டார்க்நெட்



12. கள்ளச்சந்தையில் உதித்த கண்காணிப்பாளர்கள்

கிறிஸ்ஸை கைது செய்த போலீசார் அவரை கடுமையாக விசாரித்தனர். அவர்கள் திரும்பத் திரும்ப  கேட்டது கிறிஸ்ஸை பயங்கரமாகக் குழப்பியது.
‘டார்க்நெட்டில் உள்ள ‘பெசோ மாஃபியா’ வலைதளத்தின் உரிமையாளர் நீதானே?’

இதைத்தான் போலீசார் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தனர் . கிறிஸ் எவ்வளவுதான் அந்த வலைதளத்தின் உரிமையாளர், தான் இல்லை என மறுத்தாலும் போலீசார் நம்புவதாக இல்லை.  நல்லவேளையாக ‘ஆபரேஷன் வெஜிடபிள்’ திட்டத்தில் கிறிஸ்ஸுடன் இணைந்து பணியாற்றிய வழக்குரைஞர் யூடியின் உதவியால் கிறிஸ்ஸுக்கு ஜாமீன் கிடைத்தது.   
கிறிஸ் வெளியே வந்து ஆராய்ச்சி செய்தபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது.

கிறிஸ் கட்டுரைகளுக்கு பின்பு போலீஸிடம் சென்றதும் ‘பெசோ மாஃபியா’ வலைதளம் முடக்கப்பட்டது. நன்றாக பணம் கொடுத்துக் கொண்டிருந்த வலைதளம் முடக்கப்பட்டதால் யூரா கடும் கோபம் அடைந்தார்.  உடனடியாக உலகம் முழுவதிலும் உள்ள ஃப்ரீலான்ஸ் இணைய தொழில்நுட்ப வல்லுனர்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நபர்களை பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தி போலியான வலைப்பக்கங்கள் - வலைதளங்களை உருவாக்கினார்.  

பல்வேறு இணைய அரட்டை குழுமங்களிலும் வாடகைக்கு அமர்த்தி பலரை சேர்த்துவிட்டார்.இணையம் முழுவதும் ‘பெசோ மாஃபியா’வின் உண்மையான உரிமையாளர் கிறிஸ்தான் என பொய்ச் செய்தியை பரப்பி விட்டார். டார்க்நெட் குழுமங்களில் இருந்து இணையம் முழுவதும் பரவிய இந்த செய்தியின் அடிப்படையில்தான் லண்டன் சைபர் செல் போலீஸார் கிறிஸ்ஸை கைது செய்தனர்.

ஆனால், எஃப்.பி.ஐ. மாதிரியான சிறப்பு சைபர் புலனாய்வு அமைப்புகள் உள்நுழைந்து கிறிஸ்ஸை போலீசாரிடமிருந்து காப்பாற்றி விட்டார்கள்.அடுத்து கிறிஸ் உதவியுடன் சர்வதேச போலீசார், ‘பெசோ மாஃபியா’வின் பட்டியல்கள் மற்றும் ஹேக் செய்யப்பட்ட தகவல்களை வைத்து, கொலை செய்ய கோரிக்கை விடுத்த பயனாளர்கள் பலரை கைது செய்து விட்டார்கள். இந்தக் கைதுகளில் பல ஆச்சரியங்களை அளித்தன.ஒரு பயனாளர் லண்டனில் வசிக்கும் மருத்துவர். அவரின் பழைய வருமான வரியை சரிபார்த்த ஆடிட்டரை கொலை செய்ய வேண்டும் என பணம் கட்டி இருக்கிறார்.  

கொரியாவில் வசித்த  ஆசிரியர், தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரை கொலை செய்ய பணம் கட்டியிருந்தார். சிங்கப்பூரில் வசித்த ஒரு பெண் தன் முன்னாள் காதலரை கொலை செய்ய கோரிக்கை வைத்திருந்தார்...  இப்படி பல கைதுகள் நடந்து கொண்டிருக்க... கிறிஸ், தன் எல்லையை மீறி விஷயங்கள் போலீசாரிடம் போய்விட்டது... 

இனி, தான் அடுத்த வேலையை பார்க்கலாம் என தன் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பினார்.  அவருடைய ஆழ்மனதில் போலீசார் கண்டிப்பாக யூராவை கைது செய்து விட்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டார்.சில நாட்கள் கழித்து  கிறிஸ்ஸுக்கு யூராவிடமிருந்து மின்னஞ்சல் வந்தது.

‘அட இவனை இன்னுமா கைது செய்யவில்லை...’ என முதலில் கிறிஸ் அலுத்துக் கொண்டு அந்த மின்னஞ்சலை படித்தார்.அதில், ஆமி ஆல்வின் கொலைக்கு கிறிஸ்தான் காரணம் என யூரா குற்றம் சாட்டியிருந்தார். கிறிஸ் அந்த  மின்னஞ்சலை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.சில மாதங்கள் கழித்து ‘சிபிஎஸ் 48’ எனும் பிரபல பத்திரிகை யூராவைத் தொடர்புகொண்டு பேட்டி எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.  

