ரத்த மகுடம்-37



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

இருளில் நடமாடியவன் என்பதாலும், இருளும் ஒளிதான் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்பதாலும் கரிகாலன் வெளிச்சத்தில் நடப்பது போலவே சுரங்கத்துக்குள்ளும் நடந்தான்.அவனுக்கு முன்னால் பந்தத்தை ஏந்தியபடி பாலகன் சென்று கொண்டிருந்தான். நடையில் தள்ளாட்டமில்லை. ஏதோ பழகியவன் போலவே அவன் நடந்தது உண்மையிலேயே கரிகாலனை ஆச்சர்யப்படுத்தியது. குறிப்பாக பாதை.

சுரங்கங்களின் பாதை சமதளம் போல் இருக்காது. சற்றே கரடுமுரடாகவே உருவாக்கப்பட்டிருக்கும். தவிர நேர்கோட்டிலும் இருக்காது. வளைந்து நெளிந்தே செல்லும். பழக்கப்பட்டவர்கள் கூட தடுமாறுவார்கள். பிடிமானத்துக்கு சுவரைப் பிடித்துக் கொள்வார்கள். சுவரும் சுவருக்கான அங்க லட்சணங்களுடன் இருக்காது. பெயருக்குத் தான் அவை சுவரே தவிர மற்றபடி பாறைகளின் புடைப்புதான்.

உயரமும் அகலத்தைப் போலவே ஏறக்குறையத்தான் இருக்கும். தலையை நிமிர்த்தியும் நடக்க முடியாது; குனிந்தபடியே செல்லவும் முடியாது. செதுக்கப்பட்டதற்கு ஏற்றாற்போல் நிமிரவும் குனியவும் வளையவும் வேண்டும்.இவை அனைத்தையுமே கச்சிதமாக அந்தப் பாலகன் கடைப்பிடித்தான். அதனாலேயே அவனைக் குறித்து அறியும் ஆவல் கரிகாலனுக்குள் அதிகரித்தது.

சில கணங்களுக்கு முன், ‘நானாக உன்னைப் பற்றி அறிந்துகொள்கிறேன்...’ என்று அவனிடம் சொன்னதுகூட அத்தருணத்தில் மறந்துவிட்டது! தூண்டில் வீசும் விதமாக பேச்சுக் கொடுத்தான்.‘‘பலமுறை இந்தப் பாதை வழியே வந்திருக்கிறாயா..?’’
‘‘இல்லை வணிகரே..!’’ திரும்பிப் பார்க்காமல் நடந்தபடியே பாலகன் பதிலளித்தான்.
‘‘நம்ப முடியவில்லை...’’

‘‘சரித்திரம் கற்றவர்கள் நிச்சயம் நம்புவார்கள்!’’‘‘அதாவது வரலாறு குறித்து நான் ஏதும் அறியாதவன் என்கிறாய்... அப்படித்தானே..?’’‘‘நிச்சயமாக இல்லை. என் அண்ணன் எந்தளவுக்கு ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்றுத் தேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியும். கண்களால் கண்டிருக்கிறேன்.

சாளுக்கிய மன்னர் வழியே தீர விசாரித்தும் அறிந்திருக்கிறேன். எனவே அந்த நோக்கத்தில் நான் சொல்லவில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்...’’ பாதையில் வளைந்து நெளிந்து நடந்தபடியும் அதனால் குரலில் தொனித்த எச்சரிக்கையுடனும் பாலகன் சொன்னான்.

‘‘எனில் நோக்கம் என்னவோ..?’’

‘‘கற்றது கூட சூழல் காரணமாக நினைவுக்கு வராது. பனி போல் மூடியிருக்கும். அதை விலக்கும் சூரியன் போல் ஊடுருவிப் பாருங்கள் என்றே குறிப்பிட வந்தேன்... பார்த்து வணிகரே... இனி பாதை பள்ளம் நோக்கிச் செல்லும். படிக்கட்டுகள் இல்லை. சரிவு. எச்சரிக்கையுடன் வாருங்கள்...’’

‘‘எனக்கு இது பழக்கப்பட்ட இடம்தான். இந்த இடத்தில் தொடங்கும் பள்ளம் சமதளத்தை அடைந்து வலப்பக்கமாகத் திரும்பும். கால் நாழிகை அதனூடாக நடந்தால் இடதுபுறமாக மேல் நோக்கி ஏறும். அங்கு படிக்கட்டுகள் உண்டு...’’
‘‘தெரியும் வணிகரே..!’’

