சொல்றேண்ணே... சொல்றேன்!





எங்க ஊருலல்லாம் மழைங்கறது அமெரிக்க அதிபர் ஒபாமா மாதிரிண்ணே! எப்பயாவது கலகலன்னு கைய ஆட்டிக்கிட்டு வரும். போஸ் குடுத்துட்டுப் போயிரும். பெறவு எந்த வருசம் வரும்னு சொல்ல முடியாது. அப்பப்ப வரலயேன்னு நாங்க அலட்டிக்கிடுறதும் இல்ல. அதான் நமக்குன்னு தாமிரபரணி இருக்கே... அது போதும் தண்ணிக்கு! மழையெல்லாம் நம்ம ஊருக்கு சம்மந்தமான விசயம் இல்லனு ஒரு முடிவுக்கு வந்து வாழப் பழகிட்டோம்.

ஆனா பாருங்கண்ணே... பத்தினிப் பெண்கள் மழைய ‘பெய்’னு சொன்னா பெய்யும்பாங்கல்ல... அப்படி நான் ஒருக்கா சவால் விட்டு மழை பெய்ய வச்சிருக்கேன். அதுக்காக, என்னவோ பவர் நம்மகிட்ட இருக்குனு ஒரு முடிவுக்கு வந்துராதீய! இது வேற மாதிரி பவர்... அடிப்படையிலயே நான் ராசிக்காரப் பயண்ணே. அம்பானியே எம் பேர்ல சொத்து எழுதி வைக்க வந்தாலும் அன்னிக்கி ரிஜிஸ்டர் ஆபீஸ் லீவா இருக்கும். ரேசன் கடை வரிசையில எனக்கு முன்ன நின்ன ஆளுக்குப் போட்டதோட சீனி தீந்து போவும். இளவட்ட வயசுல அப்படி ஒரு ராசி நமக்கு. சீட்டுக் கம்பெனி நடத்தி நட்டப்படுட்டு, விட்டத்தப் பாத்து விம்மிக்கிட்டிருந்தேன்ணே. அப்பதான் என்னைய ஐஸு யாவாரத்துல இழுத்து விட ஒரு ஆளு வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தாரு.
‘‘அண்ணே... வேணாம்ணே... நம்ம ராசி சரியில்ல... நாளைக்கே நான் ஐஸு வண்டியத் தள்ளுனேன்னா மழை கொட்டும். ஒரு ஐஸு கூட விக்காது’’ன்னு அந்தாளுகிட்ட படிச்சிப் படிச்சி சொன்னேன். கேட்டாரா?
‘‘எல... சுள்ளுபுள்ளுனு அடிக்கிற வெயிலுல பயினியே காய்க்கலாம் போலருக்கு... மழையாவது, வாரதாவது?’’ன்னு வசனம் பேசுனாரு.
‘‘நாளைக்கு மழை வந்தா, விக்காம போற ஐஸு அத்தனையும் என் கணக்குதாம்ல’’ன்னு அவரா வந்து ஆஃபர் பண்ணினாரு.
சரி, அப்புறம் உன் தலையெழுத்துன்னு நானும் சவாலை ஏத்துக்கிட்டேன்ணே. காலங்காத்தால மனுசன் எனக்காக ஐஸு வண்டிய ரெடி பண்ணி, வெள்ள ஐஸு வாங்க சாக்குக் கோணிய தோள்ல போட்டிருக்காரு... அவ்வளவுதான். ‘சோ’ன்னு புடிச்ச மழை, மத்தியானம் வரைக்கும் விடல. கோணிய அப்படியே தலவழியே போட்டுக்கிட்டு அந்த ஆளு எங்க வீட்டுக்கு வந்து வையீ வையீனு வைய்யிறாரு.


நான் என்ன செய்ய..? ஒரு மனுசன்கிட்ட சவால் விடுறதுக்கு முன்னாடி அவன் வளர்ச்சி என்ன... வரலாறு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு விடணும். நம்ம சட்டைப் பையிலதான் சனி தனிக்குடித்தனம் நடத்துறானே... ராகு கேது ரெண்டுவேரும் அங்க ரவுண்டு கட்டி ரம்மி ஆடுறானுவளே! அவனுக அக்கப்போருல அந்தாளு வந்து சிக்கிட்டாரு. அப்புறம் அந்தாளுக்காக நானும் கொஞ்ச நாளு ஐஸு யாவாரம் பண்ணி பெட்டியோட பெரண்டு விழுந்த கதையத்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே!