அதற்கு சம்மதித்தார். அவருடன் தொடர்பில் இருந்ததால் சில கொலை கோரிக்கைகள் பற்றிய தகவல்களை அவர் அந்த பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தார்.  
அந்தப் பத்திரிகையாளர்கள் அதை போலீசுடன் பகிர்ந்தார்கள். 

போலீஸ் தகவலை கிறிஸ்ஸுக்கு தெரியப்படுத்தியது.  கிறிஸ் மீண்டும் டார்க்நெட்டில் ஆராய்ச்சி செய்தபோது, யூரா ‘பெசோ மாஃபியா’ வலைதளத்தை மூடிவிட்டு எங்கேயும் ஓடிப் போகவில்லை; மாறாக, பல்வேறு பெயர்களில் இந்த வலைதளங்களைத் தொடங்குவதும் பின் அது முடக்கப்பட்டதும் இன்னொரு வலைதளம் தொடங்குவதுமாக தொடர்ந்து டார்க்நெட்டில் அதே வேலையைத்தான் செய்து வந்திருக்கிறார் என்பதைக் கண்டறிந்தார்.

ஆனால், இந்த முறை யூரா நல்லவராக அவதாரம் எடுத்திருந்தார். கடந்த காலத்தில் அவர் வசூலித்த பிட்காயின்களின் மதிப்பும் உயர்ந்திருந்ததால் அவர் மிகப்பெரும் பணக்காரர் ஆகிவிட்டார். 

வலைதளங்களை நடத்தி அதன்மூலம் வரும் கொலை தொடர்பான கோரிக்கைகளை அவர் போலீசாருக்கு பகிர்வதாக பேட்டியில் கூறியிருந்தார். அப்படியாக அவர் பகிர்ந்த சில தகவல்களை வைத்து ஒன்று இரண்டு கொலைகளை தடுக்க முடிந்தது. இந்த செய்கைகளின் மூலம் உண்மையில் யூரா வேறு ஒரு கதையை டார்க்நெட்டில் உலவ விட்டிருந்தார்.  

ஆரம்ப காலம் முதலே இப்படியான கொலைகாரர்களை கண்டுபிடித்து கொலைகளைத் தடுப்பதுதான் தன் நோக்கம் என்றும்; அப்படி கொலைகளைத் தடுப்பதற்காகவும் தள்ளிப் போடுவதற்காகவுமே அவர் பொய்களை சொல்லி வந்ததாகவும்; உண்மையில் அதனால் பல கொலைகள் தடுக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னவர் -கிறிஸ் மாதிரியானவர்கள் உள் நுழைந்து குழப்பம் விளைவித்ததால்தான் ஆமி ஆல்வின் மாதிரியானவர்கள் இறந்தார்கள் என ஒரு பிம்பத்தை டார்க்நெட்டில் உருவாக்கி விட்டார்.  

அவருக்கு கிறிஸ் மீதிருந்த கோபம் போகவே இல்லை. ஆனால், உண்மையில் போலீசாருக்கும் புலனாய்வு அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்... யூரா கொலைகள் செய்யவில்லை... ஆனால், நிச்சயம் நல்ல எண்ணத்திற்காக எல்லாம் இந்த வலைதளங்களை நடத்தவில்லை... பொய் சொல்லி பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்தார்... ஆனால், என்ன மாற்றமோ இப்போது போலீசாருக்கு சில துப்புகள் கொடுக்கிறார்... அதனாலேயே அவர் நல்லவராகி விடுவாரா என்ன..?

இதனடிப்படையில் போலீசார் யூராவை நம்பவில்லை.மறுபக்கம் கிறிஸ் எதற்காக இந்த ‘பெசோ மாஃபியா’வை அம்பலப்படுத்தினார் என்பதில் மிகத் தெளிவாகவே இருந்தார்.
‘‘டார்க்நெட் முழுவதும் உலவி வந்த பொய்ச் செய்திகளை உடைத்து உலகிற்குக் காட்ட வேண்டும் என நினைத்தேன்... அதற்காக கடினமாக உழைத்தேன்... ஓரளவு ‘பெசோ
மாஃபியா’ விஷயத்தில் அது நடந்தது.  நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்...’’ என எழுதினார்.

இப்போதும் தன் பொழுதுபோக்கை அவர் விடவில்லை. டார்க்நெட்டில் ஷெர்லாக் ஹோம்ஸ் போல சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார். வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவரது கதை பலரை ஊக்கப்படுத்தி இன்று டார்க்நெட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல கிறிஸ்கள் உலாவி வருகிறார்கள்! கெடுதலிலும் நன்மை என்பது இதுதான் போல! டார்க்நெட்டின் ரகசியங்களை அம்பலப்படுத்த மேற்கொண்ட ஒரு தனி நபரின் செயல், இப்பொழுது டார்க்நெட்டில் புழங்கியபடியே அதை கண்காணிக்கும் காவலர்கள் பலரை உருவாக்கிவிட்டது!

(தொடரும்)

வினோத் ஆறுமுகம்