‘‘வந்தது இல்லை என்றாயே..?’’
‘‘உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் அடியேனும் கடுகளவு சரித்திரமும் சிற்ப சாஸ்திரமும் கற்றிருக்கிறேன்! அதை வைத்துதான் இந்த சுரங்க அமைப்பையும் தெரிந்து கொண்டேன். விக்கிரமாதித்த மாமன்னர் அதை அறியவைத்தார்!’’கரிகாலனுக்குள் விதையாக விழுந்த கேள்வி இப்போது தோப்பாக வளர்ந்திருந்தது. கிடைக்கும் விடைகள் அனைத்தும் மறு வினாக்களாகவே இருந்தன. ஆணிவேரைக் கண்டறிந்து பிளக்காமல் பதிலைத் தெரிந்துகொள்ள முடியாது!

‘‘அறையின் ஈசான மூலையில் இருந்த பெண் சிலையை மூன்று முறை வலப்பக்கமாக சாளுக்கிய மன்னர் திருப்பச் சொன்னாரா..?’’

‘‘ஆம் வணிகரே! இந்த மாளிகைக்கு உங்களை எப்படியும் ராமபுண்ய வல்லபர் வரவழைப்பார் என மன்னர் கணக்கிட்டார். அதனாலேயே என்னையும் அனுப்பி வைத்தார். மாளிகையைச் சுற்றிக் காவல் இருக்கும் என்பதால் இந்த சுரங்க வழியை பயன்படுத்தச் சொன்னார்! சிலைக்குப் பின்னால் பந்தம் தயாராக எரிந்துகொண்டிருக்கும் என்று சொன்னதும் அவர்தான்!’’

‘‘சாளுக்கிய மன்னர் இந்த சுரங்கம் வழியாக..?’’
‘‘வந்ததில்லை! எனக்கு உறுதியாகத் தெரியும்!’’கரிகாலனின் உதட்டில் புன்னகை பூத்தது. ‘‘திரியை நிமிட்டியதும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறாய்!’’
‘‘ஆம்! சாதவாகனர்களின் தீபம் கொழுந்துவிட்டு எரிகிறது!’’கேட்டதும் கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான். பாலகனும் அதை எதிரொலித்தான். சுரங்கம் அதிர்ந்தது!

சாதவாகனர்களிடம் அடங்கியிருந்த இரு சிற்றரசுகளே இப்போது பல்லவர்கள்... சாளுக்கியர்கள் என தனித்தனி சாம்ராஜ்ஜியங்களாக விரிந்திருக்கிறது என்பதையும், இருவருக்கும் இடையிலான பகை, படைத்தளபதிகளாக அவர்களது முன்னோர்கள் இருந்த காலம்தொட்டே தொடர்கிறது என்பதையுமே ‘சரித்திரம் கற்றவர்கள் நிச்சயம் அறிவார்கள்’ என பாலகன் சற்று நேரத்துக்கு முன்பு குறிப்பிட்டான்.

அதையே கணத்தில் கரிகாலனும் உணர்ந்தான்.ஆக, சாதவாகனர்கள் காலத்து சுரங்க உருவாக்கம் இப்போதும் வாதாபியிலும் காஞ்சி மாநகரத்திலும் வாழையடி வாழையாகத் தொடர்கிறது! இதனால்தான் சுரங்கத்தைக் காணாமலேயே சாளுக்கிய மன்னர் அது இருக்கும் இடத்தை அரண்மனையில் இருந்தபடியே சொல்கிறார்... வரலாறும் சிற்பமும் கற்ற இந்த பாலகன் கணத்தில் அதன் வரைபடத்தை தன் மனக்கண்ணில் வரைந்திருக்கிறான்!
அநேகமாக இதேபோன்ற சுரங்கம் ஒன்றில் பலமுறை அவன் நடந்திருக்கவேண்டும். அதனால்தான் கால்கள் பழகியிருக்கிறது; இங்கும் தடுமாறாமல் நடக்க முடிகிறது.

