காற்று மாசு நீரிழிவு நோயை உண்டாக்குமா?



பொதுவாக நாம் காற்று மாசினால் நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் வரும் எனப் படித்திருப்போம். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் காற்று மாசு, டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் என எச்சரிக்கின்றன. இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம். 
‘‘பொதுவாக காற்று மாசு நம்முடைய நுரையீரல், சுவாசப் பாதைக்குள் அதிகப்படியான நச்சுப்பொருட்களைக் கொண்டு செல்கிறது. குறிப்பாக 2.5 மைக்ரான் நுண்துகள், சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனோக்ஸைடு, தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை, வாகனப் புகை உள்ளிட்டவை முக்கிய நச்சுப் பொருட்களாக இருக்கின்றன.  

இவை எல்லாம் காற்று மாசினை ஏற்படுத்துவதுடன் நம்முடைய சுவாசப் பாதையின் வழியாக நுரையீரலை அடைந்து நாளடைவில் ரத்தத்தில் சேர்ந்து நம்முடைய உடலில் அழற்சி நிலையை உருவாக்குகின்றன.இந்த அழற்சி நிலையில் நம்முடைய உடலானது, எதிர்ப்புத் திறன் சக்தியை அதிக அளவில் வளர்த்துக்கொள்ளும். இதனால் சைட்டோகைன்கள் தேவைக்கும் மிகுதியாக உற்பத்தி செய்யப்படும்.

இதன்விளைவாக நம்முடைய ரத்த நாளங்களின் உட்புற சுவர்களான எண்டோதீலியத்தில் தொடர்ச்சியாக பாதிப்புகள் உண்டாகும். இவ்வாறு உடல் முழுவதும் ஒருவகையான ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்பட்டு நமக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. 

அதாவது இத்தகைய நச்சுப்பொருட்களுக்கு நாம் தொடர்ச்சியாக ஆட்படும்போது, நம் உடலில் ஏற்படக்கூடிய அழற்சி நிலையினால் இன்சுலினை உற்பத்தி செய்யக்கூடிய கணையத்தின் பீட்டா செல்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அதனால் நாம் மாவுச் சத்து உள்ள பொருட்களை உண்ணும் போது முறையாக சுரக்க வேண்டிய இன்சுலின் சரியாக சுரக்காமல் போய் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், எங்கெல்லாம் காற்று மாசு அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் வெளியில் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்வார்கள். 

வீட்டிற்குள்ளே முடங்கிப் போவார்கள். அதனால், அதிக நடைப் பயிற்சி இருக்காது. ஏற்கனவே நாம் மாவுச் சத்தினை அதிகளவு எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம்.

ஆக, உடல் உழைப்பு குறைந்து, அதிக மாவுச் சத்து உட்கொள்ளும் போது இயல்பாகவே உடல் பருமனாகும். இதனால், சுரக்கப்பட்ட இன்சூலின் கூட சரியாக வேலை செய்யாமல் இன்சுலின் எதிர்ப்பு நிலை எனப்படும் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் ஏற்படும்.இப்படி இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் ஏற்படும்போது நாளடைவில் அது நீரிழிவு நோய்க்கு வித்திடும். உடல் பருமன், பெண்களுக்கு பிசிஓடி, ரத்தக் கொதிப்பு இதெல்லாம்கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நீரிழிவும், ரத்தக் கொதிப்பும் நீண்ட நாட்கள் இருந்தால் அது இதயநோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட நோய்களை வரவழைக்கக்கூடும். இப்படியாக காற்று மாசு, ஒரு சங்கிலி போல் தொடர்ச்சியாக வெவ்வேறு நோய்களை உருவாக்கும். சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி, இந்த நுண்துகள் 2.5க்கு மக்கள் ஆட்படும் விகிதத்தை முப்பது சதவீதம் குறைத்தால் நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை 4.8 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கமுடியும் எனக் கூறியுள்ளது. 

இதன்மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது, நம் உணவில் மாவுச்சத்தினை குறைத்து உண்ண வேண்டும். இனிப்பு சுவை மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நடைப்பயிற்சியும், தூக்கமும் அவசியம் வேண்டும். கூடவே உடல் மற்றும் மனம் சார்ந்த அழுத்தத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சேர்த்து காற்று மாசினை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது காற்று மாசினை அதிகரிக்கக்கூடிய பொருட்களைத் தவிர்க்க வேண்டும். 

சிலர் கொசுவை விரட்டுகிறேன் என்கிற பெயரில் குப்பைகளைக் கொளுத்தி அதன் புகையை சுவாசிக்கிறார்கள். சிலருக்கு கொசுவத்தி இல்லாமல் தூங்கமுடியாது. இது அவர்களுக்கும், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கும் அதிகமான சிக்கல்களை உருவாக்கக்கூடும். குழந்தைகளுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.

அதனால், நம் அளவில் நாம் வாகனங்களின் புகை சரியான அளவில் வெளிவருகிறதா என்பதை அவ்வப்போது சோதித்துக் கொள்ள வேண்டும். வண்டிகளை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்து பராமரிக்க வேண்டும். முடிந்தளவு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். இதன்மூலம், நாம் காற்று மாசு ஏற்படுத்துவதைக் குறைக்க முடியும். 

நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்வது நல்லது. பொது இடங்களுக்கு வரும்போது, வாகனங்களில் பயணிக்கும்போது முகக்கவசம் அணிந்துகொண்டால் இந்தக் காற்று மாசினை ஏற்படுத்தும் பொருட்களை சுவாசிப்பதைக் குறைக்க முடியும். அதன்வழியாக பிரச்னைகளை குறைக்கலாம்; நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்...’’ என்கிறார் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.

பேராச்சி கண்ணன்