சாயி : ஷீரடி பாபாவின் புனித சரிதம்





மனிதன் மண்ணிலிருந்து பிறக்கிறான். கொஞ்சம் பணபலம் சேர்ந்ததும், மண்ணை எட்டி உதைக்கிறான். கடைசியில் அவன் மண்ணாகிறான். அப்போதுதான் அவன் உண்மையை உணர்கிறான்.
- பாபா மொழி

சாயி மசூதியில் தங்கி வந்தார். ஊரெல்லாம் அவரைப் பற்றிய புகழ் பரவியது. நாநா என்பவனின் வீட்டையும் இந்த விஷயம் எட்டியது. நாநா தன் வயதான தாயாரிடம், ‘‘ஷீரடியில் சாயி என்று ஒரு அவதார புருஷன் வந்திருக்கிறாராமே, நீ பார்த்தாயா?’’ என்று வினவினான்.
‘‘நானும் கேள்விப்பட்டேன். அவனை சாயிபாபா என்கிறார்கள்.’’
‘‘வயசானவரோ?’’
‘‘இல்லை! இருபது வயசு இளைஞனாம். ஆனால், பேச்சு அறிவார்ந்த வயசானவர்களின் பேச்சாக இருக்கிறதாம். எனக்கு அவரைப் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறது. எனக்கும் வயசாகிவிட்டது. நான் கண்மூடுவதற்குள் அவரைப் பார்க்க அழைத்துப் போப்பா...’’
‘‘அதற்கென்ன, போகலாம். நீ நடந்து வர முடியுமா?’’
‘‘நானா நடக்கப் போகிறேன், அவனல்லவா என்னை நடக்க வைப்பவன்! சரி, கிளம்பு...’’
இருவரும் மெல்ல நடந்தார்கள். எதிரில் குல்கர்னி என்னும் கெட்ட நோக்கம் உடைய வைத்தியன் வந்தான். வளைந்த முதுகும் ஒன்றரைக்கண்ணும் கொண்டவன். தன் குடுமியை சரி செய்தபடி முன்னே வந்து, ‘‘என்ன நாநா, எங்கே வயசான அம்மாவையும் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாய்? அதுவும் கால்நடையாக? உங்களுக்குத்தான் வில்வண்டி இருக்கிறதே. அதில் ஏறி ஜம்மென்று வருவதை விட்டுவிட்டு, இப்படி சிரமப்பட்டு நடந்து வரணுமா? சரி போகட்டும், எங்கே போகிறீர்கள்?’’ என்று கேட்டான்.

அவன் பேச்சும் பார்வையும் நாநாவுக்கு சற்றும் பிடிக்கவில்லை. இருந்தாலும், ‘‘சாயியின் தரிசனத்திற்காகப் போகிறோம்’’ என்றான்.

‘‘யாரைப் பார்க்க..?’’
‘‘சாயியைப் பார்க்க...’’
‘‘சபாஷ். இந்த பக்கீர் ஊருக்கு வந்து எட்டு தினங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பக்தர்கள் பெருகிவிட்டார்களா? அடேய், அவனை நானும் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். சரியான கபட நாடகக்காரன். திரும்பிப் போய்விடுங்கள். நான் பவித்திரமான பிராமணன். என்னை தரிசித்தாலே போதும்... உங்களுடைய பாவமெல்லாம் பொசுங்கிவிடும். உங்கள் புத்தி எங்கே போயிற்று? அதுவும் வயசான அம்மாவுக்கு? அந்த பக்கீர் மசூதியில் இருக்கிறான். நாமோ இந்துக்கள். மசூதிக்கு நாம் எதற்குப் போகணும்? இந்து தர்மத்தைக் குலைப்பதற்காகவே அந்த பக்கீர் இங்கு வந்திருக்கிறான். வாருங்கள் இப்படி... என் காலைத் தொட்டுவிட்டு திரும்பிப் போங்கள்!’’
நாநாவின் அம்மாவுக்கு இதைக் கேட்டுக் கோபம் வந்தது.

