COFFEE TABLE



யார் இந்த கங்குபாய்?

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கங்குபாய் கத்தியவாடி’ படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது. லாக்டவுனால் இந்த பிப்ரவரி 25ல் ரிலீஸ். சரி, யார் இந்த கங்குபாய் கத்தியவாடி என்பதே திரை ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

கங்குபாய் கத்தியவாடி, குஜராத் மாநிலம் கத்தியவாரில் 1939ல் பிறந்தவர். பதினாறு வயதாக இருக்கும்போது தன் தந்தையின் கணக்காளருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டார். ஒரு நடிகையாக வேண்டும் என்பதற்காக கணவனுடன் மும்பைக்கு வந்தார். ஆனால், கணவன் மும்பையில் உள்ள ஒரு ரெட்லைட் ஏரியாவில் கங்குபாயை வெறும் 500 ரூபாய்க்கு விற்றுவிட... அவரின் வாழ்க்கை ரெட்லைட் ஏரியாவான காமாத்திபுராவில் கழிந்தது.

1950களில் மும்பையானது மூன்று ஜாம்பவான்களால் கட்டுப்படுத்தப்பட்டது. அவர்கள் கரீம் லால், ஹாஜி மஸ்தான் மற்றும் நம்ம ஊர் வரதராஜ முதலியார்.
வரதராஜ முதலியாரை வைத்துதான் மணிரத்தினம் ‘நாயகன்’ படம் எடுத்தார் என்பது தெரிந்த கதை. ஆனால், அந்தக் காலத்தில் போதை மருந்தின் பிதாமகளாகவும், பல கொலைகளுக்கான ராணியாகவும் கங்குபாய் இருந்தார் என்பதுதான் சுவாரசியமான வரலாறு.

மும்பையின் ரெட்லைட் ஏரியா பெண்களுக்கு எல்லாம் ஒரு தாயாக, மேடமாக மாறியது கங்குபாய்க்கு அபலைப் பெண்களுக்கிடையே ஒரு அந்தஸ்தை தேடித்தந்தது. கங்குபாய் ஒரு மீட்டிங்கில் பேசியது அன்றைய பிரதமர் நேருவுக்கு எட்ட, ரெட்லைட் ஏரியாக்களை அரசு புல்டோசர்கள் கொண்டு தகர்ப்பதையும் தள்ளிவைத்தது. மும்பையில் பாலியல் தொழிலை சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் ஒரு தொழிலாக அங்கீகரிக்க செய்தவர் கங்குபாய். இதனால், காமாத்திபுராவைச் சுற்றிய பகுதிகளில் உள்ள மக்கள் அவரை தெய்வமாக நினைத்து சிலை எடுத்து வழிபடுகிறார்கள்.

வைரலான பிரம்மாண்ட ஐஸ் பாம்பு!

சீனாவைச் சேர்ந்த சிலை வடிவமைக்கும் கலைஞர் ஒருவர் சமீபத்தில் உறையும் வெள்ளைப் பனியால் மூடப்பட்ட சமவெளியில் பிரம்மாண்ட மலைப்பாம்பு போல் ஐஸ் சிலை ஒன்றை செதுக்கியிருக்கிறார். இதனை வீடியோவாக டிக்டாக் சீனா வெர்ஷனான டூயின் (Douyin) வீடியோ தளத்தில் பகிர்ந்திருக்கிறார் அந்தச் சீன சிற்பக் கலைஞர். இவரின் இந்த பிரம்மாண்ட ஐஸ் பாம்பு சிலைதான் இப்போது இணைய டிரெண்ட். மில்லியன்களில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவில் அச்சு அசலாகவே ஒரு பாம்பு சுருண்டு படுத்திருப்பது போல் இருக்க இணைய உலகமே ஆச்சர்யத்தில் உறைந்திருக்கிறது.

பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்

இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்கு தமிழகத்திலிருந்து ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிலொருவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த சதிர் நடனக் கலைஞர் முத்துகண்ணம்மாள். 82 வயதான இவர் சதிர் நடனக் கலை குடும்பத்தின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர். தேவதாசி மரபின் கடைசி பெண்ணான இவர், தன்னுடைய ஏழு வயதில் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முருகக் கடவுளுக்கு பொட்டுக்கட்டிவிடப்பட்டார்.

