மேக்கப் போட்டால் நுரையீரல், கல்லீரல் பாதிப்பு ஏற்படும்..?
அழகு என்றால் ஆபத்தும் இருப்பது சகஜம்தான். ஆனால், அந்த ஆபத்தை சொந்தக் காசில் சூனியம் வைப்பதுபோல் நாமே வரவழைத்தால் எப்படி..?

அழகுக்கு அழகு கூட்டும் அழகு சாதனங்கள் உலகளவில் கோடிகளைக் கொட்டும் ஒரு வணிகம். ஆனாலும் அழகு சாதனங்களில் உள்ள ஆபத்துக்களை தொடர்ச்சியாக மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  அண்மையில் நாக்பூரில் உள்ள ‘நீரி’ (National Environmental Engineering Research Institute- NEERI) ஆய்வு அமைப்பு இந்தியாவில் விற்கப்படும் பத்தில் நான்கு அழகு சாதனப் பொருட்களில் ‘சிலோக்ஸ்சன்ஸ்’ (Siloxzanes) என்ற வேதியியல் பொருள் இருப்பதாகவும் இது அளவுக்கு மிஞ்சினால் நுரையீரல், கல்லீரல் சிக்கல் போன்ற இன்னும் பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கிறார்கள். 
சிலோக்ஸ்சன்ஸ் என்பது கூட்டு இரசாயனங்களால் உருவாக்கப்படும் ஒரு வேதியியல் பொருள். உதாரணமாக சிலிகான், ஆக்சிஜன் மற்றும் கார்பன் கலவையில் இருந்து இந்தக் கலப்பு வேதியியல் பொருள் உருவாக்கப்படுகிறது.  அழகு சாதனங்களில் இந்தப் பொருள் கலக்கப்படுவதற்கான காரணம் அந்த அழகு சாதனப் பொருட்கள் சில்க் போன்று மிருதுவாகவும், இலகுவாக தடவிவிடக் கூடியதாக இருப்பதும் மற்றும் உடனே காய்ந்துவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டி இருப்பதனால்தான் என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். ‘நீரி’ இந்த ஆய்வுக்கு சுமார் 174 சாம்பிள்களை எடுத்தது. இதில் ஷாம்பு, ஹேர் ஸ்பிரே, பேபி பாடி லோஷன், ஃபவுண்டேஷன், கன்சீலர்கள், லிப் கலர்ஸ், லிப் பாம், மற்றும் பாடி - ஃபேஸ் வாஷர்களை இந்த சாம்பிளுக்காக எடுத்துக்கொண்டது. இந்த ஆய்வுக்கு முன் ஐரோப்பிய ஒன்றியம் இந்த இரசாயனத்தை எப்படி வகுத்திருக்கிறது என்று கணக்கில் கொண்டது.
உதாரணமாக ஐரோப்பியஒன்றியம் இந்த சிலோக்ஸ்சன்ஸை மூன்று பிரிவுகளாக பிரித்திருந்தது. அவை: டி4, டி5 மற்றும் டி6. சிலோக்ஸ்சன்ஸில் பலவகை இருந்தாலும் இந்த மூன்று வகைகளையும் ஆபத்தானது என்று ஒன்றியம் குறிப்பிட்டிருந்தது. அதிலும் இந்த மூன்றிலும் ஏதாவது ஒன்று 0.1 சதவீதம்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தது.
சரி... இந்தியப் பொருட்களில் என்ன பிரிவு இருந்தது... எவ்வளவு இருந்தது..?
சாம்பிளுக்கு எடுக்கப்பட்ட 174 அழகு சாதனப் பொருட்களில் சுமார் 63 பொருட்களில் டி5 இருந்ததாகவும் (மொத்த பொருட்களில் 36 சதவீதம்), 39 பொருட்களில் டி6 இருந்ததாகவும் (மொத்தப் பொருட்களில் 22 சதவீதம்) ‘நீரி’ ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது. டி5 மற்றும் டி6ல் இருக்கும் மொத்த 58 பொருட்களில் ஐரோப்பிய ஒன்றியம் சொல்லிய 0.1 சதவீதத்தைவிட இந்த பொருட்களில் சுமார் 10 சதவீதம் கூடுதலாக இந்த வேதியியல் பொருள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதோடு ஒரு பொருள் 76 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் கண்டுபிடித்திருந்தது. இந்த அபாய வேதியியல்கள் இருக்கின்றன என்று லேபிள்களில் 50 சதவீத பொருட்கள் ஒப்புக்கொண்டாலும் எல்லாப் பொருட்களிலுமே கூடுதலாகவோ குறைவாகவோ இந்த வேதியியல் பொருட்கள் இருந்ததாக / இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அழகு சாதனப் பொருட்களை குறைந்தளவு பயன்படுத்துவதை யாரும் பெரிதாக எதிர்ப்பதில்லை. ஆனாலும் குறைந்த நேரம் என்றாலும் தோல் பிரச்னைகளை இவை ஏற்படுத்தாமல் போகாது. இதோடு இந்த வேதியியல் பொருள் காற்றிலும் கலப்பதால் அவை நம் சுவாசம் வழியாகவும் நம் உடலுக்குச் சென்று ஆபத்து விளைவிக்கும்.
விலங்குகளிடம் இந்த வேதியியல் பொருட்களை சோதித்துப் பார்த்ததில் நுரையீரல், கல்லீரல், எதிர்ப்புச் சக்தி, நரம்பு மண்டலங்கள் மற்றும் இனவிருத்திக்கான உடல் அமைப்புகளில் எல்லாம் இது வேதியியல் பிரச்னைகளை கொண்டுவருவதாக வெளிநாட்டினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்கு இதன் தாக்கம் பற்றிய சோதனைகள் இன்னும் செய்யப்படாவிட்டாலும் பரிசோதனை எலிகளாக நாம் இருந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் இயற்கை அழகைப் பேணுவதே சாலச் சிறந்தது!
டி.ரஞ்சித்
|