காஞ்சிபுரத்துக்கு சமீபத்தில்தான் வந்திருக்கிறான். அப்படியானால் இந்த பாலகன் நடமாடிய சுரங்கம் வாதாபியில் இருக்க வேண்டும்! சாளுக்கிய மன்னரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அதனால்தான் மாற முடிந்திருக்கிறது.‘‘படிக்கட்டு வருகிறது வணிகரே..!’’ பாலகன் குரல் கொடுத்தான்.‘‘சொன்னவனிடமே சொல்கிறாயா?!’’‘‘ஒப்படைக்கப்பட்ட வழிகாட்டியின் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டாமா?!’’
சிரித்தான். சிரித்தார்கள். பரஸ்பர சந்தேகங்களுக்கு அப்பால் இருவருக்கும் இடையில் ஓர் இணக்கம் உருவாகியிருந்தது.

பந்தத்தை ஏந்தியபடி பாலகன் ஏற, கரிகாலன் பின்தொடர்ந்தான். ஏழு படிக்கட்டுகளுக்குப் பின் பாதை நேராகும். அரை காத தூரம் வரை எந்த வளைவும் நெளிவும் கிடையாது. பாதை குறுகலாக இருக்கும் என்பதால் ஒருவர் பின்னால்தான் மற்றவர் செல்ல முடியும். அருகருகில் நடக்க வாய்ப்பில்லை.‘‘தம்பி...’’ முதல்முறையாக உறவுமுறை சொல்லி கரிகாலன் அழைத்தான்.‘‘சொல்லுங்கள் அண்ணா!’’‘‘இருவருக்குமே பாதை தெரியும்...’’
‘‘ஆம்!’’‘‘முடியும் இடமும்!’’
‘‘...’’

‘‘என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதல்லவா..?’’‘‘தெளிவாக அண்ணா!’’‘‘பிறகென்ன..? வந்த வழியே திரும்பிவிடு!’’‘‘அங்கு ராமபுண்ய வல்லபர் காத்திருப்பார்! அவரிடம் சிக்க விரும்பவில்லை!’’‘‘மாளிகைக்கு வரத் தெரிந்த உனக்கு வெளியேறவும் வழி தெரிந்திருக்குமே! தவிர மாளிகையில் இருந்து மட்டும் சுரங்கம் தொடங்கவில்லையே!’’

‘‘ஆம்... இப்போது படிக்கட்டில் ஏறினோமே... அப்படி ஏறாமல் நேராகச் சென்றால் கடிகையை அடையலாம்!’’‘‘சிற்ப சாஸ்திரிதான்! ஒப்புக்கொள்கிறேன்! எனக்கு பந்தம் அவசியமில்லை. நீயே எடுத்துச் செல்!’’‘‘மன்னிக்க வேண்டும் அண்ணா! கோட்டைக்கு வெளியே தங்களை அனுப்பும் வரை உடன் இருக்கும்படி மன்னர் கட்டளையிட்டிருக்கிறார்! மீற முடியாது... தவிர கோட்டைக்கு வெளியே எனக்கும் வேலை இருக்கிறது..!’’

‘‘அதுவும் சாளுக்கிய...’’
‘‘மன்னரின் கட்டளையில்லை! சொந்த விஷயம்!’’அது என்ன என்று கரிகாலனும் கேட்கவில்லை. பாலகனும் சொல்லவில்லை. குறுகலான பாதையில் நடந்தார்கள். இடப்பக்கம் திரும்ப சில அடிகளே எடுத்துவைக்கவேண்டும். சட்டென்று கரிகாலன் தன் சுவாசத்தை இழுத்து முன்னால் சென்றுகொண்டிருந்த பாலகனின் கரங்களைப் பற்றினான்.

அந்தப் பற்றுதல் உணர்த்திய செய்தி பாலகனுக்கு புரிந்தது. எதுவும் பேசாமல் அதேநேரம் திரும்பியும் பார்க்காமல் அசையாமல் நின்றான். நெருங்கி அவன் செவியில் கரிகாலன் முணுமுணுத்தான். ‘‘சிற்ப சாஸ்திரத்தை ஸ்ரீராமபுண்ய வல்லபரும் கற்றிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிட்டோமே!’’சத்தம் வராமல் பாலகன் சிரித்தான்.

அதே மவுனப் புன்னகையை கரிகாலனும் எதிரொலித்தான்.நான்கு நயனங்களும் உரையாடின.பிறகு கரிகாலன் பழையபடி அவனை முன்னால் செல்லும்படி சைகை செய்தான்.ஆமோதிக்கும் வகையில் தலையசைத்த பாலகன், பந்தத்தை ஏந்தியபடி நடக்கத் தொடங்கினான்.‘‘இனிதான் அன்னம் உண்ண வேண்டுமா..?’’ குரலை உயர்த்தாமல் முன்பு போலவே கரிகாலன் பேச்சுக் கொடுத்தான்.

