Emoji உரையாடல்...பெற்றோர்களே உஷார்!



...இப்படி வெறும் ஸ்மைலிகளில் மட்டுமே உங்கள் வீட்டு டீன் ஏஜ் அல்லது இளைஞர்கள் நண்பர்களுடன் பேசிக் கொள்கிறார்களா?

எனில் நீங்கள் அலர்ட் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்த்தம் என்கிறது உலகளாவிய பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் பல நாடுகளின் காவல் துறைகள் .
ஒரு பக்கம் தனியறை, தனி மொபைல் என இருக்கும் பிள்ளைகள் நேரடியாகவே சாட்டிங்கில் இருப்பார்கள்.

இன்னொரு புறம் என்னதான் ஸ்மார்ட் போன் யுகம் என்றாலும் இன்னமும் ஒரு சில வீடுகளில் பெற்றோர்களின் மொபைலைத் தான் பிள்ளைகள் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், அவ்வளவு கண்காணிப்பிலும் கூட மறைமுகமான ஸ்மைலிகள் மற்றும் குறியீடுகள் மூலம் அவர்கள் எதை தம்  நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்… என்ன பேசிக் கொள்கிறார்கள்… 
மேலும் இவர்கள் சமூக வலைதளங்களில் மற்றவர்களின் பதிவுகளுக்கு எப்படிப்பட்ட ஸ்மைலிகள் மூலம் தங்களது கருத்தை பதிவு செய்கிறார்கள் உள்ளிட்ட அத்தனையும் தற்போது நாம் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.

ஏனெனில் டிஜிட்டல் யுகம் வளர்ந்து வரும் தலைமுறையை என்னவாக மாற்றும், எப்படி திசை திருப்பும் என்பது யாருக்கும் புரியாத நிலையில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் ஜாலியான ஸ்மைலிகளில் கூட இவ்வளவு அர்த்தங்கள் ஒளிந்து இருக்கின்றனவா என ஆச்சரியத்தை உருவாக்குகிறது சமீபத்திய ஸ்மைலி ரிப்போர்ட் ஆய்வறிக்கை.  

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் ஸ்மைலிகளுக்கு மறைமுக அர்த்தம் என்னென்ன இருக்கின்றன… எந்தெந்த ஸ்மைலிகள் எல்லாம் 2k உலகத்தில் வேறு ஓர் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது..? முழுமையான தொகுப்பு இதோ. முதலில் நாம் மிகச் சாதாரணமாக பயன்படுத்தும் பல  நிறங்களில் உள்ள ஹார்ட்டின்கள்  மற்றும் அவற்றின் அர்த்தங்கள் என்ன ?

ஆம்; ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு

சிவப்பு நிற ஹார்ட் டின் : காதல், அன்பு, ஐ லவ் யூ .  

ஆரஞ்சு நிறம் : நட்பு அல்லது பெஸ்ட் ஃப்ரெண்ட், உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை.  

கருப்பு நிறம் : சோகம் அல்லது எதிர்ப்பு.

பச்சை நிறம் : கிரீன் சிக்னல் , ரிலேஷன்ஷிப்பிற்குத் தயார்

பிங்க் : உன்னைப் பிடிக்கும் ஆனால் காமம் இல்லை.

கத்தரிப்பூ நிறம் : நான் ரொமாண்டிக் உணர்வில் உள்ளேன் (horny). இவ்வளவு நாட்கள் கத்தரிப்பூ நிற ஹார்ட்டின் என்றால் பந்தா அல்லது ஃபேன்சி என்று நினைத்திருந்தோம். ஆனால் 2K உலகில் அதற்கு அர்த்தம் 18+ ரகம்.

மஞ்சள் நிறம் : எனக்கு விருப்பம் உள்ளது!

மஞ்சள் ஹார்ட்டின் உடன் ஒரு கேள்விக்குறி இருந்தால் ?:  உனக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேள்வி கேட்பதாக அர்த்தம்.