‘‘ஐயா வைத்தியரே, தன்னுடைய தராதரம் என்ன என்பதை முதலில் அவனவன் தெரிந்து வைத்திருக்கணும். யாராவது ‘என் காலில் விழு’ என்று சொன்னால் யாரும் விழமாட்டார்கள். அதற்கான அருகதை அவனுக்கு இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். மசூதிக்கும் கோயிலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? கடவுள் வேறு, அல்லா வேறா? எல்லா இடத்திலும் கடவுள் ஒருவர்தான். இதுகூடத் தெரியாத நீ ஒரு புத்திசாலியா? அகங்காரம் உன்னை அழித்துவிடும். எங்களுடன் சாயி தரிசனத்திற்கு கிளம்பி வா’’
என்றாள்.

‘‘போங்கள்... போங்கள்... இந்து தர்மத்தை ஒழித்துவிடுங்கள். தர்மம் அழிந்தால், நீங்களும் அழிந்தீர்கள். அந்த பக்கீரிடம் அப்படி என்ன மோகமோ? சரியான மூர்க்கர்கள். கடவுளே! இவர்களுக்கு நல்ல அறிவு கொடு’’ - குல்கர்னி கத்திக்கொண்டே போனான்.
நாநாவும் அவன் அம்மாவும் சாயியிடம் வந்தார்கள். ‘‘சாயி, இவன் நாநா சோப்தார்... சிறந்த பக்திமான்’’ என்றார், அறிமுகப்
படுத்தி வைத்த மகல்சாபதி.
‘‘எனக்குத் தெரியும்.’’
‘‘அவள் அவனுக்குத் தாய்...’’

‘‘அவளையும் எனக்குத் தெரியும். அவள் என் தாயார்.’’ - சாயி சிரித்துக்கொண்டே சொன்னார். ‘‘மகல்சாபதி, அவளுக்கும் என்னைத் தெரியும். என்ன நடக்கிறது என்று பார்...’’
படி ஏறி வந்தவள், சாயியின் காலடியில் தன் கையை வைத்து, ‘‘சாயி... என் நமஸ்காரம்’’ என்றாள்.
‘‘நானி...’’ - கம்பீரமான குரலில் சாயி கூப்பிட்டார்.

அந்தக் குரலைக் கேட்ட நொடியில் அவள் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. சட்டென்று எழுந்தாள். கண்களை அகலத் திறந்து கூர்மையாகப் பார்த்தாள். ஒரு நிமிடம்தான்... கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குப் பழைய சம்பவங்கள் நினைவிற்கு வந்தன. தன்னுடைய விரல்களால் அவருடைய காதுகளை வருடி, ‘‘மகனே, என் அருமை மகனே! நீதானே! நான் உன்னை அடையாளம் கண்டுகொண்டேன். நீ அவன்தானே? அவனேதான்’’ என ஆனந்தக் கூத்தாடினாள்.
‘‘மகல்சாபதி, பார்த்தாயா? நான் சொன்னேனே... கடைசியில் தாய் தன் பிள்ளையைக் கண்டு பிடித்துவிட்டாள்.’’
‘‘எனக்கு ஒன்றும் புரியவில்லை’’ என்ற மகல்சாபதி, ‘‘சாயி, இதெல்லாம் என்ன?’’ என்றார்.
அவரைப் பார்க்காமல் சாயி சொன்னார், ‘‘ஆமாம் நானி, நான் அதே ஆள்தான். உன் மகன்தான்!’’
‘‘நாநா... அடேய், இவன் இதற்கு முன் ஷீரடிக்கு வந்திருக்கிறான். அவனையே கேள்... அப்படித்தானே என் செல்லமே?’’

‘‘ஆமாம் அம்மா. ஷீரடிக்கு முன்பு ஒருமுறை வந்திருக்கிறேன். இங்கு தங்கியிருந்தேன். உண்மைதான்.’’
அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து நானி சொன்னாள். ‘‘ஷீரடி செய்த பாக்கியம், இந்த இளைஞன் திரும்பி வந்திருக்கிறான். புண்ணிய மண் இது. அதனால் அவனை மறுபடியும் இங்கு இழுத்து வந்துவிட்டது. நம்முடைய பாக்கியமே பாக்கியம். இந்த ஷீரடி இனி காசியை விட மகத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. அதனருகில் வசிப்பவர்கள் கூட இனி இங்கு வருவார்கள். இந்த இளைஞனால் ஷீரடி புண்ணியத்தலமாகும். முக்தி அடைவதற்கான இடமாகும்...’’

