கடைசி பக்கம்



இப்படி ஒரு விருந்தை வாழ்நாளில் அவர் சாப்பிட்டதில்லை. அந்த நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெறும் தலைமை மேலாளருக்காக முதலாளி கொடுத்த விருந்து அது. மேனேஜர்  முதல் கடைநிலை ஊழியர் வரை எந்தப் பாகுபாடும் பார்க்காமல், எல்லோரையும் நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து உபசரித்தார்கள்.

விதம்விதமாகப் பரிமாறியபோது, தனது வயிறு சிறியதாக இருப்பதை நினைத்து முதல்முறையாகக் கவலைப்பட்டார் அவர். ஆனால் ஸ்பூனும் முள்கரண்டியும் வைத்து சாப்பிடுவதில் சற்றே சங்கடமாகி  விட்டார். மீனையும் மட்டனையும் எப்படி முள்கரண்டியால் சாப்பிடுவது? சுற்றிலும் இருந்த உயர் அதிகாரிகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை கவனித்தார். அதேபோல காப்பியடித்து முயற்சித்தார். 

ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை. அதிலும் அந்த மட்டன் எலும்புகள். நண்பர்கள் வீட்டு பிரியாணி விருந்துகளில் கூட ஒன்றிரண்டுக்கு மேல் இலையில் வந்து விழாது. இங்கே நிறைய இருந்தது.  எலும்பைக் கடித்து உள்ளே இருக்கும் கறியை உறிஞ்சுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். இங்கே அது நாகரிகமாக இருக்காதே!

அவரது சங்கட முகத்தைப் பார்த்து ஹோட்டல் பணியாளர் ஒருவர் அருகே வந்தார். ‘‘என் வீட்டு நாய்க்கு எலும்பு களைக் கடிப்பது மிகவும் பிடிக்கும்’’ என்றார் இவர். உண்மையில் அவர் நாய்  வளர்ப்பதில்லை. ‘‘அதனால் என்ன? பார்சல் செய்து தருகிறேன்’’ என டேபிளில் இருந்த கிண்ணத்தை எடுத்துப் போனார் பணியாளர். வீட்டுக்குப் போனதும் ஆசை தீரக் கடிக்க வேண்டும் என  நினைக்கும்போதே பார்சல் வந்தது. ஆனால் அது பெரிதாக இருந்தது. ‘‘நாய்க்குதானே? அதான் சாப்பிட்ட தட்டுகளில் இருந்த நிறைய எலும்புகளை சேர்த்துக் கட்டினேன்’’ என்றார் பணியாளர்.
எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!