கலோரி திருமணம்!



உலகிலேயே இந்தியாவில்தான் ஒரு குடும்பம் திருமணம் செய்ய தன் 25 ஆண்டுக்கால சேமிப்பை செலவழிப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.ஏனெனில் நம் நாட்டில் பலரும் தங்களது திருமணங்களை தனித்துவமான முறைகளில் செய்து கொள்ள விரும்புகின்றனர். பந்தல் ஏற்பாடு முதல் அவர்களின் ஆடைகள், உணவு என அனைத்திலும் தனித்துவத்தை விரும்புகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் திருமணத்திற்கு அடுத்தபடியாக உணவுகளை ருசிக்க விரும்புவோம். அந்த திருமணத்தில் சைவ உணவாஅல்லது அசைவ உணவு பரிமாறுகிறார்களா என்று பார்ப்போம்.ஆனால், உணவில் இருக்கும் கலோரிகள் குறித்து யாரும் யோசிக்க மாட்டோம். இந்நிலையில் இங்கு ஒரு திருமண மெனுவில் கலோரி குறித்த விவரங்களை விருந்தினர்களுக்கு அளித்து பலரையும் ஆச்சர்யமடைய வைத்துள்ளது. 

விளைவு... திருமணத்தில் வைக்கப்பட்ட உணவு மெனு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில்தான் இந்த மெனு விருந்தினர்களுக்காக ஒரு சிறு செய்தியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், ‘உங்களை சௌகரியமாக வைத்துக் கொள்ளுங்கள், உணவை வீணாக்காமல் அனுபவியுங்கள்’ என்று குறிப்பு எழுதிவிட்டு அதற்குக் கீழே பரிமாறப்படும் என்னென்ன உணவில் என்னென்ன கலோரிகள் உள்ளன என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு உணவிலும் அதன் கலோரி எண்ணிக்கை அருகில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் விருந்தினர்கள் எவ்வளவு கலோரி உட்கொள்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

பட்டியலிடப்பட்ட அனைத்து உணவுகளும் சேர்த்து 1200 கிலோ கலோரிகள் இருந்தன. விருந்தினர்கள் தங்களுக்குப் பிடித்த உணவை சுவைத்த பிறகு எவ்வளவுநேரம் நடனம் ஆடவேண்டும் என்பதையும் கலோரி பட்டியலைப் பயன்படுத்தி தீர்மானிக்கலாம் என்ற வேடிக்கையான குறிப்பும் அதில் இருந்தது!

காம்ஸ் பாப்பா