கவிதைக்காரர்கள் வீதி





சொல்லாத கதை

ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி
வனத்துக் குகையில் இருக்கிற
கிளிக்குள் இருக்கிறது
மந்திரவாதியின் உயிர்
என்று கதையைத் தொடர்கிறேன்.
கதையை நிறுத்தச் சொல்லிவிட்டு
அபிக்குட்டி கேட்கிறாள்...
‘அப்போ கிளியின் உயிர்?’
- ரவி உதயன், ஈரோடு.

வாங்காத பலி

இதுவரை யாரையும் வெட்டாத
மதுரை வீரனின்
துருப்பிடித்த அரிவாளில்
பசிக்கு அவ்வப்போது
நுனியில் செருகப்படுகிறது
ஒற்றை எலுமிச்சம்பழம்
- இரா.கமலக்கண்ணன்,
சித்தோடு.

அணையாத இரவு

விளக்கணைத்தும்
கொழுந்துவிட்டு எரிந்தது
காமம்
- என்.ஏகம்பவாணன்,
சென்னை-92.

நிற்காத ரசனை


தாயின் தாலாட்டில்
கிறங்கிப் போய்
தூளியில் தூங்கியது குழந்தை.
குழந்தையின்
மூச்சுக் காற்றொலியை
தாலாட்டாகக் கேட்டு ரசிக்கிறது
அதன் மார்பில் சாய்ந்திருந்த
பொம்மை
- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

கிடைக்காத வரம்

எல்லோருக்கும் பிடித்தமானவனாய்
ஆக வேண்டுமென வரம் கேட்டேன்.
சிரித்துக்கொண்டே
கடவுள் சொன்னார்,
தனக்கே இன்னும் அந்த வரம்
கிடைக்கவில்லை என்று!
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.