறண்டு போகாமல் வைத்துக்கொள்ள உதவும் அழகு சாதனங்களைத் தேர்ந்தெடுத்து மொத்தமாக வாங்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலமாக, சிறுசிறு தயாரிப்புகளை அடிக்கடி வாங்குவதனால் உண்டாகும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கணிசமாக குறைக்க முடியும்.    
பயணத்துக்குப் பொருத்தமானதா?!

கோடை விடுமுறை சுற்றுலா அல்லது வணிகம் தொடர்பான பயணம் என எதுவாக இருந்தாலும், அந்தந்த பயணங்களுக்கு ஏற்றவாறு அழகு சாதனப் பொருட்களை உடன் கொண்டு செல்வது சிறந்த செயல் ஆகும். அதற்காக, சின்னசின்ன தயாரிப்புக்களை வாங்குதல் என அர்த்தம் கற்பித்து கொள்ளக்கூடாது.

பல முறை பயன்படுத்தக்கூடிய வகையில், பயணத்துக்குப் பொருத்தமான கன்டெய்னர்களை வாங்குவதால் தேவைப்படும் நேரங்களில் எல்லாம், அவற்றை நீங்கள் நிரப்பி கொள்வதோடு பயணத்தைப் பல நாட்கள் தொடர முடியும். மேலும், பேக்கிங் காரணமாக ஏற்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவையும் குறைக்கலாம்.

மைக்ரோ-பிளாஸ்டிக்கா... எச்சரிக்கை தேவைஇவ்வகை பிளாஸ்டிக் என்பது மைக்ரோ மணிகள் வடிவில், பிளாஸ்டிக்து களாக கிடைக்கக் கூடியதாகும். இந்த மைக்ரோ மணிகள், நம்முடைய கடல் வளங்களை மாசுபடுத்துவதோடு அவற்றில் வசிக்கிற மீன்கள், திமிங்கலம், கடல் குதிரை முதலான உயிரினங்களை அச்சுறுத்தக் கூடியதாகவும் உள்ளன. எனவே, கடல் வளங்களை குலைக்கும் இத்தகைய தயாரிப்புக்களை விலக்க வேண்டும்.
ஒருமுறை மட்டுமே...

முகம் துடைப்பான்(Face Wipes), பஞ்சாலான அட்டை(Cotton Pads) மற்றும் பஞ்சு சுருட்டல்(Swabs) முதலானவை ஒருமுறை பயன்பாட்டிற்குப் பின்னர் தூர எறியக்கூடிய பொருட்கள் ஆகும். இவற்றை மேக்-அப் நீக்கும் துணி, துவைக்கக்கூடிய பஞ்சு உருளை என மாற்றுப்பொருளாக உருவாக்க முடியும். அவ்வாறு செய்வதால் எளிதாக துவைத்து, மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

- விஜயகுமார்