வளர்ச்சிப் பணிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...



தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 27ம் தேதி 47வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த 1977ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - துர்க்கா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் உதயநிதி.
சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி முடித்துவிட்டு அமெரிக்காவில் எம்பிஏ பயின்றார். பின்னர் சென்னையில் ஸ்னோ பவுலிங் மையத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். 2002ம் ஆண்டு கிருத்திகாவைக் காதலித்து மணமுடித்தார். தற்போது இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

2007 - 2008ம் காலக்கட்டத்தில் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தைத் தொடங்கி படங்களைத் தயாரித்தார். கூடவே, பல படங்களை விநியோகமும் செய்தார்.

இதற்கிடையே அவர் 2012ம் ஆண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ மூலம் நடிகராக அறிமுகமானார். படத் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு எனப் பன்முகத் தன்மையுடன் பணியாற்றினார்.  
இந்நிலையில், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்திக் காட்டினார்.

அப்படியாக அவரின் அரசியல் பிரவேசமும் நடந்தது. பின்னர் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.இதில் திமுக கூட்டணி 38 இடங்களைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு திமுக இளைஞரணிச் செயலாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டார்.

பிறகு, 2021ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் 2022ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

அமைச்சராகப் பதவியேற்றதும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது, பாராட்டுவது, உதவித் தொகை வழங்குவது எனப் பல்வேறு விஷயங்களைச் செய்தார். இதற்கிடையே 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியது. இதற்கும் உதயநிதியின் தீவிர பிரசாரமே முக்கிய காரணியாக அமைந்தது.

இவரது அயராத உழைப்பைக் கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் 28ம் தேதி தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடுவதும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதும் என வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கிறார் உதயநிதி. இவரது கடின உழைப்பால் தமிழகம் பூத்துக் குலுங்கும். தொடரட்டும் இவரது சேவை.