‘‘கடிகையில் பத்திய சமையல். அலுத்துவிட்டது. நாக்கும் செத்துவிட்டது. கோட்டைக்கு வெளியே தெரிந்தவரின் இல்லம் இருக்கிறது. இன்று அறுசுவை உணவு. வரச்சொல்லியிருக்கிறார்கள். அருந்தப் போகிறேன்...’’பாலகன் சொல்லி முடிக்கவும் இடப்பக்கம் பாதை திரும்பவும் சரியாக இருந்தது.பேச்சுக் கொடுத்தபடியே இதைக் கணக்கிட்டிருந்த கரிகாலன் உடனே செயலில் இறங்கினான்.

இப்படி நடக்கும் என்பதை ஏற்கனவே நயனங்களின் வழியே தெரியப்படுத்தி இருந்ததால் பாலகன் சட்டென்று சுவருடன் தன்னை ஒட்டிக்கொண்டபடி நின்றான்.இந்த அவகாசம் கரிகாலனுக்குப் போதுமானதாக இருந்தது. தன் கால் கட்டை விரல் இரண்டையும் தரையில் ஊன்றியவன், சுவாசத்தை இழுத்துப் பிடித்து ஓர் எம்பு எம்பினான்.

தன் வலது கை முஷ்டியை இறுக்கி திருப்பத்தை நோக்கி ஓங்கு ஒரு குத்துவிட்டான்!‘‘அம்மா..!’’ என்ற அலறல் சுரங்கத்தையே அதிர வைத்தது.
தாமதிக்கவேயில்லை.

குத்து வாங்கியவனை தன் ஒரு கையால் மேலே தூக்கி சுரங்கத்தின் கூரையில் மோதும்படி செய்தான். அத்துடன் தன் வலது காலை உயர்த்தி முன்னோக்கி உதைத்தான்.அங்கு மறைந்து நின்றிருந்தவன் இதை எதிர்பார்க்கவில்லை. கரிகாலனின் பாதம் தன் தொண்டையில் இடியென இறங்கியதும் சமாளிக்க முடியாமல் தரையில் சரிந்தான்.

கூரையில் மோதப்பட்டவனும் சுயநினைவை இழந்து கீழே விழுந்தான்.இருவருமே தங்கள் முகத்தை மறைக்கும்படி ஆடையைச் சுற்றியிருந்தார்கள்.பாலகன் குனிந்து அவர்களது நாடியைப் பரிசோதிக்கத் தொடங்கினான்.‘‘உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை தம்பி... மயக்கத்தில் இருக்கிறார்கள். தெளிய மூன்று நாழிகைகள் ஆகும்...’’ குனிந்து பார்க்காமல் சொன்ன கரிகாலனின் கண்கள் சுற்றிலும் ஆராய்ந்தன.

‘‘கணக்கிட்டு உதைத்திருக்கிறீர்கள்! நீங்கள் பாய்ந்த வேகத்தில் நியாயமாகப் பார்த்தால் இவர்களது உயிர் போயிருக்க வேண்டும்..!’’‘‘வேண்டாம் என்றுதான் அப்படிச் செய்யவில்லை...’’‘‘அண்ணா..! இவர்கள் சாளுக்கிய வீரர்கள் அல்ல!’’ மயங்கிக் கிடந்த இருவரது முகத்தையும் மறைத்திருந்த ஆடையை விலக்கிவிட்டு அந்தப் பாலகன் சொன்னான்.

‘‘தெரியும்! இன்னும் பலர் சுரங்கத்தைச் சுற்றி நம்மைச் சிறைப்பிடிக்கக் காத்திருக்கிறார்கள்!’’‘‘அறிவீர்களா..?’’‘‘ம்... சாளுக்கிய வீரர்களின் காலடி ஓசை வேறு மாதிரியாக இருக்கும்!’’‘‘அப்படியானால் இவர்கள்..?’’ பாலகன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.நிதானமாக அதற்கு கரிகாலன் அளித்த பதில் அந்த சுரங்கத்தையே நடுங்க வைத்தது!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்