இளமை + புதுமை = நேசிப்பாயா
அதர்வா முரளியின் தம்பி ஹீரோ...
அதிதி ஷங்கர் ஹீரோயின்...
‘மாஸ்டர்’ தயாரிப்பாளரின் மகள் புரொடியூசர்
007 தீம் மியூசிக், கௌபாய் தீம், மிஷன் இம்பாசிபிள் தீம்... இப்படி ஹாலிவுட்டில் மட்டுமே இருந்த தீம் மியூசிக் மற்றும் பேக்ரவுண்ட் பிஜிஎம் மியூசிக்கை தமிழுக்கு சாத்தியப்படுத்தியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன்தான் என்றால் மிகை ஆகாது. இவர் கொடுத்த ஃபார்முலாவிற்கு சரியாக மருந்து தயாரித்தவர் யுவன் சங்கர் ராஜா. இருவரும் சேர்ந்து மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு அடுத்த மியூசிக்கல் ஹிட் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ‘நேசிப்பாயா’ - மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியின் அறிமுகப் படமாக வெளியாக இருக்கிறது.
ஸ்டைலிஷ் மற்றும் கிளாஸ் மாஸ் படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கம். படத்தை தயாரிக்கிறார் சினேகா ஆகாஷ் பிரிட்டோ. ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோவின் செல்ல மகள்.
‘‘அது எப்படி எப்பவுமே அவ்வளவு குஷியா இருக்கீங்க?’’
கேட்டவுடன் அவருக்கே உரிய பாணியில் வாய் நிறைய சிரிப்புடன் முகம் மலர்கிறார் விஷ்ணுவர்தன். ‘‘எதையும் தலைக்கு ஏத்திக்கிறது இல்ல. தமிழில் தொடர்ந்து படங்கள். திடீர் இடைவேளை. சட்டென இந்தியிலிருந்து ‘செர்ஷா’ படம் இயக்கும் வாய்ப்பு. தொடர்ந்து நானும் நடிகர் சல்மான் கானும் இணைந்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அந்தப் படம் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதே கிடையாது. ஒவ்வொரு வாய்ப்பும் தானாகவே நடந்துச்சு. இதோ இப்போ ‘நேசிப்பாயா’ படம்...’’ கண்களைச் சிமிட்டுகிறார் விஷ்ணுவர்த்தன். காதலின் அடையாளமே ரோஜா மலர்தான். ‘நேசிப்பாயா’ தலைப்பில் ரோஜா இதழ் தனியாகப் பிரிந்து விழுகிறதே?
எந்தக் காலத்திலும் காதல் காதல்தான். டெக்னாலஜியும் உலக நடப்பும்தான் காதலின் வாழ்க்கை மற்றும் அதன் போக்கை மாற்றும் காரணி. ஆனால், காதல் எப்பவுமே அதே அன்பும் பிணைப்பும் கொண்டதுதான்.
சேர்ந்து இருக்கும்போது அந்தக் காதலின் வலிமையும் அல்லது அந்தக் குறிப்பிட்ட நபர் மேல இருக்கும் பிணைப்பும் நமக்கு அவ்வளவு புரிவதில்லை. பிரிந்து போன பிறகுதான் நாம் என்ன தவறு செய்தோம் என்பது புரிய ஆரம்பிக்கும். அப்படியான ஒரு கதைதான் இந்த ‘நேசிப்பாயா’. அதனால்தான் ஒரு பெட்டல் - ரோஜா மலரின் ஓர் இதழ் - பிரிந்து விழும்படி தலைப்பில் வைத்தோம். ஜாலியா அந்த வயதுக்குரிய காதலுடன் இருக்கும் ரெண்டு பேர் ஏதோ ஒரு பிரச்னையால் பிரிஞ்சு தனியாக இருக்கும்போதுதான் அவங்க செய்த தவறு கண்ணுக்குத் தெரியுது. அதன்பிறகு என்ன நடக்குது அப்படிங்கிறதுதான் கதை.
ஆகாஷ் முரளி, அதிதி சங்கர்..?
இதுவரையிலும் கிராமத்துப் பெண்ணாகவும் அல்லது ஹோம்லி கேரக்டரிலும் மட்டும்தான் அதிதியை பார்த்திருக்கோம். உண்மையில் நல்ல மாடர்ன் உடையில் வெஸ்டர்ன் லுக்கில் இன்னும் அழகாய் இருப்பார். குறிப்பா எந்த மேக்கப்பும் இல்லாமல் சுருள் முடி... அவங்க ஸ்கின் டோன்... இதெல்லாம் கேமராவில் அவ்வளவு அழகா இருக்கும்.
இந்தக் கதைக்கு அப்படிப்பட்ட ஒரு ஃபிரஷ் முகம்தான் தேவைப்பட்டுச்சு. அதனால் அதிதி சங்கர். இந்தப் படமே ஆகாஷ் முரளி மற்றும் சினேகா தம்பதியர் முயற்சியால் நடந்ததுதான். அப்போ நான் ‘செர்ஷா’ படத்தின் வேலைகளில் மும்முரமா பார்டரில் வேலை செய்திட்டு இருந்தேன்.
