சங்கீதத்தின் சகாப்தம்!





‘சங்கீத உலகில் ஓர் சகாப்தம்’ என்பது லால்குடி ஜெயராமன் அவர்களைப் பொறுத்தவரை சின்ன பாராட்டு. அவர், தியாகராஜர் சிஷ்ய பரம்பரையில் வந்த வி.ஆர்.கோபால் ஐயரின் வாரிசு. வாய்ப்பாட்டையும் வயலினையும் ஒருசேர தந்தையிடம் கற்றாலும், வயலினில் நிலைத்தவர். வயலினில் ‘லால்குடி பாணி’ என்ற தன்னிகரில்லா பாணியை உலகிற்கு வழங்கியவர். நீலாம்பரி, நாட்டக்குறிஞ்சி, மோகன ராகங்களுக்கு தனது பிரத்யேகமான டச் கொடுத்தவர். அவரது வயலினில் வெளிப்படும் ராக பாவம், மனதை மயக்கும்.

இசை மகான்களான அரியக்குடி, செம்பை, ஜி.என்.பி, மதுரை மணி ஐயர், செம்மங்குடி, நேதநூரி, கே.வி.என், வோலேட்டி, டி.கே.ஜே, பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், டி.என்.எஸ், டி.வி.எஸ், டாக்டர் ரமணி போன்றவர்களுக்கு லால்குடி வாசித்த வயலின் இசை, காலம் உள்ளவரை மறக்க முடியாதது. லால்குடி இயற்றிய கிருதிகள், தில்லானாக்கள், வர்ணங்கள் உலகப் பிரசித்தம். 1965ல் எடின்பர்க் விழாவில், லால்குடியின் வயலின் இசை சர்வதேச வயலின் மேதை யெஹுடி மெனுஹினியையே மயக்கியது. அவர் தனது இத்தாலிய வயலினை லால்குடிக்குப் பரிசாக வழங்கினார்.
பல இசை நாடகங்கள், நாட்டிய நாடகங்களில் லால்குடியின் இசை மிளிர்ந்தது. லால்குடியின் சிஷ்ய பரம்பரை மிகவும் பிரசித்தம். லால்குடி கிருஷ்ணன், லால்குடி விஜயலக்ஷ்மி, பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், எஸ்.பி.ராம், சங்கரி கிருஷ்ணன், விசாகாஹரி, சாகேதராமன், விட்டல் ராமமூர்த்தி, பத்மா சங்கர், சரஸ்வதி பிரபு, உஷா ராஜகோபாலன் என்று பல நட்சத்திரங்கள் இசை உலகில்! லால்குடியின் தங்கைகளான பத்மாவதி, ராஜலக்ஷ்மி, ஸ்ரீமதி பிரும்மானந்தம் ஆகியோரும் சிறந்த இசை விற்பன்னர்கள்.

லால்குடியின் வர்ணங்கள், தில்லானாக்கள் இல்லாத நாட்டிய நிகழ்ச்சியோ, இசை நிகழ்ச்சியோ இல்லை என்று கூறலாம். ‘சிருங்காரம்’ படத்திற்கு இவர் இயற்றிய இசைக்கு தேசிய அளவில் மிகச்சிறந்த இசையமைப்புக்கான விருது கிடைத்தது.

தன்னை வயலின் கலைஞராகக் கருதாமல், ஒரு இசை ரசிகனாகவே கடைசி வரை கருதிக் கொண்டவர் அவர். எத்தனையோ இசை மேதைகளுக்கு வாசித்த அவர், எந்த ஒரு கணத்திலும் தனது வயலின் இசை ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பியதில்லை. ‘தனி’ வாசிக்கும்போதும் அவர் இப்படித்தான் செய்வார். ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சி ரசனைக்குரியதாக அமைய வேண்டும் என விரும்புவார். லால்குடி அவர்கள் வாழ்ந்த காலம் பொற்காலம். அவர் இசையைக் கேட்டு, அவரைப் பார்த்து வாழ்ந்தவர்கள் நிஜமாகவே பாக்கியசாலிகள். இப்பேர்பட்ட சங்கீத ஜாம்பவானை இழந்து இசை உலகம் தள்ளாடி இருக்கிறது.