பிழைக்கத் தெரிந்தவன் : சுபாகர்




மொபட்டை தள்ளிக் கொண்டு வந்து அந்த மெக்கானிக் ஷாப் முன்பு நிறுத்தினார் மருதமுத்து.
‘‘என்ன ஸார் ப்ராப்ளம்?’’ என்றான் மெக்கானிக் மூர்த்தி.
‘‘ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது... என்னன்னு பாருங்க!’’
ஐந்து நிமிடம் வண்டியை ஆராய்ந்து விட்டு, ‘‘கிளட்ச் பிளேட் சுத்தம் பண்ணி போடணும் ஸார்...’’ என்றான் மூர்த்தி.
‘‘எவ்வளவு செலவாகும்?’’
‘‘நூறு ரூபா ஆகும்...’’
‘‘சரி, கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணுங்க...’’
அடுத்த அரை மணி நேரத்தில் வண்டி ரெடி. பணத்தைக் கொடுத்து வண்டியை எடுத்துக்கொண்டு, நேராக நண்பர் ராஜரத்தினம் வீட்டுக்கு வந்தார் மருதமுத்து.
‘‘ராஜரத்தினம்! உன் பொண்ணை தாராளமா அந்த மெக்கானிக் மூர்த்திக்குக் கொடுக்கலாம்...’’
‘‘என்னப்பா சொல்றே..?’’
‘‘நீ சொன்ன மாதிரியே மொபட்டோட ஸ்பார்க் பிளக்கை லூஸ் பண்ணிட்டு, ‘வண்டி ஸ்டார்ட் ஆகலை’ன்னு அந்த மூர்த்தி கடைக்குப் போனேன். சின்ன பிரச்னைதான்னு தெரிஞ்சும், கிளட்ச் பிளேட் சுத்தம் பண்ணி போடணும்னு சொல்லி நூறு ரூபாயை புடுங்கிட்டான் உன் மாப்பிள்ளை. பொழைக்கத் தெரிஞ்சவன்... கூடிய சீக்கிரம் நல்லா முன்னுக்கு வந்திடுவான். தாராளமா உன் பொண்ணை அவனுக்குக் கட்டிக் கொடு’’ என்று பச்சைக் கொடி காட்டிக் கிளம்பினார் மருதமுத்து.