அப்போ ஆகாஷ் முரளி என்னை வந்து சந்தித்தார். என் படத்தில்தான் அறிமுகமாகணும் அப்படின்னு அவ்வளவு மெனக்கெட்டார். அதுவரையிலும் இப்படி ஒரு படம் எடுக்கப் போறேன் அப்படின்னு எனக்கே தெரியாது. ஆனால், ஒரு சிலருடைய சந்திப்பு நமக்கு தொடர்ந்து இருக்கணும் என்கிற எண்ணம் உண்டாக்கும்.
அப்படித்தான் எனக்கு ஆகாஷ் தெரிந்தார்.பார்க்கதான் நல்ல உயரம். பாடி பில்ட். இப்படி இருப்பார். ஆனால், உண்மையில் அவர் ஒரு குழந்தை. அந்த கேரக்டரை அடிப்படையாக வைத்து ஒரு படம் உருவாக்கணும் அப்படின்னு ஆகாஷைப் பார்த்தவுடன் உருவான கதைதான் இந்த ‘நேசிப்பாயா’.
போலவே தயாரிப்பாளரும் நாங்க வேறு ஒருவரைத்தான் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், கதையும் நானும் ஓகே சொன்னவுடன் ஆகாஷ் மனைவி சினேகா இப்படி எல்லாம் யோசிக்காமல், தான் ஒரு தயாரிப்பாளர் என்கிற நோக்கத்தில் இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தார். அப்படித்தான் ‘நேசிப்பாயா’ உருவானது. ‘செர்ஷா’ மாதிரி ஒரு பயோபிக் கொடுத்திட்டு சட்டென்று ஒரு காதல் படம் என்றால் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?
என்னைப் பொருத்தவரை ஒரு கதை அல்லது ஒரு ப்ராஜெக்ட் என்னை எக்சைட் செய்யணும். அப்போதான் நான் அந்தப் படத்தில் தொடர்ந்து வேலை செய்வேன். தமிழில் கூட நிறைய ப்ராஜெக்ட் கேட்டாங்க. ஆனால், எனக்கு சுவாரசியமா புதுசா இருந்தால் மட்டும்தான் ஒரு கதையை நான் ஆரம்பிப்பேன். மறைந்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் கதையை சந்திப் வத்சவா எழுதிய வேளையில் அவருடன் சேர்ந்து நானும் சில கள ஆராய்ச்சியில் இருந்தேன்.
அப்போ கூட இந்த படத்தை நான் இயக்கப் போறேன் அப்படின்னு ஓர் அறிகுறி கூட எனக்கே கிடையாது. திடீர்னு சந்திப் மற்றும் கரண் ஜோஹர் ரெண்டு பேரும் சேர்ந்து ‘நீங்களே ஏன் இயக்கக் கூடாது’ அப்படின்னு கேட்டாங்க.
அப்போ ஏற்கனவே விக்ரம் பத்ராவின் கதையில் எனக்கு ஒரு எக்ஸைட்மென்ட்டும் அவர் மேலே ஒரு பெரிய மரியாதையும் இருந்தது. இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வந்ததை பெருமையா நினைச்சு ‘செர்ஷா’ படத்தை இயக்கினேன். இப்படி எனக்கு தானாகவே ப்ராஜெக்ட்டுகள் அமைந்தாலும் என்னை சுவாரசியமாக்குகிற அல்லது எனக்குப் பிடிச்ச விஷயங்கள் இருந்தால்தான் அந்த படத்தில் வேலை செய்வேன். அப்படித்தான் ‘நேசிப்பாயா’. அதனால் என்னைப் பொருத்தவரை அஜித் சாருடன் ஒரு படம் செய்துட்டேன் என்கிறதுக்காக அடுத்து இயக்கினால் பெரிய வாய்ப்புதான் என்கிற எந்த டெம்ப்ளேட்டும் கிடையாது. ‘கோ வித் எக்சைட்மென்ட்’. இதுதான் என்னுடைய மூவி மேக்கிங் ஸ்டைல்.
கல்கி கோச்லின் அவ்வளவு சுலபமாக ஒரு கதைக்கு ஓகே சொல்ல மாட்டாரே... எப்படி இந்தப் படத்தில்..?
உண்மைதான். எத்தனையோ படங்களுக்கு பல இயக்குநர்கள் அவரைக் கேட்டிருக்காங்க. ஆனால், சொந்த ப்ராஜெக்ட்டிலேயே அவங்க பிஸி. மேலும் அவ்வளவு சுலபமா வருகிற அத்தனை கேரக்டரையும் எடுத்துக்க மாட்டாங்க.
