6 வயது மலையேற்ற வீராங்கனை!
கழுத்தில் கட்டி... நீக்க பணமில்லை... குறைந்த செலவில் சிகிச்சை அளித்தது மருத்துவமனை...
அந்த ஆஸ்பிட்டலுக்கு நிதி திரட்ட இச்சிறுமியின் மலையேற்றம் உலகம் முழுவதும் சுமார் 12 கோடிப் பேர் மலையேற்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர். மலையேற்றத்துக்கான ஆடைகள், காலணிகள், உபகரணங்கள் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பைக் கொண்ட ஒரு துறை, மலையேற்றம். கோடிக்கணக்கான மலையேற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு மத்தியில் தனித்து தெரிகிறார் செரன் பிரைஸ்.
இளம் மலையேற்ற வீராங்கனையாக வலம் வரும் செரனின் வயது 6. சமீபத்தில் மொரோக்காவில் உள்ள அட்லஸ் மலைத்தொடர்களில் அமைந்திருக்கும் டப்கல் என்ற மலையின் மீது ஏறியிருக்கிறார் செரன். வட ஆப்பிரிக்காவில் உள்ள உயரமான மலை இது. இதன் உயரம், 13,600 அடி. டப்கல் மலையில் ஏறிய இளம் மலையேற்ற வீராங்கனை என்ற பெருமையையும் தன்வசமாக்கிவிட்டார் செரன்.
யார் இந்த செரன் பிரைஸ்?
இங்கிலாந்தில் பிறந்தவர், செரன். இவருடைய தந்தை கிளின் பிரைஸ் ஒரு மலையேற்ற வீரர். செரன் குழந்தையாக இருந்தபோது, அவரது கழுத்தில் ஒரு கட்டி இருந்தது. அந்தக் கட்டியின் காரணமாக சுவாசிக்க கஷ்டப்பட்டார் செரன். கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சைக் கட்டணம் அதிகம். அத்துடன் கழுத்தில் என்பதால் ஆபத்துகளும் இருக்கும்.
இந்நிலையில் பிர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனை குறைந்த செலவில் செரனுக்கு அறுவை சிகிச்சையைச் செய்து, கட்டியை அகற்றியது. கட்டியை அகற்றியபிறகு செரனின் சுவாசம் இயல்பு நிலைக்கு வந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகத்தான் மலையேற்றத்தில் ஈடுபட்டார் செரன். ஆம்; பிர்மிங்காம் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக டப்கல் மலையில் ஏறியிருக்கிறார் இந்தச் சிறுமி.
சில நாட்களுக்கு முன்பு செரனும், கிளினும் டப்கல் மலையில் ஏறுவதற்காக மொரோக்காவுக்குச் சென்றனர். எட்டு மணி நேரம் நடை பயணம் செய்துதான் டப்கல் மலையின் அடிவாரத்தை அடைய முடியும். போக்குவரத்து வசதிகள் இல்லை. வெயிலும் 40 டிகிரிக்கு மேல் இருக்கும். இந்த கடும் வெயிலைத் தாங்கிக்கொண்டு, ஒரு வழிகாட்டியின் உதவியுடன் தந்தையும், மகளும் எட்டு மணி நேரம் நடந்து சென்று டப்கல் மலையின் அடிவாரத்தை அடைந்தனர்.
இரவில் அடிவாரத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலையில் மலையேற ஆரம்பித்தனர். இந்த மலையில் ஏறுவது கடினம். மலை செங்குத்தாகச் செல்லும். கீழே தவறி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோக வெயில் சுட்டெரிக்கும். ‘‘எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது வெயில்தான்.
வெயிலைத் தாங்கிக்கொண்டே செரன் மலையேறினாள். உச்சியை அடைந்தவுடன், அதை வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோம். இன்ஸ்டாவில் செரனை பின்தொடர்பவர்கள் அனைவரும் செரனுக்கு வாழ்த்து தெரிவித்து, பாராட்டினார்கள்...’’ என்கிறார் கிளின்.
இந்த மலையில் ஏறுவதற்காக ஆறு மாதங்களுக்கு மேல் பயிற்சி எடுத்திருக்கிறார் செரன். குறிப்பாக இரவு நேரத்தில் கரடு முரடான பாதைகளில் நடப்பதற்காக வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு தேசிய பூங்காவில் பிரத்யேகமான பயிற்சி எடுத்திருக்கிறார்.
இதுபோக டப்கல் மலை மாதிரியான சிறு மலைகளில் அப்பாவும், மகளும் ஏறி பயிற்சி செய்திருக்கின்றனர். மட்டுமல்ல, நான்கு வயதிலேயே மலையேறி சாதனை செய்திருக்கிறார் செரன். ஆம்; ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸில் இருக்கும் மூன்று உயரமான மலைகளில் அப்பாவுடன் சேர்ந்து ஏறியிருக்கிறார்.
அப்போது அவருக்கு வயது 4 தான். இந்த மூன்று மலைகளிலும் ஏற இரண்டு நாட்கள் ஆகியிருக்கிறது. கிளினுக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனால், மகனுக்கு மலையேற்ற சாகசங்களில் விருப்பமில்லை. அதனால் கிளின் மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்வதில்லை.
செரனுக்கு மூன்று வயதாக இருந்தபோது வீட்டுக்கு அருகில் ஒரு மலையேற்றத்துக்கு உடன் அழைத்துச் சென்றிருக்கிறார் கிளின். மலையின் உச்சிக்குச் சென்று, உயரத்திலிருந்து சுற்றியிருக்கும் இடங்களைப் பார்த்தபோது செரனுக்கு பிரமிப்பாக இருந்திருக்கிறது.
அன்றிலிருந்து மலையேற்றம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. அப்பாவுடன் எல்லா மலையேற்றத்துக்கும் செல்ல ஆரம்பித்தார். மகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து முறையாக மலையேற்றப் பயிற்சியைச் செரனுக்குக் கொடுத்திருக்கிறார் கிளின்.
‘‘அப்பாவுடன் இருப்பது ரொம்பவே பிடித்திருக்கிறது. மலையின் உச்சிக்குச் சென்று உலகைப் பார்க்கும்போது ரொம்பவே அழகாக இருக்கிறது...’’ என்று மழலை மொழியில் சொல்கிறார் செரன்.
மேற்கு ஐரோப்பாவிலேயே உயரமான மலையான மொன்ட் பிளான்கில் ஏறுவதுதான் செரனின் அடுத்த இலக்கு. இந்த மலையின் உயரம், 15,766 அடி. இன்னொரு குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக இந்த மலையில் ஏறப்போவதாக அறிவித்திருக்கிறார் இந்த இளம் மலையேற்ற வீராங்கனை.
த.சக்திவேல்
|