உயர்ந்த லட்சியம் உங்களை உன்னதமானவர்களாக ஆக்கும்!



*இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை தொடர் 16


வாழ்வில் உயர் லட்சியங்களை தீர்மானிக்க வேண்டும் அந்த லட்சியங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கை சாதனைகளுக்கு வழி வகுக்கிறது என்பது உறுதியான ஒன்று என்கிறார் ஹெலன் கெல்லர். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அதில் முழு நம்பிக்கையுடன் முடிவுகளை எடுத்தால்தான் வெற்றி பெற முடியும். இது முடியுமா? தோற்றுவிடுவோமோ? என்று மனம் ஊசலாட்டம் ஆடினால் அந்த காரியத்தை செய்து முடிப்பது சிரமம். தைரியமாக முடிவுகளை எடுக்க வேண்டும். முடிவெடுக்க தைரியம் இல்லாதவர்கள் அடிமனதில் உள்ள பயத்தால் முடிவுகளைத் தள்ளிப்போடுவது, காரணம் சொல்வது, இப்படியான சூழலில் இருப்பவர்களால் ஒரு நாளும் வெற்றி பெறமுடியாது.


தன்னம்பிக்கை உடையவர்களிடம் எப்போதும் சுறுசுறுப்பு இருக்கும் சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பேறியாக இருந்துவிட்டால் சோறும் கிடைக்காது. ஒரு செயலைத் திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாது. எந்த ஒரு செயலையும் காலம் தவறாமலும், காலம் தாழ்த்தாமலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமலும் செய்யவேண்டும் என்றால், அவரிடம் சோம்பல் இருக்கக்கூடாது. எந்த ஒரு செயலையும் அன்றே செய்ய வேண்டும். இதற்கு சோம்பலை விரட்டும் தன்னம்பிக்கை தேவை.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு நாற்பது வயது தொடங்கிய சமயத்தில் இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராக விளங்கிய பேராசிரியர் சதீஷ் தவான், அவருக்கு ஒரு பணியைக் கொடுத்தார். அதாவது, எஸ்.எல்.வி புராஜக்ட் இந்தியாவில் தயாரிக்கப் போகின்ற செயற்கைக்கோள். இந்த திட்டப்பணிக்குத் திட்ட இயக்குநராக கலாம் நியமிக்கப்பட்டார். கலாமுக்கு மனதிலே ஒரு அச்சம். தன்னை விட வயதில் முதிர்ந்த பல விஞ்ஞானிகள் இருக்கும்போது தன்னிடம் இப்பணி தரப்பட்டுள்ளதே என்று ஒரு தயக்கம்.

கலாமின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட தவான் கலாமிடம், “கலாம் உங்களுக்கு பிரச்னையே வரக்கூடாது என்றால், நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களுக்கு எவ்விதப் பிரச்னையும் வராது’’ என்று கூறினார். அப்துல்கலாம் புரிந்துகொண்டார். தனது தயக்கத்தையும் அச்சத்தையும் விட்டுவிட்டு உடனே அயராது உழைத்தார். தேசத்திற்கு பெருமை தந்த எஸ்.எல்.வி. செயற்கைக்கோளைச் செலுத்தி சாதனையாக்கிக் காட்டினார். அதன்பின் பல சாதனைகளை விண்வெளி ஆராய்ச்சியில் நிகழ்த்தியவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற அந்தஸ்த்தையும் அடைந்தார். முடியாது என்று விலகியிருந்தால் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்க முடியுமா? சரியான முறைப்படுத்தப்பட்ட உழைப்பு இருக்குமானால் எதுவுமே சாத்தியம்தான்.

அப்துல்கலாம் அவர்களிடம் முடியும் என்ற சரியான முடிவுடன் முறைப்படுத்தப்பட்ட உழைப்பு இருந்ததால்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. இத்தகைய முடியும் என்ற ஊக்கம் சிறுவயதிலேயே கூட ஒருவரை சாதனையாளனாக ஆக்கலாம். அப்படி சாதனைக்கு வயதே இல்லை என்று நிரூபித்தவர் மங்களூருவைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்த முகம்மது சுஹைல். சிறுவயதிலேயே நூல்களைப் படிப்பதில் மிகவும் ஆர்வம்கொண்டிருந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நூல்களைப் படித்து கற்றுக்கொண்டு எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடுதலோடிருந்தார். தனது 14ம் வயதில் நடந்தால் மின்சாரம் உற்பத்தியாகும் டைல்ஸ் தகட்டை உருவாக்கினார். மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் டைல்ஸ்களைப் பதித்து அதன் மூலம் இலகுவாக மின்சாரம் கிடைக்கும் என்ற கண்டுபிடிப்பை முதன் முதலாக நிகழ்த்தியபோது அந்தக்கண்டுபிடிப்பிற்கு 50க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்தன. இருந்தபோதும் இந்த சமூகத்திற்கான ஒரு சிறந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை இளவயதிலே தீர்மானித்தார் முகம்மது சுஹைல்.

