சுந்தர் பிச்சையும் கரப்பான் பூச்சியும்!



தன்னம்பிக்கை

பல வெற்றியாளர்களைப் போலவே கூகுள் சி.ஈ.ஓவான சுந்தர் பிச்சைக்கும் அந்த பழக்கம் உண்டு. பள்ளிகள், கல்லூரிகள், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அழுத்தமான ஏதேனும் ஒரு விஷயத்தைச் சொல்லி அசத்தி விடுவார். அது பலரது கவனத்தை ஈர்ப்பதோடு இணையதளங்களில் வைரலாகவும் ஆகிவிடும். இந்த முறை அவர் ஏற்கெனவே சொன்ன ஒரு தகவல் மீண்டும் இணையதளத்தை அதிர வைத்துவிட்டது.

விஷயம் இதுதான். தான் படித்த கான்பூர் ஐ.ஐ.டி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசியபோது தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். ஒரு நாள் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றுக்கு காஃபி அருந்த சென்றிருந்தேன். என்னுடைய டேபிளுக்கு அருகில் நண்பர்கள் குழு ஒன்று அமர்ந்திருந்தது. அவர்களுக்குள் உரையாடியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று வந்த ஒரு கரப்பான் பூச்சி அந்த இடத்தையே அதகளப்படுத்திவிட்டது. ஒரு பெண்ணின் மீது அந்த கரப்பான் பூச்சி அமர, பதறிப் போன அந்தப் பெண் கூச்சல் போட ஆரம்பித்தார். தாண்டிக் குதித்தார். டேபிளில் இருந்த உணவுகள் சிதறியது. அந்த பெண்ணிடம் ஏற்பட்ட அதிர்ச்சி உடனிருந்தவர்களையும் தொற்றிக் கொண்டது. ஒரு வழியாக அதனை தட்டிவிட்டார். அந்த கரப்பான் பூச்சி கீழே விழாமல் அருகில் இருந்த இன்னோர் பெண்ணின் மீது அமர்ந்தது.

அந்தப் பெண்ணுக்கும் அதே பதற்றம்…. அதே போன்ற கூச்சல்… மீண்டும் பெரும் குழப்பம். இந்த நிகழ்வு ரெஸ்ட்டாரண்டில் சுற்றியிருந்த எல்லோரின் கவனத்தையும் திசை திருப்பியது. அந்தப் பெண்ணும் ஒரு வழியாக கரப்பான் பூச்சியைத் தட்டிவிட, இப்போது இன்னொருவரின் மேல் சென்று அமர்ந்தது கரப்பான் பூச்சி. ஆனால், இப்போது அமர்ந்த இடம் ஹோட்டல் சர்வரின் தோள்பட்டை மீது அமர்ந்தது.

அந்த இரண்டு பெண்களைப் போல அந்த சர்வர் பதற்றப்படவில்லை. சத்தம் போடவில்லை. அசையாமல் கரப்பான் பூச்சியின் நகர்வை அமைதியாக கவனித்தார். சரியான நேரத்தில், அந்த கரப்பான் பூச்சியைக் கையில் பிடித்து வெளியில் தூக்கி எறிந்தார். இது என்னை சிந்திக்க வைத்தது. ஒரு கரப்பான் பூச்சி... மூன்று பேர் அதனைக் கையாண்ட விதம்.

முதல் இரண்டு பெண்கள் கரப்பான் பூச்சி என்றவுடனே பயத்திலும், பதற்றத்திலும் தடுமாறினார்கள். ரெஸ்ட்டாரண்டையே தங்களது கூச்சலால் திரும்பிப் பார்க்க வைத்தார்கள். ஆனால், அந்த சர்வருக்கு எந்த பயமும் இல்லை. பதற்றமும் இல்லை. அதனால் உறுதியாக, தெளிவாக சிந்தித்து அந்த பிரச்னையை வெற்றி கொண்டார்.

வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்போது பதற்றமில்லாமல் தன்னம்பிக்கையுடன் இருப்பதுதான் நம்முடைய முதல் தேவை. அப்போதுதான் பிரச்னையின் தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் பிரச்னைகள் தீர்வதற்குப் பதிலாக மேலும் விஸ்வரூபம்தான் எடுக்கும்.

நிதானமான சூழலில்தான் தெளிவான, தீர்க்கமான சிந்தனைகள் நமக்குக் கிடைக்கும். பிரச்னையை வெல்லவும் அப்போதுதான் வழிகளும் பிறக்கும். தொழில்துறையில் ஏற்கெனவே ஒரு Cockroach theory-யை உதாரணமாக வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் கிடைத்த படிப்பினைக்கும் அதே Cockroach theory பெயர் தோன்றியது. எல்லோரும் இதனைப் பின்பற்றலாம். குறிப்பாக, சவால்கள் மிகுந்த பாதையில் பயணிக்கும் இளைஞர்கள் இந்த Cockroach theory-யை மனதில் கொண்டால் வெற்றி நிச்சயம்!

- ஜி. ஸ்ரீவித்யா