கணவனின் ஆவி : கீதா சீனிவாசன்





‘‘இறந்து போன நெருங்கிய உறவினர்களின் ஆவிகளிடம் பேச முடியும்’’ - ஆரம்பத்தில் இதை நம்ப முடியாமல் திணறினாலும், முழுக்க முழுக்க நம்பித்தான் அந்த குக்கிராமத்துக்கு வந்து இறங்கினாள் சுதா.

அலுவலக நண்பர்கள் சொன்ன அட்ரஸைத் தேடிப் பிடித்து, அந்த வீட்டுக்குப் போனபோது, ஏற்கனவே பலர் காத்திருந்தனர். இருநூறு ரூபாய் கட்டணம். கட்டிவிட்டுக் காத்திருந்தாள். கொஞ்ச நேரத்தில் ஒரு சிறு அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள் சுதா. அங்கு நடுநாயகமாக, உடல் முழுவதும் குங்குமம் பூசிக்கொண்ட ஒரு கிழவன் எல்லோருடைய ஆவியையும் தனக்குள் வரவழைத்து ஓரிரு கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
சுதாவின் முறை வந்தது. அவள் கணவனின் பெயர், நட்சத்திரம், இறந்த இடம், இறந்த தினம்... எல்லாவற்றையும் சொன்னாள்.
சில நிமிடங்களில், ‘‘ம்... நான்தான்டி உம் புருஷன் ஞானவேல்... வந்திட்டேன். ம்... சீக்கிரம் கேளுடி... என்ன வேணும்..?’’ - கத்திய அந்தக் கிழவன், உட்கார்ந்தபடியே தஞ்சாவூர் பொம்மை போல் ஆடினான்.
சுதா கைகூப்பியபடி கேட்டாள்.

‘‘ஏதோ அவசரத்துக்கு என்னோட அஞ்சு பவுன் செயினைக் கேட்டீங்களே... அத எந்த மார்வாடி கடைல அடகு வெச்சீங்க? வீடு பூரா தேடிட்டேன்... ரசீது எதுவும் காணும்ங்க. சொல்லுங்க ப்ளீஸ்!’’