அரசுப் பள்ளி பயோமெட்ரிக் கருவியும் இந்திமொழி திணிப்பும்!



*சர்ச்சை

தமிழகத்தில் 3,688 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 4,040 மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முதல்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்துவருகின்றனர். மேலும் ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இ.எம்.ஐ.எஸ். என்ற இணையதளத்திலும், தனி சாஃப்ட்வேரிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்தபடியே பள்ளிகளை கண்காணிக்கலாம். இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பட்டுவருகிறது.


இந்நிலையில், பயோமெட்ரிக் வருகைப் பதிவுக் கருவியில் தமிழ், ஆங்கிலம் இருந்த நிலையில், தமிழுக்கு பதில் இந்திமொழி சேர்க்கப்பட்ட செய்தி ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்தி புகுத்தப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்த நிலையில், அதை நீக்கிவிட்டு தமிழை மட்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்காமல், தமிழுடன் மொத்தம் 9 மொழிகளை பயோமெட்ரிக் கருவியில் சேர்த்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியை புகுத்தியதை கண்டித்தால், வேறு மொழிகளையும் சேர்த்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் கு. தியாகராஜனிடம் பேசினோம்...

‘‘பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய, விரிவாக்கம் செய்ய வேண்டிய, முதலீடு செய்ய வேண்டிய பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், சரி செய்யாமல் அவசர அவசரமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகைப் பதிவை உறுதிசெய்ய ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System) தமிழக அரசால் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முழுமையாக மற்றும் சீராக திட்டமிடாமலும், வடிவமைக்கப்படாமலும் அவசரக்கோலத்தில் ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்தான் நடை முறைப்படுத்த பட்டுள்ளது. முதன் முதலில் ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System) இணையத்தின் முகப்புப் பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி இடம்பெற்றிருந்தது.

அதற்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட பதிப்பு version (8.1.0.1) பயன்பாட்டிற்கு வந்தபோது தமிழ்மொழியை நீக்கிவிட்டு தமிழ் மொழிக்குப் பதிலாக இந்திமொழியையும் ஆங்கிலத்தையும் முகப்பு பக்கத்தில் பயன்படுத்த அனைவரையும் திணித்தனர். ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் கடும் எதிர்ப்பும் எழுந்த பிறகு மீண்டும் தேசிய தகவலியல் மைய மாநில தகவல் ஆணையத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட பதிப்பை (Version 8.1.0.2) பெற்று அதனை அனைவரின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இதில் தமிழ் மொழியை வலுக்கட்டயமாக திணித்தது போல் இருந்தது.

தற்போது மீண்டும் மேம்படுத்தப்பட்ட பதிப்பை (Version 8.1.0.3) பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர் இதில் ஆங்கிலத்துடன் இணைந்து தமிழ்மொழியை 9 மொழிகளுக்குள் ஒரு மொழியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வாய்ப்பாக முகப்புப் பக்கத்தில் மாற்றம் செய்துள்ளனர். இது தமிழ் மொழியை அழிக்கும் நடைமுறையாகவும் பிற மொழிகளை குறிப்பாக இந்தி மொழியைத் திணிக்கும் நடைமுறையாகவும் இருக்கும் என கல்வியாளர்கள் சாடுகின்றனர்.

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு அரசு ஊழியரும், ஆசிரியர்களும் வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அரசாணை வெளியிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும் தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு அரசு ஊழியரும், ஆசிரியர்களும் குறைந்தபட்சம் தமிழில் பத்தாம் வகுப்பு தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. தேர்ச்சி பெறாதவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி. இந்த விதிகள் நடைமுறையில் இருக்கும்போது தமிழ்மொழியைப் பின்னடைவு செய்யும் வகையில் முகப்புப் பக்கத்தை மாற்றியமைத்திருப்பது அனைவரையும் மிகுந்த ஆச்சரியத்திலும், கடும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

உடனடியாக தமிழ்மொழி அல்லாத பிற மொழிகளை ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளையும் நீக்கி தமிழ்மொழியைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர தமிழ் வளர்ச்சித் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழ்மொழியை காத்து தமிழை வளரச் செய்ய வேண்டும்’’ என்றார்.

பள்ளிக் கல்வித்துறை தொழிற்கல்வி இணை இயக்குநர் சுகன்யாவிடம் பேசியபோது, ‘‘ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் கருவியில் ஆசிரியர்களின் விவரங்களை ஆதார் அடிப்படையில் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் ஆங்கிலம், இந்தி மொழிகள் சேர்க்கப்பட்டிருந்தது.

தற்போது, பயோமெட்ரிக் கருவியில் மாற்றம் செய்யப்பட்டு மாநில மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பயோமெட்ரிக் பதிவின் முகப்புப் பதிவில் மொழி தேர்வு செய்வதற்கான புதிதாக பட்டன் இணைக்கப்பட்டுள்ளது.

அதில் 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், எந்த மொழியை வேண்டுமானாலும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் சர்வர் டெல்லியில் உள்ளது. எனவே, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை எதையும் செய்யவில்லை. எனவே, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது’’ என்றார்.

 - தோ.திருத்துவராஜ்