குட்டிச்சுவர் சிந்தனைகள்





துபாய், கத்தார், அபுதாபி, அமெரிக்கான்னு வெளிநாட்டு வேலைக்குப் போன நண்பன்கிட்ட அவன் எவ்வளவு சம்பாதிக்கிறான்னு கேட்காத... நீ அழுதுடுவ. அதே சமயம் உள்ளூருல நீ சம்பாதிச்சதுல எவ்வளவு சேர்த்து வச்சேன்னு சொல்லாத... அவன் அழுதுடுவான். ‘‘சந்தோஷமா வீடு வாங்கினேன்’’னு அவன் சொன்னா நீ அழுதுடுவ; ‘‘வீடு எவ்வளவு சந்தோஷமா இருக்கு’’ன்னு சொன்னா அவன் அழுதுடுவான். ‘‘தலைவிதி எப்படி இருக்கு பார்த்தியா’’ன்னு அவன் பேச ஆரம்பிச்சா நீ அழுதுடுவ; ‘‘தலைமுடி என்னாடா இப்படிக் கொட்டி போச்சு’’ன்னு நீ கேட்க ஆரம்பிச்சா, அவன் அழுதுடுவான். ‘‘சொந்தமா என்னென்ன இருக்கு’’ன்னு பேச ஆரம்பிச்சா நீ அழுதுடுவ, ‘‘சொந்தக்காரங்க எப்படியெல்லாம் இருக்காங்க’’ன்னு பேச ஆரம்பிச்சா அவன் அழுதுடுவான். இதனால நாம் புரிஞ்சுக்க வேண்டிய மேட்டர் என்னன்னா, அக்கரைக்கு இக்கரையும் பச்சை; இக்கரைக்கு எக்கரையும் பச்சை.

ஆசை என்பவன்(ள்) புத்தரோட கூட படிச்சவரான்னு தெரியல, ஆனா ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று அப்பவே சொல்லிட்டுப் போயிட்டாரு புத்தர். இந்த ஆசை ஆம்பளையா, பொம்பளையான்னு கூட தெரியலை. ஆனால் உண்மையில் ஆசைதான் பலப்பல மோசடிகளுக்கும் காரணமாக இருக்கிறான்(ள்). தமிழ்நாட்டுல ஏழு கோடிக்கு மேல ஆட்கள் இருக்கிறப்போ, ஏன் எல்லோரும் ஆசை மேல ஆசைப்படணும்? இத்தனைக்கும், ஆசை மேல ஆசை வச்சவங்க எல்லோரும் பாவமாதான் போயிருக்காங்க.
ஒண்ணும் புரியாம நீங்க முழிக்கிறது தெரியுது... எப்போ பார்த்தாலும் தினசரி பேப்பர்ல ஆசை காட்டி பெண் கற்பழிப்பு, ஆசை காட்டி பணம் ஏமாற்றினார், ஆசை காட்டி நகை கொள்ளைன்னு செய்திகள். இப்படி பல மோசடிகளுக்கு உடந்தையா இருக்கிற அந்த ஆசையை புடிச்சு, அது ஆம்பளையா இருந்தா ஆம்பளை ஜெயில்லயும், பொம்பளையா இருந்தா பொம்பள ஜெயில்லயும் போட்டுடலாம். இனி வருங்கால சந்ததியினர் ஆசையைக் காட்டி மோசமாகும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். எப்படி நம்ம ஐடியா!

காதல் ஒரு நம்பிக்கை, அவநம்பிக்கை விளையாட்டு. பழக ஆரம்பிக்கும்போது பையன்கிட்ட ‘‘நாம ஃபிரண்ட்ஸா மட்டும் பழகலாம்’’னு சொல்றது பொண்ணுங்களோட அவநம்பிக்கையைக் காட்டுது. ‘இப்போதைக்கு ஃபிரண்ட்ஸா இருப்போம். மெல்ல மெல்ல காதலியா மாத்திடலாம்’னு நினைக்கிறது பசங்களோட நம்பிக்கையைக் காட்டுது. பழக ஆரம்பிச்ச பின்னாடி, வாரம் வாரம் ஒரு கிப்ட் கொடுத்தாதான் தக்க வைக்க முடியும்னு காச தண்ணியா செலவு பண்றது பசங்களோட அவநம்பிக்கையைக் காட்டுது. ‘சரி... இவன இப்போதைக்கு லவ்வு பண்ணுவோம். எப்படியும் வீட்டுல அமெரிக்க மாப்பிள்ளை பார்த்திடுவாங்க’ன்னு பொண்ணுங்க நினைப்பது அவங்க நம்பிக்கையைக் காட்டுது.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்ஸ்...

ஒரு டீமே அடிக்க வேண்டிய 175 ரன்ன, ஒத்த ஆளா கெயில் காட்டு காட்டுனு காட்ட, பந்து பறக்கிற வானத்தையே வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்ன பூனே வாரியர்ஸ்தான் இந்த வார குட்டி சுவர் போஸ்டர் பாய்ஸ்.

