ஒரு வருடத்துக்கு செம பிஸி!
கண் சிமிட்டுகிறார் ஆஷிகா!
தம தம தம தம தையா சிறகடிக்குது மனசையா! செம செம செம ஒருத்தியா கிறங்கடிக்கிறா ஹையா!!
- இந்தப் பாடல் வரிகளுக்கு 100% நியாயம் சேர்க்கும் வகையில் செமையான பெண்ணாகவே முகம் மலர சிரிக்கிறார் நாயகி ஆஷிகா ரங்கநாத்.
தமிழில் ‘மிஸ் யூ’ இரண்டாவது படம். தெலுங்கில் ஏற்கனவே இரண்டு படம். ஆனால், கன்னடத்தில் 15க்கும் மேலான படங்களுடன் அங்கே டாப் 5 நாயகிகளில் கனவுக் கன்னி யாக வலம் வருகிறார் இந்த கன்னடத்துப் பைங்கிளி.
உங்க ஊரிலேயே செட்டில் ஆகிட்டீங்களா?
அப்படியும் சொல்லலாம். அதர்வாவுடன் தமிழில் ‘பட்டத்து அரசன்’ படம் முடிந்து கொஞ்ச நாளிலேயே ‘மிஸ் யூ’ படத்தின் வேலைகள் ஆரம்பிச்சுடுச்சு. ஆனால், அதனுடைய ரிலீஸ்தான் இவ்வளவு நாள் எடுத்துடுச்சு. இதற்கிடையில் தெலுங்கில் கொஞ்சம் பிசி. தொடர்ந்து என்னுடைய ஹோம் டவுனிலேயே (கன்னடம்) படங்கள் என்னை பிஸியாவே வச்சிருந்தது.
ஏதாவது ஒண்ணை முழுமையா செய்யணும். எல்லா பக்கமும் கால் வைத்து இருக்கிறதை விட்டுடக் கூடாது இல்லையா?! அதனால்தான் என்னை முதலில் கன்னடத்தில் நிலை நிறுத்திக்க என்னால் முடிந்த பெஸ்ட் கொடுத்துக்கிட்டு இருக்கேன். இதற்கிடையிலே நல்ல கதைகள் நல்ல கேரக்டர் வந்தால் மற்ற மொழிகளில் நடிக்க ஓகே சொல்றேன். உங்களைப் பற்றி சொல்லுங்க..?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கர்நாடக மாநிலம் தும்கூர்ல. அப்பா ரகுநாத் காண்ட்ராக்டர், அம்மா சுதா ஹவுஸ் வைஃப். என்னதான் சினி ஃபீல்ட் குடும்பப் பின்னணி இல்லைனாலும் நாங்க மொத்த குடும்பமும் சினிமா விரும்பிகள்தான். ஏதாவது ஒரு படம் வீட்டில் எப்போதும் ஓடிக்கிட்டே இருக்கும். எனக்கும் சினிமா, நடிப்பு என்கிற ஐடியா எல்லாம் இல்ல. உண்மையைச் சொன்னால் அப்படி யோசித்தது கூட கிடையாது. நான் படிச்சது பிகாம். முடிச்சுட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலை, சம்பளம்... இப்படிதான் யோசிச்சு வச்சிருந்தேன். ஆனா, கடவுள் எனக்கு வேற ஒரு பிளான் வச்சிருந்தார் போல. சினிமா குடும்பப் பின்னணி இல்லை. எப்படி இவ்வளவு பெரிய கரியரை பேலன்ஸ் செய்கிறீர்கள்?
என்னுடைய அக்கா அனுஷா ரங்கநாத்தின் சீரியல் என்ட்ரிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். அக்காவை ஃபாலோ செய்துதான் நானும் காலேஜில் கல்ச்சுரல், டான்ஸ் போட்டிகள் இப்படி ஏதாவது ஆக்டிவா செய்துகிட்டே இருந்தேன்.
தொடர்ந்து ‘மிஸ் ஃபிரெஷ் ஃபேஸ்’ பெங்களூரு போட்டியில் கலந்துகிட்டு முதல் ரன்னராக ஜெயிச்சேன். அப்போ வந்த வாய்ப்புதான் கன்னடப் படம் ‘கிரேசி பாய்’. அப்ப கூட கோ வித் ஃப்ளோ என வந்த வாய்ப்பை வேண்டாம் என சொல்ல வேண்டாமே அப்படின்னு ஓகே சொன்னேன். படம் ஆடிஷன், லுக் டெஸ்ட், ஷூட்டிங் அப்போ கூட எனக்கு எதுவுமே எமோஷனலா கனெக்ட் ஆகலை. ஆனால், படத்தை தியேட்டரில் பார்க்கும்பொழுது... அப்போ தோணுச்சு, ‘இதுதான் எனக்கான இடம்’ என்கிற எண்ணம். என்னால முடிஞ்ச பெஸ்ட் கொடுத்தேன். இப்பவும் கொடுத்துக்கிட்டு இருக்கேன். அதுதான் என்னை பிஸியாவும் பேலன்ஸ் ஆகவும் வெச்சிருக்கு.
