மாஸ்டர்ஸ் தடகளத்தில் அசத்தும் 87 வயது மாஸ்டர்!



விளையாட்டுக்கு வயது ஒரு தடையில்லை என்பார்கள். இதற்கு ஆகச் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் சென்னையைச் சேர்ந்த கே.சுப்ரமணியன் என்கிற சுப்பு.
கடந்த ஆண்டு ஸ்வீடனில் நடந்த உலக மாஸ்டர்ஸ் அதெலடிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வெற்றி கொண்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார்.

சமீபத்தில் பெங்களூரில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் அதெலடிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் எனும் மும்முறை தாண்டுதல் ஆகிய மூன்றிலும் தங்கம் வென்று அசத்தினார். 
இப்போது ஆசிய மாஸ்டர்ஸ் அதெலடிக்ஸ் சாம்பியன்ஷிப்பிற்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். இப்படி தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கும்/ சாதிக்க துடிக்கும் இந்த மாஸ்டருக்கு வயது, அப்படி ஒன்றும் அதிகமில்லை. ஜஸ்ட் 87தான்!

ஆம். இந்த 87 வயதில்தான் தொடர்ந்து மாஸ்டர்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டு அசத்திக் கொண்டிருக்கிறார் சுப்பு. ‘‘வயசு என்பது வெறும் நம்பர்தான். இந்த ஏப்ரல் 15ம் தேதியில் 88வது வயதில் அடியெடுத்து வச்சிருக்கேன். 

ஆனா, உலக அளவில் மாஸ்டர்ஸ் போட்டிக்குப் போகும்போது அங்க 90 வயது, 100 வயதுடையவர்கள் எல்லாம் கலந்துப்பாங்க. அதனால், என்னுடையது எல்லாம் ஒரு வயசே கிடையாது...’’ எனச் சிரிக்கும் சுப்பு, வீடு முழுக்க பதக்கங்களாக அடுக்கி வைத்துள்ளார். இவை அனைத்தும் சிறு வயதில் இருந்து இப்போது மாஸ்டர்ஸ் போட்டிகள் வரை வாங்கியவை.   

‘‘நான் பொள்ளாச்சியில் ஆறாவது படிக்கிறப்பவே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்ல ஆர்வம் வந்திடுச்சு. அப்போ பள்ளியில் உயரம் தாண்டுதல் கம்பியில் நிறைய பேர் குதிச்சிட்டு இருப்பாங்க. ஒரு நாள் நாமும் பண்ணிப் பார்ப்போம்னு செஞ்சேன். ஈஸியா தாண்டிட்டேன். எல்லோரும் பாராட்டினாங்க. 

பிறகு பயிற்சியெடுத்து மாவட்ட, மாநில அளவுல போய் வெற்றிபெற்றேன்.இதனால், ஐசிஎஃப்ல ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வேலை கிடைச்சது. 1957ம் ஆண்டு அங்க வேலைக்குச் சேர்ந்தேன். மாநில அளவுல உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ரெண்டுலயும் ஜெயிச்சேன். அப்புறம், ட்ரிபிள் ஜம்ப்பும் பண்ணினால் என்னனு தோணுச்சு. பிறகு அதிலும் கலந்துக்கிட்டு ஜெயிக்க ஆரம்பிச்சேன்.

இன்டர் ரயில்வே போட்டியின் ட்ரிபிள் ஜம்ப்ல மெடல் வாங்கினேன். அப்புறம், இதே போட்டியில தேசிய அளவுல வெண்கலப் பதக்கமும் வென்றேன். இதன்பிறகு பயிற்சியாளராக மாறினேன். நிறைய வீரர், வீராங்கனைகளை உருவாக்கினேன். இதுக்கிடையில் மாஸ்டர்ஸ் அதெலடிக்ஸ் வந்தது.இந்தியாவுல மில்கா சிங்தான் மாஸ்டர்ஸ் அதெலடிக்ஸை ஆரம்பிச்சார். தொடர்ந்து ஒத்துழைப்பு தரணும்னு கேட்டுக்கிட்டார். 

அப்படியாக 1983ம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் நடந்த உலக மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில் நான் முதன் முதலா மூணு ஜம்ப் போட்டிகளிலும் கலந்துக்கிட்டேன். இதில் ட்ரிபிள் ஜம்ப்ல மட்டும் வெண்கலம் வாங்கினேன். அப்போ, எனக்கு வயசு 46.

அதுக்குப் பிறகு கலந்துக்கல. 2008ல் என் மனைவி இறந்துட்டாங்க. பிறகு மறுபடியும் மாஸ்டர்ஸ் பக்கம் கவனத்தைத் திருப்பினேன். நேஷனல் அளவுல நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல்னு எல்லாத்திலும் கலந்துக் கிட்டு மெடல் வாங்கினேன். 2014ல் ஜப்பான்ல நடந்த ஆசிய மாஸ்டர்ஸ்ல ரிலேவுல வெள்ளிப் பதக்கம் வாங்கினேன்.

இப்ப 2023ல் பிலிப்பைன்ஸில் ஆசிய மாஸ்டர்ஸ் அதெலடிக்ஸ் நடந்தது. இதில் 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்துக்கிட்டு நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல்னு நான்கிலும் தங்கப் பதக்கம் வென்றேன். அப்போதான் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட எல்லோரும் பாராட்டினாங்க.

இதன்பிறகு கடந்த ஆண்டு ஸ்வீடனின் கோதன்பெர்க்கில் உலக மாஸ்டர்ஸ் அதெலடிக்ஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றேன். அப்புறம், ட்ரிபிள் ஜம்ப்லயும், 200 மீட்டர் தடை ஓட்டத்திலும் வெள்ளி ஜெயிச்சேன். 