இந்தக் கதையைப் பொருத்தவரை இதுதான் கேரக்டர் அப்படின்னு சொல்லிட்டு அவங்க விருப்பத்திலேயே விட்டுட்டேன். அவராகவே முன்வந்து இந்த கேரக்டருக்கு ஓகே சொன்னார். படத்தின் கதை 70% போர்ச்சுக்கலில் நடக்குது. அங்கே கொஞ்சம் தமிழ் நிறைய போர்ச்சுக்கல் அல்லது வேறு மொழி பேசுகிற ஒரு வக்கீல் தேவைப்பட்டாங்க. அதற்கு ரொம்ப சரியான பொருத்தமா கல்கி இருந்தாங்க. அவங்க மட்டுமில்லாம இன்னும் படத்தில் நிறைய சர்ப்ரைஸ் கேரக்டர்ஸ் இருக்காங்க. குஷ்பு மேம், சரத்குமார் சார், பிரபு சார், ஷிவ் பண்டிட் அத்தனை பேருக்கும் ரொம்ப முக்கியமான கேரக்டர். என்னுடைய ஆஸ்தான கேமராமேன் ஓம் பிரகாஷ் சார்தான் படத்தின் பல பகுதிகளுக்கு விஷுவல் செய்து கொடுத்தார். ஆனால், அவர் தனுஷ் படத்தில் வேலை செய்ய வேண்டிய பொறுப்பு வந்துச்சு.
தொடர்ந்து என்னுடைய ‘செர்ஷா’ உள்ளிட்ட பல படங்கள் செய்த சினிமாட்டோகிராபர் கேமரான் பிரைசன் நிறைய டெக்னிக்கல் சண்டைக் காட்சிகளில் அருமையான விஷுவல் கொடுத்திருக்கார். எடிட்டர் என்னுடைய ஃபேவரைட் மற்றும் தேசிய விருது பெற்ற கர் பிரசாத் சார். மியூசிக் மை ஆல்டைம் ஃபேவரைட் யுவன் சங்கர் ராஜா. என்னவோ அவருக்கும் எனக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி.
‘உங்க அண்ணன் படத்துக்கு சரியா மியூசிக் கொடுக்கிறியோ இல்லையோ எனக்கு ஒழுங்கா கொடுக்கணும்’ அப்படின்னு செல்லமா நான் அதட்டி வேலை வாங்குகிற இசையமைப்பாளர். இவங்க எல்லாரும் சேர்ந்துதான் இந்தப் படம். சல்மான் கான் உடன் அடுத்த படம்... அஜித்துடன் அடுத்த படம்... இப்படியான பல செய்திகள் படித்தோமே?
அத்தனையும் ஆரம்பிச்சது உண்மைதான். ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப் போகுது. அத்தனைக்கும் காலமும் நேரமும் சரியா அமையணும்.
அஜித் சாரைப் பொருத்தவரை ‘லெட்ஸ் டூ ஏ ஃபிலிம்’... இப்படி சொல்லிட்டாலே நாங்க படம் ஆரம்பிச்சிடுவோம். சல்மான் கான் சார் படத்தைப் பொருத்தவரை சூழல் இப்போ சரியா இல்லை.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமான நேசிப்பு பற்றி சொல்லுங்களேன் ஒருத்தர் மற்றவரின் நேரத்தை முதலில் மதிக்கணும். ‘நீ என்ன பெரிய டைரக்டர்... நீ என்ன பெரிய காஸ்டியூம் டிசைனர்...’ இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டாலே அங்கே காதலும் நேசிப்பும் போயிடும்.
அவங்க எந்நேரமும் பிஸியா இருக்கிறதை விரும்புவாங்க. எனக்கு சுவாரசியமான வேலை இருந்தா மட்டும்தான் நான் செய்வேன். இந்த ரெண்டு மனநிலையையும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து இருக்கிறதால்தான் எங்களுக்குள் இன்னமும் அந்தக் காதல் அதிகம் ஆகிட்டே இருக்கு. இதுதான் சீக்ரெட். ஒருத்தரை ஒருத்தர் முதலில் மரியாதை செலுத்துங்க. அதுவே போதும். ‘நேசிப்பாயா’ எப்படிப்பட்ட அனுபவம் கொடுக்கும்?
இதுவரையிலும் தமிழ் சினிமா அதிகம் பார்க்காத லொகேஷன்ஸை இந்தப் படத்தில் பார்க்கலாம். காதலை இப்போதைய ஜெனரேஷனுக்கு ஏத்த மாதிரி சொல்லி இருக்கோம். நிச்சயம் முந்தைய ஜெனரேஷனுக்கும் பிடிக்கிற விதமா படத்தில் நிறைய குடும்ப சென்டிமென்ட்டும் இருக்கு. இப்போதைய காதல் பிரிவுகளுக்கு காரணமே காதலர்கள்தான் என்கிறதை ரொம்ப அழுத்தமா இந்தப் படம் எடுத்து வைக்கும்.
ஷாலினி நியூட்டன்
|