அனைவரும் நிசப்தமாகி, அவள் கூறுவதைக் கேட்டார்கள். ‘‘ஆனால் ஒன்று... இனி இந்த இளைஞன் இந்த இடத்தை விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளணும். ஏனெனில், சில நாட்கள் இருப்பான்; திடீரென்று காணாமல் போவான். முன்பொரு சமயம் அப்படித்தான் செய்தான். அவனையே கேளுங்கள். என்னப்பா, நான் சொன்னது சரிதானே?’’
‘‘நீ சொன்னது முற்றிலும் சரி தாயி. இனி நான் போகமாட்டேன். கவலைப்படாதே’’ என்றார் சாயி, சிரித்துக்கொண்டே.
‘‘ஆனால் சாயி! இதெல்லாம் ஒன்றுமே புரியவில்லையே. முன்பு என்ன நடந்தது?’’ என்று வினவினார் மகல்சாபதி.

‘‘எல்லாவற்றையும் நானியைக் கேள். அவள் சொல்வாள்.’’
அவளுடைய மனத்திரையில், பழைய சம்பவங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றின.
ரக்மாவும் அவள் கணவன் சதாசிவமும் அதிகாலையிலேயே எழுந்துவிட்டார்கள். ரக்மா சப்பாத்தியும் பருப்பும் சமைக்க, அதைக் கூடையில் வைத்துக்கொண்டு இருவரும் காட்டிற்குள் சென்றார்கள். சற்று தூரம் போன பிறகு, ‘‘எங்கே உட்காரலாம்’’ என்று சதாசிவம் கேட்டான்.
‘‘வேப்பமரத்தடியில் உட்காரலாம். பசுமையான மரத்தைப் பார்த்தால் மனசுக்கு இதமாக இருக்கிறது’’ என்றாள் ரக்மா.
எதிரே வேப்பமரம் தெரிந்தது.

‘‘அங்கே பாருங்கள்... வேப்பமரத்தினடியில் ஒரு ஒளிவட்டம் தெரிகிறது!’’
அங்கிருந்து பார்த்தார்கள். ஒரு தேஜஸான இளைஞன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய தோற்றத்தைக் கண்டு இருவரும் பரவசமானார்கள். அரையில் வஸ்திரம் சுற்றியிருந்தது. பாக்கியிடமெல்லாம் வெற்றுடம்பாக இருந்தது. முகம் உருண்டை, தீர்க்கமான பார்வை. கறுப்பான சுருட்டை முடி தோளில் புரண்டது. வில்லைப் போன்ற புருவம். அதற்குக் கீழ் அழகான இமைகள். அவனுடைய உடம்பிலிருந்து ஒளிவெள்ளம் பரவி அந்தச் சூழலையே தகதகக்கச் செய்திருந்தது. வேப்பமரத்திலிருந்து உருவான நிலவைப் போல இருந்தான்.

‘‘ரக்மா, யார் இந்தப் பையன்? நமக்குத் தங்கப் புதையல் கிடைத்தது போல, இந்த தரிசனம் கிடைத்தது’’ - சதாசிவம் கைகளைக் கூப்பிக் கொண்டே, ஒருவித பரவசத்துடன் சொன்னான்.
‘‘எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. வாருங்கள், அருகில் சென்று வணங்கலாம்...’’ என்று கணவனையும் இழுத்துச் சென்றாள்.
‘‘இந்தப் பையன் பார்ப்பதற்கு ஞானேஸ்வரராக இருக்கிறான்’’ என்றாள் ரக்மா.

‘‘ஞானேஸ்வரரைவிட இவன் பெரியவன்...’’
அவனுடைய யோக நிலையைக் கலைக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் இருவரும் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். அப்போது அங்கு வந்த ரம்ஜான்பாய் என்பவன், இந்த பாலயோகியைக் கண்டு ஸ்தம்பித்தான்.
‘‘சதா... யார் இவன்?’’
‘‘தெரியாது. இப்பொழுதுதான் பார்க்கிறேன்!’’

