Medical Trends



ரிலாக்ஸ்

பெண்களின் புத்திசாலித்தனத்துக்குக் காரணம் ஆண் மூளைக்கும், பெண் மூளைக்கும் இடையே அதன் அளவு முதல் செயல்பாடுகள் வரை பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமான ஒன்றை தற்போது நரம்பியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே வயதுள்ள ஆண்-பெண்ணாக இருந்தாலும் பெண்களின் மூளை ஆண்களின் மூளையைவிட 3 ஆண்டுகள் வயது குறைவாக இளமையாகத் தெரிகிறதாம். பெண்கள் புத்திசாலிகளாக இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம் என்கிறது மருத்துவ உலகம்.

போதைப்பழக்கத்தில் இருந்து மீள...

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் போதைப்பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போதைப்பழக்கத்திலிருந்து விடுபட அளிக்கப்படும் சிகிச்சைகளை வாரம் முழுவதும் அளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக அமைக்கப்படவுள்ள இச்சிகிச்சை மையத்தில் டாக்டர், நர்ஸ் மற்றும் மெடிக்கல் அட்டண்டர் என 3 பேர் பணியாற்றுவார்கள். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மனநல காப்பகம் இடையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரவணைப்பு எல்லாம் செய்யும்!

கட்டிப்பிடிப்பது காமம் தொடர்பானது மட்டுமே அல்ல. அன்பை வளர்ப்பதற்கும் அதுவே மருந்து. இருவர் கட்டியணைத்துக் கொள்ளும்போது காதல் ஹார்மோன் என்கிற ஆக்சிடோஸின் அதிகம் சுரக்கிறது. 20 விநாடிகள் கட்டிப்பிடித்தாலே மன அழுத்தம் குறையும். அத்துடன் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு போன்றவற்றையும் சீர் செய்கிறது என்கிறார்கள் நரம்பியலாளர்கள்.

வெயிலுக்கு மட்டுமல்ல...

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் இன்னோர் முக்கிய விஷயம், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் இயற்கையான மவுத் ஃப்ரஷ்னர் வெள்ளரிக்காயே என்கிறார்கள் மருத்துவர்கள். ழ்ஒரு வெள்ளரித்துண்டை 90 விநாடிகள் மெல்லாமல் வாயில் அடக்கிக் கொண்டால், அதிலிருந்து வெளியாகும் நீர், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொல்கிறதாம்.

நாற்பதிலும் தொடங்கலாம்!

நடுத்தர வயது வந்தால் ஓய்ந்து உட்கார வேண்டியதில்லை. மனதளவிலும், உடலளவிலும் நீங்கள் மகிழ்ச்சியுடன் இயங்க வேண்டிய காலம் அதுதான் என்கிறது ஸ்வீடனின் நரம்பியல் மருத்துவ ஆய்வு ஒன்று. 38 வயது முதல் 54 வயதுக்குட்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அல்ஸைமைர், டிமென்ஷியா போன்ற மூளை சார்ந்த நோய்களை பெரிதளவில் வராமல் தடுக்க முடியும்
என்கிறார்கள்.

அதிகரிக்கும் மனநோய்

சர்வதேச அளவில் 5.6 கோடி மக்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும், 3.8 கோடி பேர் பதற்றமான மனநிலையில் எந்த நேரமும் இருப்பதாகவும் மருத்துவம் தொடர்பாக நிகழ்த்தப்படும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை மனநலம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை, ஏதேனும் ஒரு வகையில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் கணிசமாக அதிகரித்து வருகிறது என்று கவலை தெரிவிக்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே, மனநலனிலும் அக்கறை காட்ட வேண்டிய காலம் இது!

தொகுப்பு : குங்குமம் டாக்டர் டீம்