‘மிஸ் யூ’..?
இந்த ஜெனரேஷனுக்கு ஏத்த நல்ல காதல் கதை. மேலும் எப்போதும் ஆன ஜாலி, கேலி ஹீரோயினாக இல்லாம கொஞ்சம் சுதந்திரமா போல்டாக இருக்கும் என்னுடைய சுப்புலட்சுமி கேரக்டர்.
பொதுவா காதல் கதைகள்லதான் ஹீரோயின்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும். கேரக்டரும் வலிமையாய் இருக்கும். இந்தப் படமும் அப்படிதான்.இயக்குநர் ராஜசேகர், எதையும் கண்டிப்பா கேட்க மாட்டார். ரொம்ப அமைதியா பக்குவமா சொல்லித்தான் கேட்டு வாங்குவார்.
இதில் எனக்கு மொழி வேறு தெரியாது. முதல் ஒரு வாரம் ரொம்ப கஷ்டப்பட்டேன். பிறகு நானே அவர்கிட்ட ‘கொஞ்சம் அதட்டி சத்தமா கேளுங்க சார். அப்போதான் எனக்கு புரியும்’ அப்படின்னு சொன்ன பிறகுதான் கேஷுவலா மாறினார். ஆனால், படு டெடிகேஷன். படமும் நல்லா வந்திருக்கு.
சித்தார்த்துடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க..?
இந்தப் படத்தை நான் ஒப்புக்கொண்டதுக்கு முதல் காரணமே சித்தார்த்தான். சினிமாவில் டெக்னிக்கல் ஆகவும் நடிப்பு ரீதியாகவும் அவருக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் உண்டு. அவர் ஒரு படத்துக்கு ஓகே சொல்றார்னா நிச்சயமா அந்தப் படம் நல்ல படமாதான் இருக்கும். அந்த நம்பிக்கையில்தான் நான் உடனே ஓகே சொன்னேன். ஆரம்பத்தில் கதை கேட்டுட்டு பெருசா நான் ஆர்வம் காட்டலை. ஹீரோ சித்தார்த் அப்படின்னு தெரிஞ்சவுடன் ஓகே சொன்னேன்.
ஷூட்ல நிறைய கத்துக்க முடிஞ்சது. குறிப்பா கேமரா முன்னாடி எந்த ஆங்கிளில் எப்படி நிற்கணும் என்பதில் துவங்கி சின்னச் சின்ன விஷயம் கூட அவரைப் பார்த்து கத்துக்கிட்டேன். ஷிவ்ராஜ்குமார், நாகார்ஜுனா... போன்ற சீனியர் நடிகர்களிடம் கற்றது என்ன?
பொறுமை... இவங்களை ஆன் ஸ்கிரீன் பாக்குறதுக்கும் நேரில் பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு. முற்றிலும் வேறயா இருப்பாங்க. எதையும் பொறுமையா பக்குவமா முதலில் கவனிப்பாங்க. போலவே அந்த ஸ்டார்டாம் என்கிற பில்டப் காட்டவே மாட்டாங்க. இத்தனைக்கும் நாகார்ஜுனா சார் படத்தில் நடிக்கும் பொழுது தெலுங்கில் நான் வெறும் இரண்டாவது பட நாயகிதான். ஆனால், அப்படி எந்த உணர்வும் கொடுக்காமல் அவ்வளவு கேஷுவலா சார் பழகினார். அதைத்தான் இவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.
தமிழ் சினிமா பற்றி உங்கள் பார்வை என்ன?
நல்ல நல்ல கதைகள் வருது, சூப்பரான டைரக்டர்கள் இங்கே இருந்து பாலிவுட் வரையிலும் மாஸ் காட்டுறாங்க. அவங்க படங்களில் எல்லாம் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை இருக்கு. கூடிய சீக்கிரம் நிறைவேறும்னு காத்திருக்கேன். அதுவும் மணிரத்னம் சார், வெற்றிமாறன் சார், எஸ்.எஸ்.ராஜமவுலி சார் கூட எல்லாம் வேலை செய்யணும்.
உங்க அடுத்தடுத்த படங்கள்..?
நீங்க கேட்ட மாதிரி அடுத்து ஒரு வருஷம் தமிழில்தான் பிசியா இருப்பேன். ‘சர்தார் 2’ படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். தெலுங்கில் சிரஞ்சீவி சார் கூட ‘விஸ்வம்பரா’ படம். கன்னடத்தில் துஷ்யன் சார் கூட ‘கத வைபாவா’. இன்னும் சில ப்ராஜெக்ட்ஸ் பேசிக்கிட்டு இருக்காங்க.
ஷாலினி நியூட்டன்
|