1947ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது ஆர்வமுள்ளவர்களுக்கு சதிர் நடனத்தைக் கற்றுக் கொடுக்கிறார் முத்துகண்ணம்மாள். இவர் தவிர கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சௌகார் ஜானகி, கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி நடராஜன், நீரிழிவு நோய் மருத்துவர் வீராசாமி சேஷய்யா, சமூகப் பணிக்காக எஸ்.தாமோதரன் ஆகியோருக்கு பத்ம அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பத்ம பூஷண் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரூம் சர்வீஸ் ரோபோ

கடந்த இரண்டு வருடங்களில் உலகையே மாற்றி அமைத்திருக்கிறது கொரோனா. பல நாடுகளில் இயல்புநிலை திரும்பிய பிறகும் கூட சமூக இடைவெளிகள் கடைப்
பிடிக்கப்பட்டுவருகின்றன. இதன் விளைவாக பொது இடங்களில் மனிதர்களின் வேலைகளைச் செய்வதற்காக விதவிதமான ரோபோக்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விஐபிக்கள் செல்லும் ஹோட்டல்கள், இடங்களில் எல்லாம் ரோபோக்களின் வாசம்தான் அதிகமாக வீசுகிறது.

இதில் புது வரவாக வந்திருக்கிறது ரூம் சர்வீஸ் ரோபோ. சில விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங்கில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்வதற்காக ஒரு ரோபோவை பிரத்யேகமாக வடிவமைத்திருக்கின்றனர். அந்த ரோபோ விருந்தினர் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று அழைப்பு மணியை அடிக்கும். அப்போது விருந்தினரின் போனுக்கு ஒரு பாஸ்வேர்டு வந்திருக்கும். அறைக் கதவைத் திறந்த பிறகும் கூட ரோபோ வெளியில்தான் நிற்கும்.

பாஸ்வேர்டை ரோபோவில் பதிவு செய்தவுடன் விருந்தினருக்காக ரோபோ கொண்டுவந்திருப்பதைக் கொடுக்கும். அது உணவாக இருக்கலாம் அல்லது விருந்தினருக்குத் தேவையான மருந்துகளாக இருக்கலாம். இந்த ரோபோ சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, சீனாவில் உள்ள ஹோட்டல்கள் ரூம் சர்வீஸ் ரோபோவை ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளன.  

கடல் மோகினியின் caption!

சமூக வலைத்தளத்தில் தன் புகைப்படத்தை கேப்ஷனுடன் பதிவிட்டால் அது வைரல் ஆகுமா?ஆகும். செய்பவர் நடிகை மாளவிகா மோகனனாக இருந்தால்!
மாளவிகா மோகனன்? ஆம். ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களில் நடித்தவர். இப்போது தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ‘யுத்ரா’வில் நடித்து வருகிறார். கூடவே மலையாளத்தில் பல புதிய படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறார்.அப்படிப்பட்டவர் பிகினியில் தினம் ஒரு போஸ் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்க வைத்தபடியே இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள மாளவிகா மோகனன், அங்கு செம ஜாலியாக விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கு கடற்கரையிலும், பீச் ரிசார்ட்டிலும் காற்று வாங்கும் கவர்ச்சி உடையில் ஜாலியாக பொழுதைக் கழிக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் என தினமும் ஒன்றை வெளியிட்டு பார்ப்பவர்களைச் சுண்டி வருகிறார்.

முதல் நாளில் மஞ்சள் பிகினியில் முதுகழகைக் காட்டி அமர்ந்திருக்கும் இரண்டு போட்டோக்களை வெளியிட்டார். அடுத்த நாளே சிவப்பு நிற பிகினியில், கடலில் கடல்கன்னி போல் மிதக்கும் போட்டோவை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பிங்க் பிகினி. இடையில் மினி ஸ்கர்ட்டில் கடற்கரையில் துள்ளிக் குதித்து விளையாடி, சிப்பிகளைச் சேகரித்த ஒரு செட் போட்டோக்களையும் பகிர்ந்தார்.

தலைகீழ் வீடு!

படத்தில் நீங்கள் காண்பது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் அல்ல. நிஜமாகவே இப்படியொரு தலைகீழ் வீடு இணையத்தைக் கலக்கி வருகிறது.
கொரோனா லாக்டவுன் முடிந்து கொலம்பியாவுக்குச் சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் குவாட்டாவிட்டா என்ற இடத்துக்குச் செல்ல தவறுவதில்லை. காரணம், அங்கேதான் கம்பீரமாக வீற்றிருக்கிறது இந்த தலைகீழ் வீடு.