இவை தவிர இன்னும் 18+ ரக ஸ்மைலிகள் உள்ளன. அவை உங்களுக்கு மேலும் அதிர்ச்சியாக இருக்கும். வாழைப்பழம், அல்லது நீண்ட கத்தரிக்காய் எனில் ஆண்களின் அந்தரங்க உறுப்பு.
பீச் பழம், செர்ரி பழம், ஸ்ட்ராபெர்ரி, கிர்ணி பழங்கள் எனில் பெண்களின் அந்தரங்க உறுப்பு.

இவற்றுடன் சில முத்த ஸ்மைலிகள் சேர்த்தும் பயன்படுத்தப்படும். அவை முழுமையாகவே 18+ வரிகள். செக்ஸ்டிங் முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மைலிகள் இவை.

ஆபத்தான ஸ்மைலிகள்

எமோஜி அல்லது 80/20 விதி (/ 80/20 Rule)

பேரட்டோ விதி (Pareto Principle) என்பதன் அடிப்படையில், சில குழுக்கள் 80% பெண்கள், 20% ஆண்களை மட்டுமே விரும்புகிறார்கள் என தவறாக புரிந்து அது சார்ந்த ஆன்லைன் டீசிங்குகளும் நிகழ்கின்றன.  உங்கள் 2K பெண் சிவப்பு நிற மாத்திரை, சோயா பீன்ஸ், 100 எமோஜி இவற்றை சமூக வலைத்தளங்களில் ஏதேனும் ஆண்களுக்கு அல்லது அவளுடைய சக ஆண் நண்பர்களின் பதிவுக்கு கீழே பயன்படுத்துகிறாரா என கவனிக்கவும்.

இது நேரடியாக ஓர் ஆணை அவனது ஆண்மையின் பெயரால் கலாய்த்து வம்பிழுக்கும் 2K பெண்களின் டீசிங் எமோஜிகள். இது நேரடியாக ஓர் ஆணை அவனது ஆண்மையின் வலிமையை எதிர்த்து கேள்வி கேட்கும் அல்லது கலாய்க்கும். இது சம்பந்தப்பட்ட ஆணை அவமானத்திற்கு ஆட்படுத்தி ஆபத்தான முடிவுகள் எடுக்கத் தூண்டும்.  

ஏன்  சிவப்பு மாத்திரை எமோஜி (Red Pill)?

இது முதலில் ‘த மேட்ரிக்ஸ்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. அதில் சிவப்பு, மற்றும் நீல நிற மாத்திரைகள் கொண்ட ஒரு காட்சி வரும். ஆனால், அதில் உள்ள அர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போது ஆன்லைனில் வேறு விதமான அர்த்தத்துடன் பயன்படுத்தப்படுகிறது. 

சில ஆன்லைன் குழுக்கள் இதை பாலின வன்முறையைத் தூண்டும் ஒரு அடையாளமாக மாற்றியுள்ளனர். சிவப்பு நிற மாத்திரை எனில் பெண்களை குறைத்து மதிப்பிடும் இழிவான ஆண் என திட்டுவதாகவும் அர்த்தம்.

கிட்னி பீன் எமோஜி (Kidney Bean)

இது ‘இன்செல்’ (Involuntary Celibate - பெண்களால் புறக்கணிக்கப்படும் ஆண்கள்) குழுக்களில் ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ‘அடோலெசென்ஸ்’ தொடரில், கேட்டி கேரக்டர் இதைப் பயன்படுத்திதான் ஜேமியை ஆன்லைனில் கேலி செய்வதாகக் காட்டப்பட்டிருக்கும். அதாவது பெண்களால் புறக்கணிக்கப்படும், அல்லது பெண்களைப் பிடிக்காத குழுக்கள் என பொருள்.

ஆல்பா, பீட்டா, சிக்மா குறியீடுகள்

இவை ஆண்களை ஒரு வகையில் வரிசைப்படுத்தும் கோட்பாட்டை(Hierarchy Theory) அடிப்படையாகக் கொண்டது. ‘அனிமல்’ படத்திற்குப் பிறகு இந்தக் குறியீடுகள் இளசுகள் உலகில் மிகப் பிரபலம்.

α ஆல்பா (Alpha) - ஆண்மையால் ஆதிக்கம் செலுத்துபவர். அல்லது பெண்களை கவரக்கூடிய ஆண்.

