காதல் நல்லது






அந்தக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி பணிக்கான முதல் கட்ட இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேருமே இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்.
அவர்களில் ஒருவருக்கே வேலை. கம்பெனியின் எம்.டி இப்போது இன்டர்வியூ செய்தார். படித்த படிப்பு, இதுவரை வேலை செய்த அனுபவம் என கேட்கப்பட்ட கேள்விகளுக்கிடையே ‘‘நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா..?’’ என்ற கேள்வியை யாருமே எதிர்பார்க்கவில்லை.
‘‘ஆம்... நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்’’ என்று வெளிப்படையாக பதில் சொன்ன மதனுக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் தரப்பட்டது.
‘‘ஏன் சார் இப்படி ஒரு செலக்ஷன்?’’ - எம்.டியிடம் மேனேஜர் கேட்டார்.
‘‘தன்னைப் பற்றி காதலியின் மனதில் உயர்வான எண்ணங்களை விதைப்பதற்கு தன் கற்பனை சக்தியை முழு அளவில் பயன்படுத்துவது, காதலியை மிகைப்படுத்தி வர்ணிப்பது, காதலி வீட்டுக் கன்றுக்குட்டியின் பிறந்த நாள் வரை ஞாபகம் வைத்திருந்து பரிசுகள் வழங்குவது, சமயத்துக்கு ஏற்ற மாதிரி விளக்கம் கூறி நிலைமையை சமாளிப்பது... இப்படி ஏராளமான குணங்கள் காதலிக்கும்போது தானே டெவலப் ஆகிவிடும். இப்படிப்பட்ட கேரக்டர் உள்ள இளைஞன்தான், நம்ம கம்பெனி பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கு அவசியம்’’ என்றார் எம்.டி.
‘‘காதல் நல்லது’’ என்று புரிந்துகொண்டார் மேனேஜர்.