நீட் தேர்வு முடிவும்...மாணவர்களின் நிலையும்...



சர்ச்சை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி நீட் தேர்வு நடத்தப்பட்டே வருகிறது. அதேபோல் ஒவ்வொரு முறை தேர்வு முடிவின்போதும் மாணவர்களின் உயிரையும் இத்தேர்வு பலிவாங்கத் தவறுவதில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு விழுப்புரம் மாணவி பிரதீபா, திருச்சி மாணவி சுபஸ்ரீ என நீட் தேர்வு பலிவாங்கிவிட்டது.

பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றாலும், நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் மாணவர்களின் உயர்கல்வி மறுக்கப்படுவதே இதற்கு காரணம். அப்படியே, நீட் தேர்வில் வெற்றிபெற்றாலும் பண வசதியில்லாத ஏழை எளிய மாணவர்களால் மருத்துவம் படிக்க வாய்ப்பில்லா நிலையும் உள்ளது. அப்படியானால், ‘நீட் தேர்வு எதற்காக? அந்தத் தேர்வு முடிவுகள் சொல்வது என்ன?’ என்ற கேள்வியை கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் முன் வைத்தபோது அவர்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்ப்போம்...

நெடுஞ்செழியன் தாமோதரன், கல்வியாளர். நீட் தேர்வை பொறுத்தவரையில், எக்ஸாமினேஷன் கண்டெக்டிங் அத்தாரிட்டி அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. அதற்காகவே நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும். உதாரணமாக, மதுரையில் நீட் தேர்வு நடக்கும்போது தமிழ்மொழியில் வினாத்தாள் கொடுக்க முடியவில்லை என்பதற்காக நகல் எடுத்துக் கொடுத்துள்ளார்கள்.

அப்படியென்றால் இந்த ஓ.எம்.ஆர் விடைத்தாள் எல்லாமே உண்மையா, இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் வினாத்தாளை நகல் எடுத்து அந்த விடைத்தாளை ருத்திக்கொள்ளலாமா? இது தேர்வு முறைக்கான பாரம்பரியத்தை குலைக்கிறது. இதற்காகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு மோசமான மனஉளைச்சலை கொடுக்கும் விதிமுறைகளை வரையறுப்பவர்கள் (எக்ஸாமினேஷன் கண்டெக்டிங் அத்தாரிட்டி அமைப்பு CBSE) சரியான முறையில் தேர்வை நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இக்காரணத்திற்காகவே, தேர்வு நடத்துவதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வெழுத இத்தனைபேர் பதிவு செய்துள்ளனர் எனக் கூறியதற்கும்
தற்போது வந்துள்ள தேர்வு முடிவுகளுக்கும் வித்தியாசம் அதிகமாக உள்ளது. தேர்வு முடிவிலும் குளறுபடிகள் உள்ளன. உதார ணமாக, மாணவர்களுக்கு விடைக்குறிப்பில் ஒன்று காண்பிக்கப்படுகிறது, பின்னர் விடைக்குறிப்பில் மாற்றம் செய்துவிடுகிறார்கள்.

இன்னொரு சிக்கல் கல்விக் கட்டணம். தேர்வு முடிவு வந்தபிறகு தனியார் மருத்துவக் கல்லூரியில் 4 லட்சம் ரூபாய்் கொடுத்தால்தான் அரசு ஒதுக்கீட்டில் சேர முடியும், 12 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் தனியார் ஒதுக்கீட்டில் செல்ல முடியும். இந்தக் கட்டணங்களும் முறையாக வாங்கப்படுவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

அரசு ஒதுக்கீட்டு கட்டணமான 4 லட்சத்திற்கு பதிலாக 7 முதல் 8 லட்சமும், தனியார் ஒதுக்கீட்டு கட்டணமான 12 லட்சத்திற்கு பதிலாக 15 முதல் 16 லட்சமும் வாங்கப்படுகிறது. இதனால், மெரிட் வாங்கிய மாணவர்கள், அதாவது, 400 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்கள் அரசு இடஒதுக்கீடு முடிந்து போனால், தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்தி படிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. இதே எக்ஸாமினேஷன் கண்டெக்ட்டிங் அத்தாரிட்டிதான் அகில இந்திய நுழைவுத்தேர்வான JEE-MAINயை எவ்வித குளறுபடியும் இல்லாமல் நடத்துகிறது. இந்தப் பாரபட்சம் ஏன்?

