தப்பு
நாமக்கல் பரமசிவம்
 ‘‘ஏங்க, உங்களைத்தானே...’’ ‘‘சொல்லு’’ - வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருந்த சேதுராமன், பார்வையை உயர்த்தாமலே குரல் கொடுத்தார். ‘‘நம்ம பொண்ணு அகிலா எவனையோ காதலிக்கிற மாதிரி தெரியுதுங்க!’’ - ஆழ்ந்த கவலையுடன் சொன்னாள் கற்பகம். ‘‘ஏன் அப்படிச் சொல்லுறே?’’ ‘‘நேரம் போறது தெரியாம எப்பவும் செல்போனில்தான் மூழ்கியிருக்கா! ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சும் தூங்காம பேசிக்கிட்டே இருக்கா...’’ ‘‘ம்ம்ம்... ஃப்ரெண்டா இருக்கக் கூடாதா?’’ ‘‘குழைஞ்சு குழைஞ்சு பேசுறா. நடுநடுவே ‘அடச்சீ’ன்னு சொல்லி வெட்கப்பட்டுச் சிரிக்கிறா!’’ என்று படபடத்தாள் கற்பகம். கொஞ்சம் யோசனைக்குப் பிறகு, அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார் சேதுராமன். ‘‘அவ யாரையும் காதலிக்கவே மாட்டா. நீ உன் வேலையைப் பாரு!’’ ‘‘அதெப்படி அவ்வளவு திடமா சொல்றீங்க?’ ‘‘நமக்குள்ள சின்னச் சின்ன பிரச்னை வந்தாக்கூட, ‘உங்களைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணி என்ன சுகத்தைக் கண்டேன்’னு நீ மூக்கைச் சிந்துறது வழக்கம். அகிலாவுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதிலிருந்து இதைக் கவனிச்சிட்டு வர்றா. அம்மாக்காரி செஞ்ச தப்பை மகள் செய்வாளா என்ன? பசிக்குது... சமையலைக் கவனி!’’ என்றார் சேதுராமன். தொங்கிய முகத்துடன் இடத்தைக் காலி செய்தாள் கற்பகம்.
|