பேலன்ஸ் குறையுதா?!டாக்டர் எனக்கொரு டவுட்டு

நடந்து கொண்டிருக்கும்போதோ அல்லது சாதாரணமாக நின்று பேசிக்கொண்டிருக்கும்போதோ ஒரு சிலர் நிலை தடுமாறி திடீரென்று கீழே விழுந்து விடுவார்கள்.
கண்கள் இருட்டிக்கொண்டு, தலை சுற்றுவது போலவும், காற்றில் மிதப்பதைப் போன்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்பட்டதாக விளக்குவார்கள். இதுபோன்ற திடீர் தடுமாற்றங்கள் ஏற்படுவது ஏன் என்று காது, மூக்கு, தொண்டை நிபுணர் முரளிதரனிடம் கேட்டோம்...

‘‘இதயம், நரம்புகள் அல்லது புலன் உறுப்புகள் போன்ற உடலின் பல்வேறு உறுப்புகளின் சமநிலை அமைப்பில் ஏற்படக்கூடிய தொந்தரவால் வரக்கூடியதை சமநிலை சீர்கேடு என்கிறோம். இதனை ஆங்கிலத்தில் Balance Disorder என்று குறிப்பிடலாம்.

இந்த பேலன்ஸ் டிஸ் ஆர்டர் குறிப்பிட்ட ஓர் உறுப்பால் மட்டும் வருகிற பிரச்னையாகச் சுட்டிக் காட்டிவிட முடியாது. காது, மூக்கு, தொண்டை பிரச்னையால் வரக்கூடிய சமநிலைச் சீர்கேடு, இதயம் சம்பந்தமான அல்லது நரம்பு மண்டலங்களின் பாதிப்பால் வரக்கூடிய சமநிலைச் சீர்கேடு என்று இதிலும் சில வகைகள் உண்டு. இத்துடன் மனநலன் தொடர்பாகவும் பேலன்ஸ் டிஸ் ஆர்டர் வரக்கூடும்.’’

காது மூக்கு தொண்டை தொடர்பான சமநிலை குறைவு பற்றிச் சொல்லுங்கள்...

‘‘காது, மூக்கு, தொண்டை அமைப்பில் ஏற்படும் பிரச்னையால் தலைசுற்றல் ஏற்படுவதை Vertigo என்று சொல்கிறோம். ஆனால், பலரும் இதில் குழம்பிவிடுகிறார்கள். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பால் வரும் மயக்கத்தினையும் வெர்ட்டிகோ என்று நினைப்பார்கள். எனவே, வெர்ட்டிகோவுக்கும் மயக்கத்துக்குமிடையேயான
வித்தியாசத்தில் தெளிவு வேண்டும்.’’

எப்படி வித்தியாசம் கண்டுகொள்வது?

‘‘வெர்ட்டிகோ பிரச்னை உள்ளவர்களுக்கு படுக்கையிலிருந்து எழும்போது ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், சட்டென்று கண்கள் இருண்டு விடுவது போல இருக்கும். நரம்பு தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு நடக்கும்போது ஒரு பக்கமாக தள்ளுவது போல இருக்கும்.

தரையில் இருக்கும் ஒரு பொருளை குனிந்து எடுக்கும்போதுகூட நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுவார்கள். இத்துடன் ஏற்கெனவே சொன்னது போல மனரீதியான பிரச்னைகளும் சமநிலை குறைபாட்டிற்கான ஒரு காரணமாக அமையும்.’’

உடலின் சமநிலை அமைப்பு (Balance system) எவ்விதம் இயங்குகிறது?

‘‘சமநிலைக் குறைபாட்டைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் சமநிலை அமைப்பைப் பற்றி புரிந்து கொள்வோம். உங்கள் கண்கள் என்ன பார்க்கின்றன? உங்களின் மூட்டுகள், தசைகள் எவ்விதம் தொட்டு உணர்கின்றன மற்றும் உங்களின் உள்காதுகளின் சமநிலைப் பகுதியில் என்ன இயக்கத்தை உணர்கின்றன போன்ற புலனுணர்வுகளின் அடிப்படையில் மனிதனின் சமநிலை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. காதுகள் என்பவை கேட்பதற்கான உறுப்பு மட்டுமே அல்ல. உடலில் சமநிலையைப் பேணுவதற்கான பணியையும் செய்கிறது.

உங்கள் தலை திரும்பும் அல்லது நகரும் திசைகளைப்பற்றிய மற்றும் அசைவின் வேகத்தைப்பற்றிய சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பும் முக்கியமான பணிகளை காது மேற்கொள்கிறது.

உடலின் சமநிலை அமைப்பிற்கான மூன்றில் ஒரு பங்கு வேலையை உள்காது செய்கிறது. மேலும், செவித்திறன் குறைபாட்டிற்காக காது கேட்கும் கருவியை சிலர் பொருத்தியிருப்பார்கள். இக்கருவியின் மூலம் காதினுள் செல்லும் ஒலி அலைகள் சில நேரங்களில் உள் காதில் பிரச்னையைஉண்டாக்கி தலைசுற்றல் வரும்.

இரண்டாவதாக, காட்சி அமைப்பின் உள்ளீடுகளை உள்ளடக்கியது. உதாரணமாக, உடல் தன் சுற்றுப்புறத்திற்கேற்றவாறு எவ்விதம் இயங்க வேண்டும் என்ற காட்சித் தகவலை மூளைக்கு அனுப்புகிறது.

மூன்றாவதாக, தசைகள், கால்கள் மற்றும் கால் மூட்டுகள் அடங்கிய தசைக்கூட்டு அமைப்பின் தொடு உணர்வு உள்ளீடுகளையும் மூளைக்கு அனுப்புகின்றன. மூளை இந்த மூன்று புலனுணர்வு அமைப்புகளிலிருந்து தகவலைப் பெற்று, அவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் செயலாற்றி உடலின் ஒட்டுமொத்த சமநிலை அமைப்பை கட்டுப்படுத்துகிறது.’’

இந்தப் பிரச்னைக்கான சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பு வழிகள் பற்றிச் சொல்லுங்கள்...‘‘ஒவ்வொரு உறுப்பினால் ஏற்படும் சம நிலைக்குறைபாட்டை கண்டறிந்து அதன் மூல காரணத்திற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காதைப் பொறுத்தவரை முதலில் இரைச்சல் இருக்கிறதா என்பதை சோதித்து சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டும். அறிகுறிகள் காணப்படுகிறவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் திடீரென்று தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம் என்பதால் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிகளில் ஏறுவது, நீச்சல் பயிற்சி, வாகனம் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நோயாளிகள் யாரும் இல்லாதபோது பாத்ரூமுக்குச் செல்வதாக இருந்தால் கூட உள் பக்கம் தாள் போட்டுக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துகிறோம்.

முக்கியமாக பெண் நோயாளிகள் சமையல் வேலைகளில் ஈடுபடும் போது கவனம் அவசியம். இந்த தலைசுற்றல் வயது வித்தியாசம் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதால் நோய் சரியாகும் வரை கண்டிப்பாக ஓய்வு அவசியம்.’’

- இந்துமதி