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நீட் தேர்வை இந்த வருடத்திலேயே ரத்து செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும்அரசியலைத் தாண்டி மாணவர்களின் நலன் கருதி செயல்பட்டால் நன்றாக இருக்கும்.டாக்டர் முஹம்மது கிஸார், சமூக ஆர்வலர்.

இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு, எதிர்பார்த்ததுபோல், தனியார் கோச்சிங் நிறுவனத்திற்கு லட்சக் கணக்கில் கொடுக்க வசதிபடைத்த மாணவர்கள் மட்டும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார்கள். தமிழ்மொழியில் தேர்வு எழுதியவர்களில் வெறும் 2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக அளவில் ஆங்கில, ஹிந்தி மொழியில் எழுதியவர்களின் தேர்ச்சி வேறுவிதமான சந்தேகங்களை உருவாக்குகிறது.

தமிழ் மொழி வினாத்தாளில் உள்ள பிழைகளுக்கு, கூடுதல் மதிப்பெண் தராதது, அந்த மாணவர்களுக்கு இழைத்த  அநீதி. நீட்டில் தகுதி பெற இந்த ஆண்டு குறைந்த மதிப்பெண் 13%. ஆனால், மாநிலப் பாடங்களில் முன்பு தகுதி பெற 50%. எனவே, தரம் கூடவில்லை. நீட் தகுதி பெற்ற 7.2 லட்சம் மாணவர்களில் வெறும் 50,000 பேருக்கு மட்டும்தான் அரசுக் கல்லூரி மற்றும் அரசு கோட்டாவில் இடம். மற்ற 6.5 லட்சம் மாணவர்களின் 13% தகுதி பெற்ற மாணவர்களிலிருந்து நன்கொடை (Donation) பெற்றுக்கொண்டு தனியார் கல்லூரிகள் நிரப்பிக்கொள்ளும்.க.சரவணன், கல்வியாளர்.

நீட் தேர்வின் தோல்விக்கு காரணம் மனப்பாட கல்வி முறை. பதினோராம் வகுப்புப் பாடங்கள் முழுமையாக நடத்தப்படாமல் இருப்பதும், தாய்மொழிக் கல்வி முக்கியத்துவம் உணராமல், வேற்று மொழியில் புரிதல் இன்றி படிப்பதும் நீட் தோல்விக்கான முக்கிய காரணம். பல கல்விமுறை உள்ள தமிழ்நாட்டில் அகில இந்திய பொதுத் தேர்வை எழுதுவதென்பது பாகுபாட்டின் உச்சம்.

கல்வி மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்வதன் மூலம் மருத்துவச் சேர்க்கையில் உள்ள பாகுபாடு களையப்படும். பாடத்திட்டம், பாடப் புத்தகத்தை மாற்றியமைப்பதுடன் நின்றுவிடாமல், மதிப்பீடு முறைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்துவகையான போட்டித்தேர்வுகளிலும் பங்குபெற்று தேர்ச்சி பெறுவதற்கு பல விடைகள் கொடுத்து சரியானதைத் தேர்ந்தெடுக்க வைக்கும் (MCQ) தேர்வுகளை அடிப்படை கல்வியில் இருந்து பயிற்றுவிக்க வேண்டும். தாய்மொழிக் கல்வியான தமிழ்வழிக் கல்வி மூலமே மாணவரின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து தமிழ்வழிக் கல்விக்கு மாற வேண்டும்.

நீட் என்பது  மருத்துவக் கல்வி குறித்த தமிழக  மாணவர்களின் சிக்கல்  மட்டுமல்ல... தமிழ்நாட்டின் எதிர்கால நலன், கல்வி நலன் மீதான பெரும் தாக்குதல். எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- தோ.திருத்துவராஜ்