இதுக்கெல்லாம் முன்னாடியே நமக்கும் மழைக்கும் ஒரு வாய்க்கா தகராறு உண்டுண்ணே... நல்ல ஏப்ரல், மே மாசம்... பட்டப்பகலு! அப்ப ஊருக்குள்ள பேய் வரும்னு சொன்னாக்கூட நம்புவாங்க... மழை வரும்னு சொன்னா மடையன் கூட நம்ப மாட்டான். அப்படி ஒரு சுபயோக சுப தினத்துல, நாங்க நாலு பயலுக ஒண்ணு கூடினோம்ணே.
‘‘எல நாசரேத் தியேட்டர்ல சிவாஜி படம் போட்டிருக்கான்... மொதலுமொதலா அவுரு மகன் நடிச்சிருக்காராம்’’னு ஒருத்தன் ஆரம்பிச்சான். அப்பப் பாத்தே ஆகணும்னு ரெண்டு சைக்கிளை எடுத்துட்டுப் பறந்தோம். போற வழியில புடிச்சுது மழை.

‘‘எல சீக்கிரம்... உன்னி மிதிச்சி வேகமா போ’’ன்னு நான்தான் கத்தினேன்.
என்னைய வச்சி டபுள்ஸ் அடிக்கிறவன் ஏறி ஏறி பெடலு பண்றான். மழைய எதுத்து சைக்கிள்ல போறது தனி சுகம்ணே. முகமெல்லாம் ஊசி குத்துறாப்ல ஒரு மசாஜ் கெடைக்கும் பாருங்க... யப்பா! நான் அத ரசிச்சிக்கிட்டு வாரேன். பின்னால வந்த பயலுக எங்களை முந்தணும்னு இன்னும் சைக்கிள வேகமா மிதிக்கானுவ... ஆனாலும் முடியல. ஒரு கட்டத்துல அந்தப் பய மிதிச்ச மிதியில சைக்கிள் செயினு பட்டுனு அறுந்து தெறிச்சிருச்சி. சொடேர்னு அவன் காலு பல் சக்கரத்துல அடிச்சி, ரத்தம் கொட்டுது.
‘‘எல... வேணாம், போயிரலாமா?’’ - ஒழுங்கா யோசிச்ச ஒரே ஒருத்தனையும் நாங்க பயந்தாங்குளின்னு சொல்லி வாயடைச்சிட்டோம். ஒரு சைக்கிள்ல இருந்து இன்னொரு சைக்கிளை கால் வச்சி தள்ளிட்டே கொஞ்ச தூரம் போனோம்ணே. ‘‘அய்யோ’ன்’னு பெருசா ஒரு சத்தம். என்னானு பாத்தா, தள்ளிட்டு வந்த பய வீலுக்குள்ள கால விட்டுட்டு வீல் வீல்னு கத்திக்கிட்டு கெடக்கான். ஆக இன்னொருத்தனுக்கும் காலு அவுட்டு. காலு ஒடஞ்ச ரெண்டு பேருகிட்டயும் நல்ல சைக்கிளைக் குடுத்துட்டு, நானும் இன்னொரு பயலும் செயினு அறுந்த சைக்கிளை எடுத்தோம்ணே. அவனை உக்கார வச்சி, நான் பின்னால இருந்து தள்ளிக்கிட்டே நாலு ஊரு தாண்டி நாசரேத்துக்கு போயிச் சேர்ந்தோம். போயிச் சேர்ந்த சந்தோசமோ என்னவோ...

ஓட்டின பய உற்சாகத்துல லேசா ஹேண்டில் பாரைத் திருப்பிட்டான். எதுக்க வந்த ஒரு காயலாங்கடை டிரைசைக்கிள் மேல நேரா கொண்டு போயி விட்டோம். இரும்புச் சாமானெல்லாம் குத்திக் கிழிச்சி அந்தப் பயலுக்கும் அங்கங்க ரத்தக் காயம்.
‘‘அட அடுத்த விக்கெட்டும் போச்சி... மொத்தத்துல ரத்தக் காவு வாங்காத ஒரே ஆளு நான்தான்லே’’ன்னு ஆணவத்துல ஆடிக்கிட்டிருக்கேன்...
‘‘எல... கிறுக்காரா? உன் தோள்ல பாருலே!’’ங்கானுவ மத்தவனுவ.
ஒரு நீள கம்பி அங்க குத்தி நாப்பது அம்பது கிராம் சதையக் கொண்டு போயிருச்சுண்ணே... எல்லாரையும் விட எனக்குத்தான் பெரிய காயம். ஆனா, மழையில எல்லா ரத்தமும் கரைஞ்சி ஓடிருச்சு. அதனால அப்படி இப்படின்னு கைக்குட்டைய வச்சி மறைச்சி தியேட்டருக்குள்ள போயிட்டோம். படம் போடும்போதுதான் ஒரு விஷயம் நெனப்புக்கு வந்துச்சிண்ணே... அதாவது, அந்தப் படம் பேரே ‘சங்கிலி’! எங்க கண்ணுக்கு படம் பூரா சைக்கிள் சங்கிலிதான்ணே தெரிஞ்சுது!
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்