குகைக்குள் கூடைப்பந்து மைதானம்!
நம் எல்லோருமே கூடைப்பந்து மைதானத்தை உள் விளையாட்டு அரங்குகளிலோ அல்லது வெட்டவெளி நிலப்பரப்பிலோ மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், குகைக்குள் கூடைப்பந்து மைதானம் என்பது ரொம்பவே ஆச்சரியமான செய்தி.
 இப்படியொரு வியப்பான கூடைப்பந்து மைதானம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்ட இந்த மைதானம் இப்போது சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகி வருகிறது. தென்மேற்கு சீனாவில் குய்சோவ் மாகாணத்தில் இருக்கிறது நயாங் கவுன்டி. இங்கு மலைகள் சூழ்ந்த பகுதிக்குள் இருக்கும் சிறிய கிராமம் ஜின்சுன். இந்தக் கிராம மக்கள்தான் உலகில் எங்குமே பார்த்திராத வகையில் ஆழ்ந்த குகைக்குள் கூடைப்பந்து மைதானத்தை உருவாக்கியுள்ளனர்.
 காரணம் இந்தக் கிராமத்தின் புவியியல் அமைப்பு அப்படியானது. குய்சோவ் மாகாணமே அதன் கார்ஸ்ட் புவியியலுக்கு நன்கு அறியப்பட்ட ஒன்று. கார்ஸ்ட் என்பது சுண்ணாம்பு மற்றும் டோலமைட் போன்ற கரையக்கூடிய கார்பனேட் பாறைகளின் கரைப்பிலிருந்து உருவான நிலப்பரப்பு. இதில் செங்குத்தான மலைகள் சூழ அமைந்துள்ளது இந்தக் கிராமம்.
 இதனால் ஜின்சுன் கிராமத்தில் மைதானம் அமைக்க நல்ல இடமே வாய்க்கவில்லை. ஆனால், இந்த மக்கள் 1950களில் இருந்தே கூடைப்பந்து விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவர்கள் சேற்று மண்ணில் கூடைப்பந்து மைதானத்தையும் ஒரு அணியையும் உருவாக்கி விளையாடி வந்தனர்.
பிறகு 30 ஆண்டுகள் கழித்து இந்த மைதானத்தை மேம்படுத்தும் பொருட்டு இரண்டு மாடுகள் மற்றும் ஒரு பன்றியை விற்றனர். இதன்வழியாக கூடைப்பந்து பலகைகளும், வளையங்களும் வாங்கினர். இந்நிலையிலேயே புதிய கூடைப்பந்து மைதானத்தை அமைக்க வழிதேடி வந்தனர். அப்போதுதான் கிராமத்து பெரியவர்கள் சிலர் இந்தக் கார்ஸ்ட் குகையை ஏன் கூடைப்பந்து மைதானமாக மாற்றக்கூடாது எனக் கேட்டுள்ளனர்.
அப்படியாக 2016ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஜின்சுன் கிராம மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பாக ஒரு தொகையைக் கொடுத்தனர். மீதியை அரசின் வறுமை ஒழிப்பு அலுவலகம் தந்துள்ளது. பின்னர் தரமான செயற்கைக் கூடைப்பந்து மைதானம் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் கார்ஸ்ட் குகைக்குள் அமைக்கப்பட்டது. இதனுடன் ஒரு நிகழ்ச்சி மேடையும், மேல்தளமான ஆடிட்டோரியமும் உருவாக்கப்பட்டது.
போட்டிகள் நடக்கும்போது இந்த ஆடிட்டோரியத்தில் அமர்ந்து ரசிக்கலாம். இதில் ஆயிரம் பார்வையாளர்கள் அமரமுடியும் என்கின்றன தகவல்கள். சவாலான நிலப்பரப்பு என்பதால் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் கைகளாலேயே செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல. இந்தக் குகைக் கூடைப்பந்து மைதானத்தின் சிறப்பு என்னவென்றால் இதன் உள்ளே வெயில் காலத்தில் சில்லென்றும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும் என்பதுதான். இதனால், எப்போது வேண்டுமானாலும் இங்கு விளையாட முடியும்.
மழைக்காலத்திலும்கூட. தற்போது ஜின்சுன் கிராம மக்கள் ஆண்டுதோறும் இந்த மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடைப்பந்து விளையாடி மகிழ்கின்றனர்.
ஹரிகுகன்
|