மரங்களை நட்டால் இதயம் ஆரோக்கியமாகும்!
ஆம். ஆண்களின் ஆரோக்கியத்தை காக்க உதவும் ‘இதயத்திற்காக மரங்கள்’ (Parks for Heart) என்ற திட்டம் அமெரிக்க நாட்டிலுள்ள ஃபிலடெல்ஃபியா மாகாணத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் இயற்கையின் மாயாஜாலம் என்கிறார்கள். குறிப்பாக குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடங்களில் இது தூய காற்றுக்கு மட்டுமல்லாமல் இதய நலம் காக்கவும் உதவுகிறது என்கிறது புதிய ஆய்வு.
 இன்னும் குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியம் மேம்படுவதாக அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அடர்த்தியான மரம் செடி கொடிகள் இருக்கும் இடங்கள் இரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயத்தை நோய்களிடம் இருந்து பாதுகாக்கிறதாம். சுருக்கமாக சொல்வதென்றால் பசுமையிடங்கள் ஒருவரின் ஒட்டுமொத்த உடற்தகுதி, மன நலம் மற்றும் சமூக நலத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2025ம் ஆண்டிற்குள் நகரின் எல்லா இடங்களிலும் இருக்கும் பசுமைப் பரப்பை 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என்ற நோக்கத்துடன் 2009ல் ‘ஃபிலடெல்ஃபியா பசுமைப் பணிகள்’ (Greenworks Philadelphia) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக இழந்த பசுமையை மீட்க ஆயிரம் கால்பந்தாட்ட மைதானங்கள் அளவு நிலப்பரப்பில் மீண்டும் பசுமையை உருவாக்கும் குறிக்கோளுடன் நகர அமைப்பு இப்போது பணிபுரிகிறது.
பசுமையிடங்களுக்கும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற பல உடல் நல பாதிப்புகளை குறைக்க உதவும் இயற்கைத் தீர்வுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதை சமீப ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.
இதயக் கோளாறு தொடர்பாக ஏற்படும் மரணங்களைத் தடுக்க குறிப்பாக ஆண்களிடம் பசுமையிடங்கள் முக்கிய பங்கு வகிப்பதை அண்மையில் டிரக்ஸெல் (Drexel) பல்கலைக்கழக டோன்சைஃப் (Dornsife) பள்ளி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை, ‘ஆரோக்கியம் மற்றும் இடங்கள் ஒன் செக்’ (Health and Place (1✔) ) என்ற இதழில் வெளிவந்துள்ளது.மேம்பட்ட மன நலம் பெற பசுமை இடங்கள் அதிகம் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். பணிபுரியும் இடங்களுக்கு பசுமையிடங்கள் வழியாக செல்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.
2008 முதல் 2015 வரை உள்ள காலத்தில் பூங்காக்கள், மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இதயக் கோளாறுகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதை ஏன் அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்? காரணம், அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள் இதயக் கோளாறுகளாலேயே நிகழ்கின்றன. இந்த விகிதாசாரத்தை மரம், செடி, கொடி உள்ளிட்ட பசுமையான சூழல் குறைக்கின்றன.
இதய நோய்களால் மட்டும் அமெரிக்காவில் ஆண்டுக்கு 7,02,880 பேர் உயிரிழக்கின்றனர் என்று சிடிசி (CDC) ஆய்வு அமைப்பு கூறுகிறது. இந்நிலையில் பசுமைப் பகுதியில் தனிநபர்கள் நேர்மறை உணர்வுகளை அதிக அளவில் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூங்காக்கள் இதயநோய்களுக்கு எதிரான வாழ்வின் வழிமுறையாக செயல்படுகின்றன.
பூங்காக்கள், நதிகள், ஏரிகளுக்கு அருகில் வசிப்பதால் அதி தீவிர மன அழுத்தம் குறைகிறது. இதனால் அறிவாற்றல் குறைபாடு, டிமென்சியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. ‘ஃபிலடெல்ஃபியா பசுமைப் பணிகள்’ இதைத்தான் அறிவியல் பூர்வமாக உலகுக்கு காட்டுகிறது. ஆனால், இதை அதிபராக இருக்கும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவே ஏற்காமல் இருப்பதுதான் நகைமுரண்.
என்.ஆனந்தி
|