‘‘அடேங்கப்பா, முகத்தில் என்ன தேஜஸ். இவன் சாதாரண மனிதன் அல்ல... சாட்சாத் பகவான்... அல்லாவேதான். எங்கிருந்து வந்திருக்கிறான்?’’
‘‘தெரியாது.’’
‘‘எங்கே வசிப்பவனாம்?’’
‘‘அதுவும் தெரியாது.’’
‘‘இவனையே கேட்கலாமா?’’
‘‘அவனோ சமாதி நிலையில் உட்கார்ந்திருக்கிறான். எப்படி அவனைக் கேட்பது?’’
‘‘எழுப்புவோமா?’’
‘‘வேண்டாம் வேண்டாம். அவன் விழிக்கட்டும். அப்போது கேட்கலாம்’’ என்றான் சதாசிவம்.

இந்த மாதிரி தவநிலையில் இருப்பவர்களைக் கலைத்தால், கடுங்கோபம் கொண்டு ஏதாவது சாபம் இட்டுவிட்டால் என்ன செய்வது? அவர்கள் பொறுமையுடன் காத்திருந்தார்கள். அதற்குள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூடிவிட்டார்கள். ‘‘யார் இவன்? எங்கிருந்து வந்தான்? எப்பொழுது வந்தான்? எதற்காக வந்தான்? இவன் இந்துவா, முஸ்லிமா?’’ என்று பலதரப்பட்ட கேள்விகளைத் தங்களுக்குள்ளே கேட்டுக் கொண்டு நின்றிருந்தார்கள்.

முஸ்லிம்கள் இவன் அல்லாவின் தூதுவன் என்றும், இந்துக்கள் யாரோ பெரிய மகான் என்றும் பேசிக்கொண்டார்கள். காலம் கடந்துகொண்டிருந்தது. இன்னும் அவன் தன் தியான நிலையிலிருந்து கலையவில்லை.  
இரவும் வந்துவிட்டது. ‘‘கொஞ்சம்கூட தியானத்திலிருந்து கலைய மாட்டேன் என்கிறானே...’’ என்று முணுமுணுத்தார்கள்.

‘‘பன்னிரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரே நிலையில் உட்கார்ந்திருக்கிறானே... பிறகு என்னதான் நடக்கும்?’’
‘‘பனி கொட்ட ஆரம்பித்துவிட்டது. இந்தப் பையனின் உடம்பில் துணியே இல்லை. பனி பொறுக்காமல் எழுந்திருக்கலாம்...’’
‘‘என்ன செய்யலாம்?’’
‘‘இவனால் பெரிய உபத்திரவம்தான்...’’
‘‘என்ன சொல்கிறாய்?’’
‘‘பின்னே என்ன. ஆள் பேசவும் இல்லை; நகரவும் மாட்டேங்கிறான். உதடு கூட அசையமாட்டேன் என்கிறது. இப்படிப் பட்டவனுக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்பதை நாம் எப்படி அறிய முடியும்? காலையிலிருந்து பத்து பேர் இவனுக்காக உணவு கொண்டுவந்து, அவன் தியானத்திலிருந்து கலையாததால், திருப்பி எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.’’
‘‘இப்படிச் செய்யலாம்...’’
‘‘எப்படி?’’

‘‘இங்கே இரண்டு போர்வைகளை வைத்துவிட்டுப் போவோம். ஒன்று படுக்க, இன்னொன்று போர்த்திக்கொள்ள. இரவில் சற்று விழித்தால், படுப்பதற்கு வசதியாக இருக்குமே!’’
அந்த யோசனை எல்லோருக்கும் சரியாகப்பட்டது. அதன்படி போர்வையை அருகில் வைத்தார்கள். பிறகு எல்லோரும் வணங்கிவிட்டு, அவரவர் வீட்டிற்குச் சென்றார்கள்.
(தொடரும்...)

மாற்றம் தரும் சாயி மந்திரம்

பாஹ்யாத்காரி திஸே போர
பரிக்ருதினே தோராவுனி தோர
வைராக்யாச்சா பூர்ணாவதார
ஆஷ்சர்ய பார ஸகளிகா
- ஸ்ரீஸாயி ஸச்சரித்

(வெளிப் பார்வைக்கு பையனாகக் காட்சி அளித்தார். ஆனால், செயல்களில் பெரிய மகானாக இருந்தார். வைராக்கியத்தின் முழு அவதாரம். எல்லோருக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தார்.)