சங்கடப்படுத்தும் சர்க்கோபினியா



வணக்கம் சீனியர்

‘‘இளம் வயதில் உறுதியாகவும், பெரியதாகவும் வளரக்கூடிய தசைகள், முப்பது வயதுகளின் ஆரம்பத்திலிருந்து தன்னுடைய இயல்பைத் தொலைக்க ஆரம்பிக்கிறது. தசைகளின் பருமனுடன், செயல்திறனும் படிப்படியாக 30 வயதுக்குப் பிறகே குறையத் தொடங்கும். இப்படி படிப்படியாக அளவிலும், செயலிலும் தசைகள் சுருங்குவதை மூப்பு தசையிழப்பு நோய் (Sarcopenia) என்கிறோம். இந்தப் பிரச்னை முதியோரை அதிகம் பாதிக்கும் பிரச்னையாக இருக்கிறது’’ என்கிற முதியோர் நல மருத்துவர் நடராஜன் அதுபற்றி விளக்குகிறார்.

‘‘உலகம் முழுவதும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 17 சதவீதம் பேர் இந்த மூப்பு தசையிழப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒரு முறையும் மூன்று சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை தசையிழப்பை ஒவ்வொருவருமே சந்திக்கிறார்கள். இது எல்லோருக்கும் இயல்பாக நடக்கக்கூடிய விஷயம்.

ஒரு சிலருக்கு நாற்பது வயதுக்குப்பிறகு, 10 முதல் 15 சதவீதம் வரை தசையிழப்பு ஏற்படக்கூடும். 75 வயதில் வேகமாகும்.  இந்த தசையிழப்பு 65 வயதிலோ அல்லது 80வயதுக்குப் பிறகோ மேலும் இரட்டிப்பு வேகமெடுக்கலாம். வயதானவர்களின் வாழ்க்கைத்தரத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது இந்த மூப்பு தசையிழப்பு நோய். எனவே, உரிய கவனமும் தேவையான சிகிச்சையும் அவசியம்.’’
மூப்பு தசையிழப்பு நோய் எதனால் வருகிறது?

‘‘பொதுவாக முதியவர்களுக்கு அதிகமாக இந்த பிரச்னை வருகிறது. எனவே, முதுமைதான் இதற்கான அடிப்படை காரணம் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால், முதுமை மட்டுமே காரணம் அல்ல. சர்க்கோபினியாவுக்கான காரணத்தை அறிய இன்னும் சரியான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை.

சுற்றுப்புறச் சூழலினால் அல்லது ஒரு சில நோயின் அறிகுறியாகக் கூடவோ அல்லது ஹார்மோன்கள் மாற்றத்தினால் இருக்கலாமோ என்று கணித்திருக்கிறார்கள். இவை எல்லாமே நிரூபிக்கப்படவில்லை.  சுறுசுறுப்பாக இயங்கிய அன்றைய தலைமுறையினருக்கே இந்த நிலை என்றால், இன்று செயலற்ற வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் இளைஞர்களுக்கு வெகுசீக்கிரத்தில் தசையிழப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை சொல்லத் தேவையில்லை.’’

சர்கோபினியாவின் அறிகுறிகள்…

‘‘புஜங்களில் தசைகள் சுருங்கி, பார்ப்பதற்கு இளைத்திருப்பது போல் தோன்றினாலும், அவற்றின் செயல்திறனும் குறைவதால், அன்றாடம் செய்யும் வேலைகளை எளிதாக செய்ய முடியாது. இதனால் தன்னுடைய வேலைகளைச் செய்வதற்கு மற்றவரின் உதவியை நாட வேண்டியிருப்பதால், அடுத்தவரைச் சார்ந்தே வாழவேண்டிய நிலை வரும். இவர்களின் வாழ்க்கைத்தரம் குறைந்துவிடும்.

மார்புத் தசைகளும் சுருங்கத் தொடங்குவதால், இதயம் மற்றும் நுரையீரல் தசைகளும் சுருங்கி, மூச்சுவிட சிரமப்படுவார்கள். நரம்பணுக்கள் குறைவதால், மூளையிலிருந்து  தசைகளுக்கு செல்லும் இயக்கம் தொடர்பான சமிக்ஞைகள் தடைபடும்போது அடிக்கடி நிலைதவறி கீழே விழுவார்கள். வளர்ச்சி ஹார்மோன், டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இன்சுலின் போன்ற சில ஹார்மோன்களின் உற்பத்தி செறிவும் குறையத் தொடங்குகின்றன. அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு, நீண்ட நாள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.’’
மூப்பு தசையிழப்பு நோயை எப்படி கண்டறிவது?

‘‘தசை பலம் அறி சோதனை, கைப்பிடி சோதனை போன்ற சோதனை முறைகள் இருக்கின்றன. ஒரு நேர்கோட்டில் நடக்க வைத்து நிலை தவறாமல் நடக்கிறாரா என்றும், நாற்காலியிலிருந்து எப்படி எழுந்து நிற்கிறார், ஒரு பொருளை கிரிப்பாக எப்படி பிடிக்கிறார் என்பதையெல்லாம் சோதனை செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தற்போது, சர்கோபினியாவை கண்டறியவும், தசை பருமன் இழப்பை தடுப்பதற்காகவும் தசைபருமனை அளவிடுவதற்காக SARC-F அளவுகோல் புதிதாக உருவாக்கப்பட்ட கருவியாகும். இந்த அளவுகோலின்படி, நோயாளியிடத்தில் கேள்வி பதில்களாக வைக்கப்படும் தேர்வில், 10 ஸ்கோருக்கு நன்றாக செய்தால் ஜீரோ ஸ்கோர் என்றும், நான்கு ஸ்கோர்களுக்குமேல் பெற்றிருந்தால்,சர்கோபினியா இருப்பதும் உறுதி செய்யப்படும்.  

சர்கோபினியாவை கண்டுபிடிக்க BESA ஸ்கேன் வசதி உண்டு. ஆனால், அது விலையுயர்ந்ததும், மருத்துவமனையில் மட்டுமே செய்து கொள்ளக்கூடியது என்பதால், சமீபத்தில் BIA (Bio-Electrical Impedance Analysis) சோதனை முறையில், ஒருவரின் உடல் அமைப்பு, தசை பருமன் அளவிடப்படுகிறது.

இது விலைமலிவானதும், கையாள்வதற்கு எளிய வகையிலும் இருப்பதால் நோயாளி வீட்டிலேயே வைத்து செய்து கொள்ளலாம். மிகவும் நம்பகமான சோதனை என்பதால், முறையான சிகிச்சையை, சரியான நேரத்தில் தொடங்கி தொடர்ந்து  எடுத்துக் கொள்ள முடியும்.’’

மூப்பு தசையிழப்பிற்கான சிகிச்சைகள்

‘‘உடற்பயிற்சிகளே இதற்கு சரியான சிகிச்சையாக இருக்க முடியும். முக்கியமாக உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.  எடையைத் தூக்குவது, மாடிப்படி ஏறுவது போன்ற Resistance band and Endurance  பயிற்சிகளை எடுத்துக் கொள்வதால் தசையிழப்பிலிருந்து விரைவில் குணமடையலாம்.

குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாட்கள் இந்தப் பயிற்சிகளை செய்வது முக்கியம்.புரதச்சத்து மிகுந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம். சிலர் இதற்காக வைட்டமின் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் போட்டுக் கொள்வார்கள்.  தொடர்ந்து அவற்றை உபயோகிப்பது தவறானது மட்டுமல்ல பயனற்றதும் ஆகும்.’’

- இந்துமதி