4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வாங்கினேன்.இந்தாண்டு தேசிய அளவுல மூன்று தங்கப் பதக்கங்கள் வாங்கியிருக்கேன். இப்ப அடுத்த போட்டிகளுக்காகப் பயிற்சி பண்ணிட்டு இருக்கேன்’’ என்றவர், வாரம் ஐந்து நாட்கள் தீவிரமாக பயிற்சி செய்கிறார்.

‘‘வாரத்துல மூணு நாட்கள் ஐசிஎஃப் மைதானத்துலயும், இரண்டு நாட்கள் நேரு ஸ்டேடியத்துலயும் காலை, மாலைனு இருமுறை வொர்க்அவுட் பண்ணுவேன். அப்புறம், ஜிம், ரன்னிங் எல்லாம் செய்வேன். உணவைப் பொறுத்தவரை எளிதாக ஜீரணிக்கக்கூடியதை தேவையான அளவு எடுத்துப்பேன். அதனால்தான் இந்த வயசிலும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியுது.

இதில் நானாவது பரவாயில்ல. சுவீடனில் என்கூட விளையாடினவங்க தொண்ணூறு, நூறு வயசு உள்ளவங்க. நல்ல ஆரோக்கியமா உடலை வச்சிருக்காங்க. அவங்க நாடுகள் எல்லாம் குளிர்ப்பிரதேசங்கள்.

அப்படி இருந்தாலும்கூட அவங்க நேரத்துக்கு ஃபிசிக்கல் பிட்னஸ் செய்றாங்க. ஜாக்கிங், ரன்னிங்னு ஏதாவது பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கிட்டே இருக்காங்க. எந்த அளவுக்கு பாடியை பிட்டா வச்சிருக்கீங்களோ அந்தளவுக்கு ஸ்போர்ட்ஸ் பண்ணலாம்னு சொன்னாங்க. அது உண்மையும்கூட. அப்புறம், ஐதராபாத்திலிருந்து நேவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் வந்திருந்தார். அவருக்கு நூறு வயசு இருக்கும். அவர் மகன் டாக்டர். அவர்தான் அவரை கூட்டிட்டு வந்தார்.

குண்டு எறிதலில் அசத்தினார். அவருக்கு சுத்தமா காது கேட்காதுனு சொன்னாங்க. நூறு வயதில் அவர்மட்டும் இருந்தார். குண்டு எறிதலில் வென்று தங்கமெடலை அவரே நடந்து வந்து வாங்கினார். இதையெல்லாம் பார்க்கிறப்ப ஆச்சரியமா இருக்கு. எனக்கு இன்னும் ஊக்கத்தைக் கொடுக்குது. 

இந்தப் போட்டிகளுக்கு எல்லாம் நாங்க எங்க சொந்த செலவுலதான் போயிட்டு வர்றோம். இதுல எங்களுக்கு எந்த லாபமும் இல்லதான். ஆனா, இந்த வயசுல ஒரு தங்க மெடல் வாங்கிட்டு வந்து நாட்டுக்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கிறப்ப ஓர் ஆத்ம திருப்தி கிடைக்குது. நம்மாலும் செய்யமுடியும்னு நினைக்கிறப்ப உடலும் மனசும் இளமையுடன் இருப்பதாக உணர வைக்குது.

அதுக்காகவே இதில் பங்கேற்கிறோம்...’’ என்ற சுப்பு, இப்போதைய இளைஞர்கள் செல்போனில் மூழ்காமல் விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோளாகச் சொல்கிறார்.

‘‘தடகளத்தைப் பொறுத்தவரை செலவே இல்லாத ஒரு விளையாட்டு. கிரிக்கெட், ஹாக்கினு ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஏதாவது ஒரு கிட் தேவை. ஆனா, இதற்கு எதுவும் தேவையில்ல. மைதானத்தில் எந்நேரமும் பயிற்சி செய்யலாம். 

நிறைய இளைஞர்கள் அதெலடிக் நோக்கி வரணும். இதனால், உடலையும் ஆரோக்கியமாக பேணலாம். அதேநேரம், சிறப்பாக விளையாடினால் வாழ்க்கையில் முன்னேறவும்  முடியும்.

நான் இந்த வயதில் ஆர்வமாக விளையாடுவதற்கு என் குடும்பம் பெரிய சப்போர்ட்டாக இருக்காங்க. எனக்கு ஒரு பையன், இரண்டு பொண்ணுங்க. பையன் ஃபிட்னஸ் பயிற்சியாளராக இருக்கார். என் பேரன் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன்ல ஸ்ட்ரெங்க்த் அண்ட் கண்டிஷனிங் கோச்சாக இருக்கார்.அதனால் எல்லோருமே எனக்கு பக்கபலமாக உதவி செய்றாங்க...’’ என்றவரிடம் அடுத்து என்ன என்றோம்.

‘‘வருகிற அக்டோபர் மாதம் ஆசிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் வருது. அப்புறம், 2026ல் கொரியாவில் உலக மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் இருக்குது. இதுக்காக தொடர்ந்து பயிற்சியெடுத்திட்டு வர்றேன். இதிலும் பதக்கம் வெல்வேன்னு நம்பிக்கை இருக்கு...’’ என முத்தாய்ப்பாய்ச் சொல்லும் மாஸ்டர் சுப்புவை வணங்கி விடைபெற்றோம்.  

ஆர்.சந்திரசேகர்