COFFEE TABLE



மிஸ் இந்தியாவும் இந்தியாவில் இருந்து மிஸ் ஆனவரும்!

சமூக வலைத்தளங்களில் சென்ற வாரம் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் லலித் மோடி போட்ட பதிவுதான். சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்த லலித் மோடி, ‘என்னில் பாதி. வாழ்க்கையில் புதிய தொடக்கம். காதலில் இருக்கிறோம். ஆனால், திருமணத்தைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். மோடி இப்போது தனது காதலை பகிரங்கப்படுத்தினாலும், 2010ம் ஆண்டிலேயே இவர்கள் குறித்த கிசுகிசுக்கள் வரத் தொடங்கிவிட்டன.

ஐபிஎல் கிரிக்கெட்டின் முக்கிய மூளையான லலித் மோடி, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் கைதாகாமல் இருப்பதற்காக லண்டனில் குடியேறினார். கடந்த 2018ம் ஆண்டில் இவரது மனைவி இறந்தபிறகு தனியாகவே வாழ்ந்து வருகிறார்.1994ம் ஆண்டில் மிஸ் இந்தியாவாகவும் அதே ஆண்டு பிரபஞ்ச அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மிதா சென், திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமெளலிக்கு ஹாலிவுட் புகழாரம்

ராஜமௌலியின், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மாபெரும் வெற்றி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இப்போது ஹாலிவுட் இயக்குநர்களும் படத்தைப் பார்த்துவிட்டு ஆசம் ஆசமென வியந்து பாராட்டி டுவிட் செய்து வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவின் மார்வெல் காமிக் சீரிஸான, ‘கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி’ படப் புகழ் இயக்குநர் ஜேம்ஸ் கன்னும், ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ பட இயக்குநர் ஸ்காட் டெர்ரிக்சனும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பார்த்துவிட்டு புகழாரம் சூட்டினர். இதில் ஸ்காட், ‘மனைவி மற்றும் குழந்தைகளுடன் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பார்த்தேன். என்னவொரு சினிமா...’ எனப் பாராட்டியதுடன், ஜூனியர் என்டிஆர் மீது புலி பாயும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.    

94 வயதில் தங்கப் பதக்கம்

கடந்த வாரம் பின்லாந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் 94 வயதான பாக்வானி தேவி தாஹர். தொடர்ந்து குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வெல்ல சமூக வலைத்தளங்களில் செம வைரலானார். ‘நாற்பது வயதிலேயே நடக்கமுடியாமல் மூச்சுவாங்கும் இன்றைய தலைமுறைக்கு நீங்கள் ஆகச் சிறந்த உதாரணம்’ எனப் பலரும் பாட்டியைப் பாராட்டித் தள்ளினர். ஆனால், சாதனைக்கு வயதெல்லாம் ஒரு தடையே அல்ல என எளிமையாக அதனைக் கடந்து செல்கிறார் அரியானாவைச் சேர்ந்த இந்தப் பாட்டி.

ரயில் பயணிகளின் கவனத்துக்கு...

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பஸ் டிக்கெட்டிங் தளமான redBus, ரயில்களின் லைவ் லொகேஷனைத் தெரிந்துகொள்ளும் புதிய வசதியை WhatsAppல் அறிமுகம் செய்திருக்கிறது.
பயணிகள் 9538039911 என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தங்கள் ரயில் எண்ணை பதிவிட்டால்... குறிப்பிட்ட அந்த ரயில், குறிப்பிட்ட நேரத்தில் எங்கு இருக்கிறது, எங்கு சென்று கொண்டிருக்கிறது, எப்போது குறிப்பிட்ட இடத்தை வந்தடையும் போன்ற தகவல்களைப் பெறமுடியும்.

அவ்வப்போதைய தகவல்கள் மட்டுமல்ல, முந்தைய நாள் நிலவரத்தையும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.ரயில் எப்போது வரும் என்று காத்திருந்து நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமில்லை. இருக்கும் இடத்திலிருந்தே ரயில் எப்போது வந்து சேரும் என்பதைத் தெரிந்துகொண்டு பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.மேலும், PNR எண்ணைப் பதிவிட்டு டிக்கெட் கன்ஃபர்மேஷன் பற்றிய தகவல்களையும் பெறமுடியும். அதுமட்டுமல்ல, பயணம் சென்று கொண்டிருக்கும்போதே லைவாக லொகேஷனை மற்றவர்களுக்கு ஷேர் செய்யலாம்.

தொகுப்பு: குங்குமம் டீம்