ஒரு நாள் மாலையில் நண்பர் ஒருவர் சுஹைலிடம் வந்து, ‘‘உயிரியல் பேராசிரியர் ஒருவர், கண்டுபிடிப்புகள் எப்போதும் எளிய மக்களுக்கு பயன்பட வேண்டும் அதை எப்படி கிடைக்கச் செய்வது என்பதுபற்றி ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் எளிமையாக குறைந்த செலவில் மைக்ரோஸ்கோப்பை உருவாக்கிஅதன் மூலமாக எளிமையாக மலேரியாவைக் கண்டறியலாம் என்பதை குறிப்பிட்டிருக்கிறார்’’ என்றார். உடனே சுஹைல் இதேபோன்ற கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும், அந்தக் கண்டுபிடிப்பு எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் சுஹைலின் ஆழ்மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இதை செயல்படுத்தும் விதமாக உடனே இணையத்தில் இந்தியாவின் முக்கிய பிரச்னைகளைப் பற்றி தேடினார். அதில் முதன்மையானதாக ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததை அறிந்தார். இதற்கு தீர்வு கண்டறிவதில் நிறைய சவால்கள் இருந்தன. இருந்தபோதும் தனது கண்டுபிடிப்பின் மூலமாக நமது நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்று முடிவு செய்தார் முகம்மது சுஹைல்.

பல முயற்சிகளில் ஈடுபட்டபோதும் சரியான வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனாலும் மனம்தளராமல் தொடர்ந்த ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கப்பட்டதுதான் 2 ரூபாய் பேப்பர் கருவி. இதை இரண்டு நிமிடங்களில் தயாரித்துவிடலாம். எச்சிலை அந்த பேப்பரில் வைத்தால் போதும் நிறமாற்றம் மூலம் உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துவிடலாம். எவ்வளவு ஊட்டச்சத்து குறைபாடு என்பதைக் கண்டறிய மொபைல் ஆப் ஒன்றையும் உருவாக்கி அதை வெற்றிகரமாக எனேபோயா பல்கலைக்கழக மருத்துவமனையில் சோதித்து வெற்றியும் பெற்றார். தனது கண்டுபிடிப்புகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தார் முகம்மது சுஹைல். இதை அறிந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலைக்கழகம் அவரது பெயரை நட்சத்திரம் ஒன்றுக்கு சூட்டி பெருமைப்படுத்தியது. மாணவர்கள் தங்களது பதினேழு வயதில் பொதுவாக என்ன செய்வார்கள்? எந்த கல்லூரியில் என்ன படிப்பில் சேரலாம் என்றுதானே யோசித்துக் கொண்டுடிருப்பார்கள். ஆனால், 17 வயதிலே அறிவியல் ஆய்வாளராக, சமூக அக்கறையாளராகத் திகழ்கிறார் முகம்மது சுஹைல். அவரைப் பாராட்டும் விதமாக நமது நாட்டின் குடியரசு தலைவர் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார்’ என்ற தேசிய விருதை வழங்கி பாராட்டினார்.

அதுமட்டுமல்ல இந்திய பிரதமர் முகம்மது சுஹைலை நேரில் அழைத்து பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தும் தெரிவித்தார். அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களுக்கு சொன்னது என்னவென்றால் மாணவர்கள் தங்கள் கல்வியால் பெற்ற அறிவையும், திறமையையும் கொண்டு சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அதன் மூலம் சமூக பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான். அவரது கூற்றை நினைவாக்கி இளவயதில் சாதித்து தேசிய விருது பெற்று அனைவராலும் பாராட்டைப் பெற்ற முகம்மது சுஹைலின் உன்னத லட்சியங்களால் உண்டான சாதனைகள் இன்றைய ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு உன்னத பாடமாகும்.

முகம்மது சுஹைலை போன்று ஒவ்வொரு இளைஞரும் செயல்பட முயற்சி செய்யுங்கள். அதாவது, ‘ஓர் உயர் லட்சியத்தை எடுத்துக் கொள். அதை உன் உள்ளத்தில் பாயவிடு. அதைப் பற்றியே சிந்தித்திரு, கனவுகளிலும் நினைவுகளிலும் அந்த லட்சியம் வந்து வந்து செல்லட்டும், அதை பற்றியே பேசிக்கொண்டிரு. வெற்றி கிடைக்கும் வரை ஓயாதிரு! விரைந்து செயல்படு..!’ என்ற சுவாமி விவேகானந்தர் சொன்னதை வெற்றிப் பெற போராடும் ஒவ்வொருவரும் மனதில் பதியவைத்துக்கொண்டால் நீங்களும் வெற்றியாளர்தான்! (புதுவாழ்வு மலரும்)

பேராசிரியர் முனைவர் அ முகமது அப்துல்காதர்