ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!
ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சிச் குறைபாடு விகிதங்கள் அதிகமாக உள்ளன என சமீப ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்தியாவில் பல தசாப்தங்களாக நிலவும் சாதிய ஒடுக்குமுறை என்கிறது இந்த ஆய்வு. குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு தொடர்பாக அசோகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அஸ்வினி தேஷ்பாண்டே, மலேசியா மோனாஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராஜேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் சில முக்கிய பிரச்னைகளை அவர்கள் முன்வைத்துள்ளார்கள். அதில் முக்கியமானது, இந்தியாவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம் 35.7 சதவீதமாக உள்ளது என்பது. ஆப்பிரிக்காவின் சப்-சஹாரா பகுதிகளில் இருக்கும் 49 நாடுகளில் சராசரியாக 33.6 சதவீதமாக உள்ளதுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மோசம் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு குழந்தையின் உயரம் அவர்களின் வயதுக்கும் சராசரிக்கும் குறைவாக இருந்தால், வளர்ச்சி குன்றிய நிலையாகக் கருதப்படுகிறது. இது தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் வெளிப்படையான அறிகுறியாகும்.
இந்த ஆய்வில், குழந்தைகளின் உயரத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, இந்தியக் குழந்தைகள் ஆப்பிரிக்க சப்-சஹாரா பகுதியில் உள்ள குழந்தைகளை விட உயரம் குறைவாக இருப்பதற்கான காரணங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது ஒரு முக்கிய அம்சத்தை புறந்தள்ள வழிவகுக்கிறது என்பதை இவர்களின் ஆய்வு கண்டறிந்துள்ளது. அதாவது, இந்த ஆய்வில், இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் சமூக அடையாளம் முக்கிய முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சாதி அடையாளம் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையின் வாழ்வில் முதல் 1,000 நாட்கள் ‘பொற்காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலக்கட்டம் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இரண்டு வயதுக்குள், அவர்களின் மூளை 80% வளர்ச்சி அடைந்து, வாழ்நாளுக்கான ஆற்றலின் அடித்தளத்தை அமைக்கிறது.இந்த ஆரம்ப ஆண்டுகளில், சுகாதாரம், நல்ல ஊட்டச்சத்து, ஆரம்ப கால கற்றல் அனுபவம் மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகியவை குழந்தையின் எதிர்காலத்தை ஆழமாக வடிவமைக்கின்றன.
2021ம் ஆண்டின் உலக வங்கி அறிக்கையின்படி, “உலகளவிலான ஏழைகளின் எண்ணிக்கையில் 85%க்கும் மேற்பட்டோர் ஆப்பிரிக்காவின் சப்-சஹாரா மற்றும் தெற்காசியாவில் (இந்தியா உட்பட) உள்ளனர்...’’ இது குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்னை போன்றே, வறுமை மற்றும் வளர்ச்சியில் சவால்கள் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இதனடிப்படையில், அதிகாரபூர்வ தரவுகளைப் பயன்படுத்தி, குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு விகிதத்தில் இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க சப்-சஹாராவில் உள்ள 19 நாடுகளின் மாதிரிக்கும் இடையிலான இடைவெளிகள் குறித்த மிக சமீபத்திய மதிப்பீடுகளை ஆய்வாளர்கள் பார்த்தனர்.
இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 13.7 கோடி குழந்தைகளில் 35%க்கும் அதிகமானோர் வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் என்றும், மூன்றில் ஒரு பங்கினர் எடை குறைவாக இருப்பதாகவும் அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன.
உலகளவில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 22% வளர்ச்சிக் குறைபாடு பிரச்னைகளைக் கொண்டுள்ளனர் என்பதுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் வளர்ச்சிக் குறைபாடு பிரச்னை சராசரியைவிட 13 சதவிகிதம் அதிகமாக உள்ளது.இந்த ஆய்வில், இந்தியாவில் சமூக ரீதியாக பின்தங்கிய ஆறு பெரிய சமூகக் குழுக்களைச் சேர்த்தனர். அவர்களில் பழங்குடியினர் மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஐந்து வயதுக்கு உட்பட்ட மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள உயர் சாதிக் குழுக்களின் குழந்தைகளுக்கு,, சாதிக் கட்டமைப்பின் அடிமட்டத்தில் இருக்கும் விளிம்பு நிலை சமூக குழுக்களின் குழந்தைகளைக் காட்டிலும், வளர்ச்சிக் குறைபாடு ஏற்படும் அபாயம் 20% குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.சுகாதார நடைமுறைகள், தாய்வழி உயரம், உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை, கல்வி, ரத்த சோகை மற்றும் குடும்பத்தின் சமூக-பொருளாதார நிலை போன்ற காரணிகளைக் கணக்கிட்ட பின்னரும் இந்த முடிவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
எழுபது ஆண்டுகளாக உறுதியான நடவடிக்கை இருந்த போதிலும், இந்தியாவில் சாதி அமைப்பு ஆழமாக வேரூன்றி உள்ளதால் குழந்தைகள் மத்தியில் காணப்படும் வேறுபாடுகளும் மாறவில்லை.
“இந்தியாவில் உயர்சாதி சமூகக் குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அதிக கலோரிகள் நிறைந்த உணவு கிடைக்கின்றன. சிறந்த நோய் எதிர்ப்பு சூழலையும் கொண்டுள்ளனர். இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை...” என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
“இதன்மூலம், இந்தியாவில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், குறைவாகப் படித்த தாய்மார்கள் அல்லது ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது. இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்னையை புரிந்துகொள்வதற்கு இது ஒரு முக்கியமான பரிமாணமாகும்...” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
என்.ஆனந்தி
|