இதன் உரிமையாளர் மற்றும் டிசைனரான ஃபிரிட்ஸ் ஆஸ்திரியாவிலிருந்து குடும்பத்துடன் கொலம்பியாவில் குடியேறியவர். 2015ம் வருடம் பேரன், பேத்திகளுடன் சொந்த ஊரான ஆஸ்திரியாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவர் பார்த்த தலைகீழ் வீடு ஒன்று ஃபிரிட்ஸை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. உடனே இதுபோல ஒரு வீட்டைக் கொலம்பியாவில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.

தலைகீழ் வீட்டுக்கான டிசைனை செய்துகொண்டு பல கட்டட நிபுணர்களை அணுகியிருக்கிறார். எல்லோரும் அவரை பைத்தியம் என்று நிராகரித்துவிட்டனர். இறுதியாக ஒருவர் ஃபிரிட்ஸைப் புரிந்துகொள்ள லாக்டவுனில் உருவாகியிருக்கிறது தலைகீழ் வீடு. இப்போது கொலம்பியாவின் முக்கியமான சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. ஃபிரிட்ஸை பைத்தியம் என்று சொன்னவர்கள் எல்லோரும் அவரிடம் மன்னிப்பு கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடைகளில் சிறுதானியம்!

ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. கடந்த வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையில் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டுவதை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. சமீபத்தில் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதில் ராகி, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க முடிவு செய்திருக்கிறது.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை மற்றும் கோவையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பிறகு மற்ற மாவட்ட ரேஷன் கடைகளுக்கு விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இது ஒரு நல்ல முடிவு என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

அட்மின்களே மெசேஜை நீக்கலாம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுவித அப்டேட்களை தெறிக்கவிட்டு பயனாளர்களை எப்போதும் தன்னகத்தே இணைத்து வைத்திருக்கும் வாட்ஸ்அப், இப்போது புது அப்டேட்டுடன் களமிறங்கியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று பிரச்னைகள் ஆரம்பித்ததுதான் தாமதம். அத்தனை பேரும் மருத்துவர்களாக மாறி அவரவர் விருப்பப்படி கதைகள் உருவாக்கி வாட்ஸ்அப்பிலும், வாட்ஸ்அப் குரூப்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

இதுமட்டுமல்ல. போலி ஃபார்வேர்டு மெசேஜ்கள் பலவும் வாட்ஸ்அப் குழுக்களில்தான் பகிரப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தவே வாட்ஸ்அப் இப்போதைய புது அப்டேட்டாக அந்த மெசேஜை நீக்கும் அதிகாரத்தை குழு அட்மின் களிடம் கொடுக்க விருக்கிறது. அதாவது, இனி வாட்ஸ்அப் குழுக்களில் குழு உறுப்பினர்களால் பகிரப்படும் போலித் தகவல்கள் அல்லது சர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின்களே குழுவிலுள்ள அனைவரிடமும் (Delete for All) நீக்கலாம். இதனால் சர்ச்சையான கருத்துகளால் சண்டைகள்  உருவாகாமல் நட்பு பாதுகாக்கப்படும் என்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.   

இந்தியாவின் முதல் K-Pop பாடகி

உலகளவில் பிரபலமாகிவரும் ஓர் இசை வகைமை, கே-பாப். ‘கொரியன் பாப்புலர் மியூசிக்’கின் சுருக்கம் இது. தென்கொரியாவில் பிறந்த இந்த இசை வகைமை அதன் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அங்கே ‘பிளாக்ஸ்வான்’ என்னும் பெண்கள் இசைக்குழு வளர்ந்து வருகிறது. கே-பாப் வகைமை இசையில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதில் மொத்தம் ஐந்து பேர் உறுப்பினர்கள்.

அந்த உறுப்பினர்களில் ஒருவர் குழுவிலிருந்து வெளியேறிவிட, அந்த இடத்தை நிரப்புவதற்காக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது ‘பிளாக்ஸ்வான்’. சர்வதேச அளவில் ஒரு வருடத்துக்கு மேல் நடந்த இந்த தேடுதல் வேட்டையில் இறுதியாக இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர். அதில் ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்த 18 வயதான ஸ்ரேயா லெங்கா. இன்னொருவர் பிரேசிலைச் சேர்ந்த கேப்ரில்லா டால்சின். ‘பிளாக்ஸ்வானி’ன் ஐந்தாம் இடத்துக்கு ஒரு நபர் மட்டுமே தேவை. கேப்ரில்லாவை வீழ்த்தி ‘பிளாக்ஸ்வானி’ன் உறுப்பினராக ஸ்ரேயா தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவின் முதல் கே-பாப் பாடகி என்ற சிறப்பையும் அவர் தன்வசமாக்கிவிடுவார்!  

குங்குமம் டீம்