கிங்க்ஸ் 11 பஞ்சாப்: என்னதான் பரிகாரம், கட்டிப்புடி வைத்தியம் செஞ்சாலும், அணியோட நிலைமை கவலைக்கிடம்தான். அணியோட 7, 8, 9, 10வது பவுலிங் ஸ்தானங்கள் படு மோசம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: இந்த அணி ஜாதகப்படி, ஆரம்பத்துல பிரமாதமாகவும், போகப் போக பிரதமர் மாதிரியும் ஆயிடும். அணியின் 3,4,5,9 இடங்கள் பலவீனம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: அணியோட ஜாதகத்துல பத்து கட்டம் கஷ்டம், ஆனா 2 கட்டம் அடுத்தவங்களுக்கு கஷ்டம். கெயில் கிரகம் மத்த அணிகள பார்க்கிற பார்வைனால செமி ஃபைனல் உறுதி; செமிதான் இறுதியும்.

மும்பை இந்தியன்ஸ்: என்னதான் இந்த அணியின் தன ஸ்தானம் நல்லா இருந்தாலும், ரன் ஸ்தானம் மோசமா இருக்கு. இதுவரை கேது வக்கிர புத்தில இருந்ததால ‘ழிஷீபிவீt ஷர்மாவா’ இருந்து இப்போ மீண்டும் ரோகித் ஷர்மாவா வந்ததால செமி ஃபைனல் நிச்சயம்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: சன் குழுமம் வாங்கின ராசில ரன் குழுமம் ஆயிடுச்சு. ஸ்டெயினை குரு பகவான் வலுவாகப் பார்ப்பது அணிக்கு நன்மை பயக்கும். ரன் மூலையும் ஷ்வீஸீ மூலையும் கிரகப்படி வலுவா இருப்பதால, ஃபைனல்ஸ் லட்சியம், செமி ஃபைனல் நிச்சயம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: குரு பகவானோட நேரடிப் பார்வை இருப்பதால, செமி ஃபைனல் நிச்சயம். எங்க போனாலும் தோனியோட அதிர்ஷ்ட தேவதையும் போகும்.

டெல்லி டேர் டெவில்ஸ்: சென்ற வருடம் குரு பகவான் உக்கிர பார்வை பார்த்த இந்த அணி, இந்த வருஷம் சனி பகவனின் வக்கிரப் பார்வையில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. 3,4,5ஆம் இடங்கள் பலமிழந்து கிடப்பதால் அணியை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது.

புனே வாரியஸ்: போன வருடம் முதலே ராகு, கேதுவால் குத்திக் குதறப்பட்ட ராசியில்லாத இந்த அணியில் அதை விட ராசியில்லாத ராஸ் டெய்லர் சென்றதால், மொத்த 12 கட்டங்களும் களையிழந்து காணப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: எல்லா வண்டிக்கும் ஸ்பேனர்ல கண்டம்னா, இந்த கொல்கத்தா வண்டிக்கு ஓனர்ல கண்டம். அணியின் 1, 2, 3ம் இடங்களும் 10வது கட்டமாகிய சுழல் ராசி பலமாக இருப்பதால் பெரிய அடியெல்லாம் விழாது. ஆனால் கப்புக்கு கேரண்டி இல்லை.

கடவுள் நேரில் வந்து, ‘ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டுறியா... இல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் கொசு மருந்து அடிக்கிறியா?’ன்னு கேட்டா, நான் தெருத் தெருவா போயி கொசு மருந்தே அடிக்கிறேன்னு சந்தோஷமா ஏத்துக்குவேன். சுறுசுறுப்பும் சுட்டித்தனமும் நிறைந்த இந்தக்கால குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது, ஒரு சின்ன சைஸ் கும்பிபாகம்.

நாம குழந்தையா இருக்கிறப்போ, டீச்சரோ வாத்தியாரோ கேள்வி கேட்டா வாய் திறக்க மாட்டோம்; சொந்தக்காரங்க பேசச் சொன்னா வாய் திறக்க மாட்டோம்; ஆனா திங்கிறதுக்கு கொஞ்சம் பெரிய சைஸாவே வாய திறப்போம். ஆனா இந்தக் கால குழந்தைங்க சாப்பிடுறத தவிர மீதி எல்லாத்துக்கும் வாய திறக்குதுங்க. சோறு ஊட்ட ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கூட கண்டுபிடிக்கப் போறாங்களாம்.
என் தோழி ஒருத்தர் சொன்னாங்க... ‘‘இந்தக் குழந்தைங்க வாயில ஜிப் மாதிரி இருந்தா, ஜிப்ப திறந்து அப்படியே சோற உள்ளார வச்சிடலாம்’’னு. அரசாங்கம் விலையில்லாம எதையும் தர வேணாம்... ஏன், தரவேண்டிய மின்சாரம் கூட வேணாம்... தினம் யாராவது அரசாங்க அதிகாரி, ஒத்தக்கண்ணு பூச்சாண்டியா வேஷம் போட்டு வந்தா, வேடிக்கை காமிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டிடலாம். அடுத்த தேர்தல்ல யாரு குழந்தைகள சோறு திங்க வைக்கிறாங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு.