புறக்கணிக்கப்படும் வேளாண் தொழிற்கல்வி படிப்பு!



*சர்ச்சை

சட்டம் அளித்துள்ள கல்வி உரிமைகளையும் வாழ்வதற்கான, மதிக்கப்படுவதற்கான, சமமாக நடத்தப்படுவதற்கான உரிமைகளையும் காப்பதற்கே பெரும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. சட்டத்தில் எல்லாமே அலங்கார வார்த்தைகளாக உள்ளன என்பதற்கேற்ப தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை விதிகள் உள்ளன.

பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பட்டப்படிப்புகளுக்கு மேல்நிலைக் கல்வியில் (+1,+2) இரண்டாண்டுகள் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு வெறும் 5% இடங்களே ஒதுக்கப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 27 தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்கள் சேர்வதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கே வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல விமர்சனங்களைக் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி நம்முன் வைக்கிறார்…



‘‘ஈரோடு மாவட்டம், அந்தியூர் கொங்காடை மலைப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களில் இப்போதுதான் சந்திரன் என்ற பழங்குடி மாணவர் முதன்முதலாக 12ஆம் வகுப்புப் படிப்பை முடித்தார். 12ஆம் வகுப்பில் இவர் படித்ததோ வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவு. அடுத்து, இளம் அறிவியல் வேளாண்மைப் பட்டப்படிப்பிற்கும் (B.Sc., Agri), கால்நடை மருத்துவப் படிப்பிற்கும் (B.V.Sc., & AH) விண்ணப்பித்தார். ஆனால், இப்படிப்புகளில் 12ஆம் வகுப்பில் வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு இருக்கும் 44 இடங்களுக்கும் இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் 12ஆம் வகுப்பில் 444 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற சந்திரனுக்கு இடம் கிடைக்கவில்லை. கால்நடை மருத்துவம் படிக்கவும் வெறும் 18 இடங்களே ஒதுக்கப்பட்டன இப்பாடப்பிரிவு மாணவர்களுக்கு. பழங்குடியினர் இடஒதுக்கீட்டு வரிசையில் சந்திரன் முதலிடம். ஆனால், 100 இடங்கள் இருந்தால்தானே பழங்குடியினருக்கு ஒரு இடம் கிடைக்கும். இதனால் சந்திரனுக்கு இடமில்லை. வேளாண்மைப் பட்டப்படிப்பிலோ அல்லது கால்நடை மருத்துவப் படிப்பிலோ சேர்வதற்காக பழங்குடி மாணவர் சந்திரன் நீதிமன்றம் சென்று சட்டப்போராட்டம் நடத்திதான் தனக்கான கல்வி உரிமையைப் பெறவேண்டியுள்ளது.’’ என்று வேதனையோடு தெரிவிக்கிறார் சு.மூர்த்தி.

‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விதியின்படி மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப் பிரிவில் (VOCATIONAL STREAM) படித்த மாணவர்களுக்கு B.Sc.(Hons.) Agriculture, B.Sc.(Hons.) Horticulture, B.Sc.(Hons.) Forestry and B.Tech. (Agricultural Engineering) ஆகிய நான்கு படிப்புகளுக்கு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் வெறும் 5 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிற்பாடப் பிரிவினருக்கான இடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை. மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் (+2) பொதுப்பாடப் பிரிவில் (Academic stream) படித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 95 சதவீத இடங்களும், தனியார் இணைப்புக் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 5220 இடங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 140 இடங்கள், தொழில் நிறுவனங்கள் பரிந்துரைப்பவர்களுக்கு 140 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், வேளாண்மை தொழிற்பாடப் பிரிவில் (Vocational stream) படித்த மாணவர்களுக்கு வெறும் 44 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் (TNAU Constituent colleges) 5 சதவீத இடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு கருதப்படமாட்டாது என்பதும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான விதிமுறையாகும்.


கால்நடை மருத்துவப் படிப்பிற்கும் (B.V.Sc.,&AH) மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப் பிரிவில் (VOCATIONAL STREAM) படித்த மாணவர்களுக்கும் வெறும் 5 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 360 இடங்களில் வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவில் (Vocational Stream) படித்த மாணவர்களுக்கு வெறும் 18 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட பல்கலைக்கழக விதிமுறைகள் மேல்நிலைக் கல்வியில் இரண்டாண்டுகள் வேளாண்மை சார்ந்த தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்களின் கல்வி உரிமையையும் கல்வியில் சம வாய்ப்பளித்தல் என்ற நெறிமுறையையும் மீறுவதாக உள்ளன’’ என்கிறார்.

தொழிற்கல்வி படிப்பு அலட்சியம்

செய்யப்படமால் அதற்குரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியதைப் பற்றி கூறும்போது, ‘‘வேளாண்மை பட்டப்படிப்புச் சேர்க்கைக்கும் கால்நடை மருத்துவப் படிப்பிற்கும் மேல்நிலைக் கல்வி வேளாண்மைத் தொழிற் பாடப்பிரிவை இரண்டாம் தரமான படிப்பாக கருதும்படியான விதிமுறைகளை உருவாக்கியிருப்பது தொழிற்கல்விப் படிப்பு (VOCATIONAL EDUCATION) நெறிகளுக்கு எதிரானது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளிலும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளிலும் சேர்வதற்கு மேல்நிலைக் கல்வியின் பொதுப் பாடப்பிரிவும் (Academic stream) தொழிற்கல்விப் பாடப்பிரிவும் (VOCATIONAL STREAM) தகுதியாக நிர்ணயிக்கப்படும் நிலையில், இரு பாடப் பிரிவினருக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கவேண்டும்.

மேல்நிலைக் கல்விப் படிப்பில் அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தொழில் நுட்பவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பப் படிப்புகள் போன்ற பல்வேறு கல்லூரிப் படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது. ஆனால், வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவு பயின்ற மாணவர்கள் மேற்கண்ட பட்டப்படிப்புகளில் சேரமுடியாது. வேளாண்மைத் தொழிற்பாடப் பிரிவு என்பது வேளாண் பட்டப்படிப்புகளுக்கும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்குமான சிறப்புத் தகுதியாகக் கருதப்பட்டு, தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு வேளாண்மைப் பட்டப்படிப்புகளிலும் கால்நடை மருத்துவப் படிப்பிலும் சேர 50% சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதே நியாயமானது. மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் உரிய திருத்தம் செய்த பிறகே நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும்’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்