β பீட்டா (Beta)  பெண்களை சரிசமமாக நினைப்பவர் அல்லது பெண் மீதான ஆதிக்கம் இல்லாத ஆண்.

Σ சிக்மா (Sigma) - தனியாக வாழும் சிங்கிள்,  சமூக விதிகளை பின்பற்றாமல் பெண்களுக்கு எதிரான கருத்துகள் கொண்ட ஆண். அல்லது பெண்களை இழிவாக நினைக்கும் ஆண்.

காபி கோப்பை எமோஜி (Coffee Cup)

இந்த எமோஜி சிக்மா குழுக்களால் பயன்படுத்தப்படும். பெண்களை இழிவாகப் பார்க்கும் ஒரு குறியீடாக இந்த காபி கோப்பை ஸ்மைலி பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு கப் காபிக்கு அவள் வந்துவிடுவாள் என அர்த்தம்.

போதைப் பொருள் அலெர்ட்

மிகச் சாதாரணமாக உலகம் முழுக்கவே போதைப் பொருட்கள் பெருகி விட்டன. இதனால் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்களை நல்வழிப்படுத்த அல்லது கண்காணிக்க சில ஸ்மைலிகளை காவல்துறை வழக்குகள் குறிப்பிடுகின்றன.

இதுவரை பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் எந்தெந்த ஸ்மைலிகள் மூலம் போதை வியாபாரம், விற்பனை, நிகழ்ந்துள்ளன என்னும் பட்டியலை காவல் ஆய்வறிக்கைகள் வெளியிட்டு எச்சரித்துள்ளது. இதில் கத்தரிப்பூ நிற ஹார்ட்டினுக்கு காம உணர்வு என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், கடத்தல் மற்றும் பெண்களுக்கான குற்றங்களிலும் இந்த ஸ்மைலி முதன்மையான இடம் பெறுகிறது.

ஒரு நபரிடம் இருந்து இந்த பர்பிள் நிற ஹார்ட்டின் வந்தால் அவருக்கு பெண் வேண்டும் என அர்த்தம். பாலியல் தொழிலில் இந்த ஸ்மைலி பிரபலம்.

தொடர்ந்து புகை, பனி, நெருப்பு, நாய்க்குட்டி, ஊசி, இலைகள் உள்ளிட்ட சில ஸ்மைலிகள் போதைப் பொருட்களை அடையாளப்படுத்தும் ஸ்மைலிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு இலை அல்லது செடி போன்ற ஸ்மைலி அனுப்பினால் கஞ்சா வேண்டும் எனஅர்த்தம். பனி ஸ்மைலி எனில் கொக்கெய்ன் வேண்டும் அல்லது கொக்கெய்ன் விற்பனைக்கு உள்ளது எனப் பொருள்.  

பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது ஏன்?

நவீன டிஜிட்டல் உலகில் எமோஜிகள் மற்றும் குறியீடுகள் அத்தனைக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. உங்களின் பிள்ளைகள் என்ன ஸ்மைலிகள் குறிப்பிட்டு மற்றவர்களை கலாய்க்கிறார்கள், அல்லது வருணிக்கிறார்கள் என அனைத்தும் தெரிந்து வைத்துக்கொள்வது அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்த மற்றவர்களுக்கும் கூட பாதுகாப்பாக அமையும். 

குறிப்பாக வெறும் ஸ்மைலிகளால் உண்டான அவமானத்தால் தற்கொலை, கொடூரமான கொலை, பாலியல் வன்கொடுமை அளவிற்கு சென்ற சம்பவங்கள், வழக்குகள் உலக அளவில் பல உள்ளன.

மனித இனத்திற்கு பேராபத்தான போதை விற்பனையும் இந்த ஸ்மைலிகளின் மூலமாகவும் நிகழ்கின்றன என்கையில் அவர்களின் வார்த்தைகளால் அனுப்பப்படும் செய்திகளில் மட்டுமல்ல அழகிய ஸ்மைலிகளிலும் அலெர்ட்டாக இருப்பது அவசியம்.

ஷாலினி நியூட்டன்